கூடு திரும்புதல் - 16: காலநிலை இலக்கியங்கள்

கூடு திரும்புதல் - 16: காலநிலை இலக்கியங்கள்
Updated on
4 min read

இரண்டு நூற்றாண்டு காலமாக மேலை நாட்டு எழுத்தாளர்கள் பிறழ் உலகின் சமூக அவலங்களைப் புனைவுகளாக்கி வருகின்றனர். மேரி ஷெல்லியின் ‘கடைசி மனிதன்’, ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘துணிவுமிகும் புதிய உலகு’, ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984’ போன்றவை புகழ்பெற்ற பதிவுகள். தொடர்ந்து, சாரா டேவிஸ் கோஃபின் ‘கடைசியில் உயிர் மீந்திருப்பவர்கள்’, சூ ரெய்ன்ஃபோர்ட்டின் ‘மேலும் சிவப்பேறும் நாள்கள்’ போன்ற புனைவுகள் கவனம் பெற்றன.

மேலை நாட்டுப் புனைவுகள்: சூழலியல் சீர்குலைவையும் காலநிலை பிறழ்வையும் மையப் படுத்தும் புனைவிலக்கியங்கள் மேலைநாடுகளில் ஏராளம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் கிளெய்ர் அர்மிஸ்டெட் எழுதிய, ‘உலகைக் காப்பாற்றும் கதைகள்: காலநிலை புனைவுகளின் புதிய அலை’ என்கிற கட்டுரையை வாசித்தேன். இப்பொருண்மை குறித்துக் கடந்த இரண்டு பதிற்றாண்டுகளில் வெளிவந்த மேலைநாட்டுப் புனைவுகளைக் கறாராக மதிப்பீடு செய்கிறது இந்தக் கட்டுரை. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றின் பெயர்களை இங்கு குறிப்பிடுகிறேன்:

பெதனி கிளிஃப்ட்
பெதனி கிளிஃப்ட்

பெருவெள்ளத்தின் ஆண்டு, பணிப்பெண்ணின் கதை (மார்கரெட் அட்வுட்); கவிகை அடுக்கு (ரிச்சர்ட் பவர்ஸ்); கடைசி வலசை (சார்லஸ் மெகொனகி), வரிசை (நியால் போளர்க்), கோடை நீர் (சாரா மாஸ்), நாம் காண முடியாத அத்தனை ஒளியும், மேக குயில் தீவு (ஆண்டனி டோயர்); வாத்துகள் (லூசி எல்மன்), பாடும் பறவை சாலமான்டர் (ஜெஃப் வாண்டர்மீர்), சூரியனுக்குக் கீழே புதிதாக ஏதோ (அலெக்சாண்ட்ரா கிளீமன்), கரையொதுங்குதல் (கேட் சாயர்), விருந்தில் கடைசி ஆள் (பெதனி கிளிஃப்ட்), மலைமேல் வீடு (ஜெசி கிரீன்கிராஸ்), துப்பாக்கித் தீவு, பெரும் சீர்குலைவு: காலநிலை மாற்றமும் நினைத்துப் பார்க்க இயலாததும், நட்மெக்கின் சாபம்: நெருக்கடியில் சிக்குண்டிருக்கும் உலகுக்கான புதிய கதைகள் (அமிதாவ் கோஷ்). இவற்றில் ஒரு சில புதினங்களைப் பற்றிப் பார்க்கலாம்:

ரிச்சர்ட் பவர்ஸ்
ரிச்சர்ட் பவர்ஸ்

வரிசை: தலைமுறை தலைமுறையாக, இலக்கின்றி ஒரு நெடும் வரிசையில் நின்றுகொண்டிருக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள் திரளின் வாழ்க்கை அவலத்தை முன்வைக்கிறது, நியால் பௌர்க்கின் ‘வரிசை’ என்கிற புதினம். நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கை முழுவதும் ஏதோவோர் எதிர்பார்ப்பில், ஏதோவொரு வரிசையில் நின்று கொண்டிருப்பவர்களே.

நியால் போர்க்
நியால் போர்க்

“இறந்த பிறகு எனக்கு என்ன நிகழும்? சிதைந்து வளியாவேன், அவ்வளவுதான். நம் வாழ்வு வெறும் தலைமுறைச் சுழற்சி. விலங்குகள்போல, எதன் கவனத்தையும் ஈர்க்க முடியாத சிறு பொறியாக மறைந்துவிடுவோம். விலங்குகளைவிட எவ்வகையிலும் நான் மதிப்பு மிகுந்தவன் அல்லன், மற்றெந்த உயிரியையும்விட முக்கியமானவன் அல்லன். சுயத்தை முன்னிலைப்படுத்தி, சுயத்தின் அர்த்தம் தேடி ஓடுகிற பரபரப்பில் நமக்கு வாழ்வளித்த புவிக்கோளை சக உயிர்களுடன் பகிர்ந்துகொள்ள மறந்துவிட்டோம்.” - ஒரு நேர்காணலில் நியால் போர்க் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

விருந்தில் கடைசி ஆள்: நாம் வாழுகிற வாழ்க்கை நாம் விரும்பியபடிதான் அமைந்திருக்கிறதா? நமக்குள் இந்தக் கேள்வியை எழுப்பிச் செல்கிறது பெதனி கிளிஃப்ட்டின் ‘விருந்தில் கடைசி ஆள்’.

