

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம், விநாயகர் சிலையை நீரில் கரைப்பதோடு நிறைவடைகிறது. சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் வைத்து வழிபட்ட மண் சிலையைக் கடலிலோ, நீர்நிலைகளிலோ மக்கள் கரைப்பது வழக்கம். மக்களின் விருப்பங்களும் ரசனைகளும் மாற மாறச் சிலை உருவாக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. விநாயகர் சிலைகள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்டன. கண்ணைக் கவரும் தோற்றத்துக்காகச் சிலைக்கு வேதி வண்ணப்பூச்சு (பெயிண்ட்) பூசப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த வழக்கம் நீடித்ததை அடுத்து, வேதிப் பொருள்களால் நீர்நிலைகள் மாசடைவதாக விமர்சனங்கள் எழுந்தன.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பரப்புரைகளால் இந்த வழக்கம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாக ‘தி பாம்’ என்கிற தொண்டு நிறுவனம் (the palm charitable trust) ஒரு பணியை முன்னெடுத்துள்ளது. களிமண்ணில் செய்யப்பட்ட சிலையைக் கடலில் கரைக்காமல், மீண்டும் களிமண் ஆக்கி மறுபயன் பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு இந்நிறுவனம் வழிகாட்டுகிறது.
சென்னை காட்டுப் பாக்கத்தில் வசிக்கும் மாலினி கல்யாணம் 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய முயற்சி இது. சென்னையில் தேனாம் பேட்டை, தி.நகர் உள்பட ஐந்து இடங்களில் இவரது தொண்டு நிறுவனம் சிலைகளைப் பெறுகிறது.
காந்தியடிகளின் உதவியாளராகவும் விடுதலைப் போராட்டத் தியாகியுமாக இருந்தவர் கல்யாணம். மறைந்த கல்யாணத்தின் மகளான மாலினி, சிகிச்சையாளராக (தெரபிஸ்ட்) இருக்கிறார். உடல்நலச் சிக்கல்களுக்குக் களிமண் சிகிச்சை அளிப்பது இவரது வழிமுறைகளில் ஒன்று. களிமண்ணில் பாண்டங்கள் உள்ளிட்ட அழகுப் பொருள்கள் செய்யும் கலையிலும் இவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
“களிமண் அரிய பொருள் ஆகிவிட்டது. சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் களிமண் கிடைப்பது அரிது. குறிப்பாக, மண் பானை செய்வோர் களிமண்ணுக்காக ரொம்பவே சிரமப்படும் நிலை உள்ளது. சதுர்த்தி முடிந்து கடலில் சிலையைக் கரைக்கிற நடைமுறையில் ஒரு சிறு மாற்றத்தை ஏன் ஏற்படுத்தக் கூடாது என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது.
மண் சிலைகளை மீண்டும் கரைத்து மண்ணாக ஆக்கிவிட்டால், அது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும். அந்த மண்ணைப் பயன்படுத்தலாம். பானை செய்யும் தொழிலில் உள்ளோருக்குக் கொடுக்கலாம். எனவே, விநாயகர் சிலைகளைப் பெற்று மறுசுழற்சிக்கு உள்படுத்தும் செயல்பாட்டைத் தொடங்கினேன்.
இந்தப் பணியைத் தொடங்கிய முதல் ஆண்டில் 20 சிலைகள்தான் வந்தன. களிமண்ணின் முக்கியத்துவம் குறித்துச் சமூக வலைதளங்கள் வழியே தொடர்ந்து வலியுறுத்திவந்தேன். அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு ஏறக்குறைய 5,000 சிலைகள் வந்துள்ளன” எனக் கூறும் மாலினிக்கு வேலூர், பெங்களூரு போன்ற ஊர்களிலிருந்தும் சிலைகளைப் பெற்றுக்கொள்ள அழைப்புகள் வருகின்றன.
ஒவ்வொரு பகுதிக்கும் வாகனத்தில் போய் சிலைகளை எடுத்து வருமளவுக்கு இவரது தொண்டு நிறுவனத்திடம் கட்டமைப்பு வசதி இல்லை. “மண்ணையும் சூழலையும் பாதுகாக்கும் எங்கள் பணிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வு நிதியை அளிக்க முன்வந்தால், இன்னும் பரந்த அளவில் எங்கள் பணியைக் கொண்டுசெல்ல இயலும்” என்கிறார் மாலினி.