

கு
ழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த உயிரினம் யானை. எனக்கும் பறவைகள், புலிகளுக்கு அடுத்தபடியாக அதிகம் பிடித்த உயிரினம் யானைதான். எத்தனை முறை படமெடுத்தாலும் அலுக்காத உயிரினம் யானை. ‘ஆசிய யானை’ இந்தியாவின் பெருமைகளில் ஒன்று
இந்தியாவில் யானைகளைப் பார்க்க சிறந்த இடம் உத்தரகண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசியப் பூங்காதான். இந்தக் காட்டில் உள்ள புல்வெளிகளுக்கு கோடை காலத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் வரும். யானைகளைப் பார்ப்பதற்காகவே ஒவ்வொரு கோடைக் காலத்திலும் கார்பெட் தேசியப் பூங்காவுக்குப் போவது வழக்கம்.
மோப்பம், தொடு உணர்வு அதிகம் கொண்டது யானை. தாய் யானை, குழந்தையின் உடலை அடிக்கடி தொட்டுக்கொண்டே இருக்கும். உணர்ச்சிப்பூர்வமானது, நினைவுத்திறன் அதிகம் கொண்டது.
குட்டியுடன் இருக்கும்போது தாய் யானை குட்டியைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்கும். அதேபோல, மதம் பிடித்த காலத்தில் ஆண் யானைசீற்றத்துடன் இருக்கும். மற்றபடி யானைகள் மிகவும் நட்பான உயிரினம்தான்.
கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் ஜிம் கார்பெட் சரணாலயத்துக்குப் போயிருந்தோம். அப்போது அம்மா, குட்டி கொண்ட மந்தை ஒன்று வந்தது. பக்கத்தில் வரட்டும், படமெடுக்கலாம் என்று காத்திருந்தோம். திடீரென குட்டி யானை கீழே படுத்துக்கொண்டது. அதற்கு ஏதும் அடிபட்டுவிட்டதோ என்று எங்களுக்குச் சந்தேகம். ஆனால், அந்தக் குட்டி தூங்கியிருந்தது.
தூக்கத்தில் உள்ள மனிதக் குழந்தைகயை மெதுவாக எழுப்புவதுபோல, அம்மாவும் மற்ற யானைகளும் அந்தக் குட்டியை மெதுவாக எழுப்பி கூட்டிப் போயின. மனிதக் குழந்தைகளைப் போலவே குட்டி யானைகளும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எந்த இடமென்றாலும் தூங்கிவிடும் பண்பைக் கொண்டவை என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டோம்.
கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com