அறியப்படாத அற்புதத்தின் அதிவேக அழிவு

அறியப்படாத அற்புதத்தின் அதிவேக அழிவு
Updated on
3 min read

ரு தாய் திமிங்கலம் தன் இறந்த குட்டியின் உடலைப் பிரிய மனமில்லாமல் பல நாட்களாகச் சுமந்துகொண்டு வருந்துகிறது. இந்த இழப்பு அதன் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் பாதித்துள்ளது. கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக், குப்பையால் நீரின் நச்சுத்தன்மை அதிகமானதால் தாய்ப்பால் விஷமாக மாறிவிட்டதே குட்டியின் இறப்புக்குக் காரணம்.

உலகத் தொலைக்காட்சி வரலாற்றில், வெளிவந்து சில மாதங்களே ஆன பிரம்மாண்ட சூப்பர் ஹிட் தொடர் ‘தி புளூ பிளானட் 2: ஒன் ஓஷன் அண்ட் தி டீப்’ இந்தியாவில் சமீபத்தில் திரையிடப்பட்டது. பி.பி.சி. எர்த், சோனி நிறுவனங்களுடன் இணைந்து இதை சாத்தியப்படுத்திய பி.வி.ஆர். சினிமாஸ், சென்னையிலும் இப்படத்தைத் திரையிட்டது. ஆழ்கடலின் எட்டு கிலோமீட்டருக்குக் கீழே உள்ள பகுதிகளை ஆராயும் தொடர் இது. ஏழு பகுதிகளைக் கொண்ட இந்தத் தொடர் 1,406 நாட்கள் செலவிடப்பட்டு, 6 ஆயிரம் மணி நேரத்துக்கு மேலாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

டேவிட் அட்டன்பரோ! இயற்கை வரலாற்றுத் திரையுலகின் வாழும் மேதை. 60 ஆண்டுகளுக்கும் மேலாகக் காட்டுயிர்ப் பாதுகாப்புக் களத்தில் நிற்பவர். பிரிட்டனின் தேசியப் பொக்கிஷம் என்று போற்றப்படுபவர். இவர் வேறு யாருமல்ல. ‘காந்தி’ திரைப்படத்தை எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பிதான். கடந்த மே 8-ம் தேதி, டேவிட் அட்டன்பரோ 93-வது வயதில் காலடி எடுத்து வைத்தார். அவர் பிறந்தநாளில் இருந்து பத்து நாட்கள் கழித்து மே 18-ல் இத்திரைப்படம் வெளியானது.

கடலின் நடுவே மிதக்கும் பெரிய கப்பலின் முகப்பில் படத்தின் ஹீரோ சர் அட்டன்பரோ, ‘எல்லையே இல்லாத ஆச்சர்யங்களால் கடல்கள் நிறைந்துள்ளன. நம் பூமி 70% கடலால் சூழப்பட்டிருந்தாலும், மிகக் குறைவாகவே ஆராயப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் நம் கற்பனைக்கும் எட்டாத உயிரினங்களும் பல விந்தைகளும் புதைந்துள்ளன. இதில் என்ன நடக்கிறது என்பதையும் அவை சந்திக்கும் பிரச்சினைகளையும் தெரியப்படுத்த, இதைவிட ஒரு முக்கியத் தருணம் வேறு இருக்க முடியாது’ என்று பேசத் தொடங்கும் காட்சி நம்மைச் சிலிர்ப்பில் ஆழ்த்திவிடுகிறது.

ஆழ்கடலை ஆராய்வது என்பது விண்வெளியை ஆராயும் அளவுக்குச் சவால்கள் நிறைந்தது. செவ்வாய் கோளின் மேற்பரப்பைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பதைவிட, கடல்களின் ஆழத்தில் என்ன உள்ளது, என்ன நடக்கிறது என்பது பற்றித் தெரியாமல்தான் இருக்கிறோம். ஆனால், அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ஆழத்தில் நடப்பதைப் பற்றி அறிய வாய்ப்பு உள்ளது என்று அட்டன்பரோ கூறிக்கொண்டிருக்கும்போதே, அப்படிப்பட்ட கப்பல் ஒன்று கடலுக்குள் மூழ்குகிறது.

ஆழ்கடல் என்று குறிப்பிடப்படுவது கடலின் இருநூறு மீட்டர் ஆழத்தில் இருந்தே தொடங்குகிறது. கீழே செல்லச் செல்ல அழுத்தம் அதிவேகமாக அதிகரிக்கும். சூரிய வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, ஒரு நிலைக்குப் பின் வெளிச்சமற்றுப் போகும். அதேநேரம், உலகில் வேறு எந்த வாழிடத்திலும் இல்லாததைவிடவும் ஆழ்கடலில் உயிரினப் பன்மை செழித்திருக்கிறது.

கடலின் அற்புத அழகையும் பிரம்மாண்டத்தையும் காட்சிப்படுத்தியிருப்பது மட்டுமின்றி பிளாஸ்டிக், மற்ற மாசுகளின் தாக்கத்தையும் இத்தொடர் விளக்குகிறது. பல கோடி வருடங்களாகப் பெரிதும் மாறாதிருந்த கடல்களின் தன்மை, தற்போது அதிவேகமாக மாறி வருகிறது. ‘ஓவர் ஃபிஷ்ஷிங்’ எனப்படும் கட்டற்ற மீன்பிடித் தொழில், கடலின் மேற்பரப்பை துடைத்தெடுக்க, ‘ட்ராலர்கள்’ ஆழ்கடலைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. கணக்கில் அடங்காப் பவளத் திட்டுகள் உயிரற்றுப் போகின்றன. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 800 கோடி கிலோ குப்பையை பூமியில் வாழும் அனைவரும் சேர்த்து கடலில் கொட்டிக்கொண்டிருக்கிறோம்.

மேலே கூறப்பட்ட இறந்த திமிங்கிலக் குட்டியின் நிலை நமக்கும் ஏற்பட நீண்ட நாள் ஆகாது. இப்படிப் பல நாடுகளின் குப்பை ஒன்றுசேர்ந்து உயிர்களைக் கொல்லும்போது, ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை. நெஞ்சம் பதைபதைக்கிறது. நாளைய உலகில் நம் சந்ததிகள் பிறக்கும்போது வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் விஷமாக மாறியிருந்தால், மனித குலம் விரைவில் அற்றுத்தானே போகும்?

கேளிக்கைக்காகப் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் நாம், இதுபோன்று நம் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை உணரும்போதுதான், இன்னும் பிறக்காத தலைமுறைகளின் நலனைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவோம்!

கட்டுரையாளர், இயற்கை ஆர்வலர்
தொடர்புக்கு: enviroganeshwar@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in