நவம்பர் 2023இல் மனித இனம் 6டிஎம் என்கிற நுண்மியால் மொத்தமாகத் துடைத்து எறியப்படுகிறது. அந்த நுண்மி புகுந்துவிட்ட மனித உடல் ஆறே நாள்களில் அழிந்துவிடும். ஆனால் ஒரேயொருவர் பிழைத்திருக்கிறார். எரியும் நகரங்களில் அழுகும் பிணங்களும் அங்குமிங்கும் ஓடும் எலிகளுக்கிடையில் மீந்திருக்கும் ஒரு பெண். மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தனது ஆசைகளைச் சமரசம் செய்து கொண்டும், தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டும் வாழ்ந்து பழகியவள்.

அவளது வேலை, அவளது உறவுகள் முதல், அவள் எதை உடுத்த வேண்டும், எங்கே தங்கியிருக்க வேண்டும் என்பது வரை மற்றவர்களின் விருப்புக்கு ஏற்ப அமைத்துக்கொண்டவள். மனிதர்களற்ற இந்தச் சூழலில் அவள் யாராக இருக்கப் போகிறாள்? பெருந்தொற்று, சூழலியல் சிதைவு, காலநிலை பிறழ்வு என்பவற்றின் பின்னணியில் இந்தக் கேள்வி நமக்குள் விசுவரூபம் கொள்வதை உணர முடியும்.

கவிகை அடுக்கு: ரிச்சர்ட் பவர்ஸின் பன்னிரண்டாவது நாவலான கவிகை அடுக்கு, காடழிப்புக்கு எதிராக ஒருங்கிணையும் ஒன்பது அமெரிக்கர்களைப் பற்றியது. அப்படி ஒருங்கிணைவதற்கு அந்த ஒன்பது பேருக்கும் கிடைத்த தனித்தனியான, தனித்துவமான அனுபவங்களே நாவலின் பிழிவு. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கற்பித்துக்கொண்டிருந்த நாள்களில் காண நேரிட்ட ராட்சத செம்மரங்கள் இந்தப் புனைவுக்கான பொறியாக அமைந்ததாகச் சொல்கிறார் பவர்ஸ்.

அதன் மையக் கதாபாத்திரமான பட்ரீசியா வெ ட்ஃபோர்டு, வனச் சூழலியலாளரான சுசேன் சிமார்ட்டின் வாழ்வும் பணியும் ஏற்படுத்திய தாக்கம். இயற்கை உலகுக்கே உரிய செயல்பாட்டு வீரியத்தின் வெளிப்பாடாக வரும் இந்தப் புனைவு, வேர் முதல் உச்சாணி வரை, அங்கிருந்து மீண்டும் விதைக்கு. அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு முந்தைய நியூ யார்க் தொடங்கி, வடமேற்கு பசிபிக்கின் இருபதாம் நூற்றாண்டு வெட்டுமரப் போர் வரை விரியும் கதைகளை, முதிர்ந்த விருட்சத்தின் ஆண்டு வளையம்போலச் செறிவாகக் கட்டமைக்கிறது.

நம் உலகத்தின் கூடவே இன்னோர் உலகம் இருக்கிறது - பரந்த, மெதுவான, பரஸ்பரத் தொடர்புள்ள, வளம் மிகுந்த, அபாரப் படைப்பாற்றல் கொண்ட, நமக்கு அவ்வளவு எளிதில் புலப்படாத உலகம். இந்த உலகத்தைப் பார்க்கக் கற்றுக் கொள்ளும், அந்த உலகுக்குள் விரியும் பெரும் பேரிடரை நெருங்கிச் சென்று பார்க்கும், சில மனிதர்களின் கதை.

உலகைக் களைந்துவிட்டு வா: ஏராளமான பசுமை நாவல்கள் திரைப் படங்களாக வந்துகொண்டிருக்கின்றன. ‘உலகைக் களைந்துவிட்டு வா’ அவற்றுள் ஒன்று. அந்தத் திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒருவரான ஜார்ஜ், ஓரிடத்தில் சொல்கிறார், “பெரும் இழப்பிலிருந்துகூட பாடம் கற்றுக்கொள்ள விரும்பாத மனிதனைப் போல வேறொன்றும் எனக்கு அவ்வளவு அச்சம் தருவதில்லை”.

சுற்றுச்சூழல் சிதைவையும் காலநிலைப் பிறழ்வையும் மனிதர்கள் அலட்சியப்படுத்தும் நிலையை, இந்தப் போக்கினால் என்ன நேரப்போகிறது என்பதை, இதைவிட நறுக்கென்று சொல்லிவிட முடியாது. ஜார்ஜின் அந்த ஒற்றை வாக்கியம் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

- vareeth2021@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in