சென்னையின் இயற்கை வளத்துக்கு ஆத்மார்த்தமான ஒரு சமர்ப்பணம்

சென்னையின் இயற்கை வளத்துக்கு ஆத்மார்த்தமான ஒரு சமர்ப்பணம்
Updated on
1 min read

சென்னை மாதம் அனுசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சென்னையின் இயற்கை குறித்த தற்காலச் சூழலை ஆவணப்படுத்தும் மாறுபட்ட முயற்சிகளில் ஒன்று சென்னையைச் சேர்ந்த யுவன் ஏவ்ஸ் எழுதியுள்ள 'இன்டர்டைடல்' என்கிற நூல்.

சென்னையை ஒரு பெருநகரமாகவும் பொருளாதார வசதியைத் தரும் நகரமாகவும் மட்டுமே நம்மில் பெரும்பாலோர் காண்கிறோம். உண்மையில் சென்னை மிகப் பழமையான ஒரு துறைமுக நகரம். அத்துடன் நன்னீரும் கடல் நீரும் கலக்கும் சதுப்புநிலங்கள் என்கிற பிரத்யேக உயிர்ச்சூழலை ஒரு காலத்தில் கொண்டிருந்த நகரமும்கூட.

இந்த இரண்டு அம்சங்கள் சார்ந்து தனது நேரடி அனுபவங்களையும் இயற்கை அறிவியல் தகவல்களையும் மரபு அறிவையும் ஊடுபாவாக நெய்திருக்கிறார் யுவன். இயற்கை என்பது உடல், உள நலனை மீட்டெடுக்கும் மிகப்பெரிய மருந்து என்று கூறும் யுவன், ஒவ்வோர் அத்தியாயத்தையும் மிக நுணுக்கமான விவரணைகளுடன் எழுதியிருக்கிறார்.

இயற்கையை அவதானிப்பதை தியானம் என்று அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், அதை ஒவ்வோர் அத்தியாயத்திலும் யுவன் நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார். தியானம் என்பதற்கான மரபு அர்த்தத்தைத் தகர்த்து, இது புதிய வெளிச்சத்தைத் தருகிறது.

காலநிலை மாற்றம் விரைவடைந்துவரும் பின்னணியில் சென்னை போன்ற பெருநகரத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் உயிரினங்கள், அவற்றுக்கிடையிலான நெருக்கமானபிணைப்பு குறித்த ஆத்மார்த்தமான வெளிப்பாடாக இருக்கும் இந்தப் பதிவுகள், எஞ்சியிருக்கும் இயற்கை அம்சங்களையாவது காப்பாற்றி ஆகவேண்டுமே என்கிற மனஉந்துதலை ஏற்படுத்துகின்றன.

சென்னையில் பல்லுயிர் இயற்கைக் கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையை நடத்தித் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் யுவன், எழுத்து வழியாக சென்னையின் இயற்கையைப் போற்றியுள்ள இந்த நூல், வாசிப்பவர் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.

Intertidal: A Coast and Marsh Diary
Kindle Edition Yuvan Aves
Bloomsbury India

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in