

ப
னைத் தொழிலாளியின் முதன்மையான தொழில், வாழ்க்கை பனையைச் சார்ந்தே இருக்கும். ஆனால், பனைத் தொழிலின் காலம் ஆறு முதல் ஒன்பது மாதங்கள்வரை மட்டுமே. எஞ்சிய நேரத்தைப் பனையேறிகள் எப்படிச் செலவிட்டார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணம் ‘வட்டி’ அல்லது ‘றாவட்டி’.
வட்டி என்றால் ஐஸ்கிரீம் கோன் போன்ற வடிவில் இருக்கும் மிகப் பெரிய ஓலைப்பெட்டி. இவ்விதமான பின்னல் முறை மிகவும் தொன்மையானது. பழங்குடியினரிடம் காணப்படும் பின்னல்களுக்கு நிகரானது. சுமார் 10 முதல் 15 லிட்டர் நீர் கொள்ளளவு கொண்ட ஒரு கலம். இக்கலத்தின் விளிம்புகள் உறுதியாக இருப்பதற்கு மட்டையைக் கட்டிவிடுவார்கள். அப்படியே, பனை நார் கொண்டு வட்டியை ‘பொத்துவதும்’ உண்டு. நார் கொண்டு பொத்தும்போது அதன் உழைப்புத் திறன் அதிகமாகிறது. வட்டியின் இரு முனைகளையும் இணைக்கும் பனை நார்க்கயிறும் உண்டு.
பனை ஓலைப் பொருட்களில் நெடுங்காலமாகப் பயன்பாட்டில் இருந்ததும், பார்வைக்கு அழகானதும், திறமைக்குச் சவாலானதும் வட்டிதான். வட்டி பின்னுவது என்பது மட்டுமல்ல, வட்டிப் பயன்பாடும் நமது மண்ணை விட்டு அகன்று கால் நூற்றாண்டு ஆகிறது.
வட்டியின் இருபுறமும் நீண்ட இரு தென்னை நார்க்கயிறுகள் இருக்கும். இக்கயிறுகளை இருபுறமாக இருவர் பற்றிக்கொண்டு, தாழ்விடத்திலிருந்து இசைவாகத் தங்கள் பயிர்களுக்குத் தண்ணீரைப் பாய்ச்சப் பயன்படுத்தப்படுவதுதான் வட்டியின் வேலை.
இதன் ஒற்றைப்படையான பங்களிப்பு, நவீன வேளாண் கருவிகளின் வரவு போன்ற காரணங்களால், நாளடைவில் இது பயனற்றதாகிவிட்டது. மேலும் இதை முடைவது மிகவும் நுணுக்கம் நிறைந்த பணி என்பதால் இதை முடையத் தெரிந்தவர்கள் அருகிவிட்டனர். ஆனால் மலர்ச்செண்டு அமைப்பாளர்கள், இவற்றை இன்று பயன்படுத்த ஆரம்பித்தால், ‘வட்டி’க்கு மீண்டும் புது வாழ்வு கிடைக்கும். இதை முடையத் தெரிந்தவர் எனக்குத் தெரிந்தவரையில் குமரி மாவட்டத்தைச் சார்ந்த தங்கப்பன் (95782 61900) மட்டும்தான்.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com