

கு
ழந்தைகள் ஒளிந்திருந்து பார்ப்பதுபோல், மரப்பொந்துக்குள் இருந்து ஆந்தைகள் எட்டி பார்ப்பதும் சுவாரசியமாக இருக்கும். உடம்பு உள்ளே இருக்க தலையை மட்டும் வெளியே நீட்டி அவை பார்க்கும். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இந்தப் பறவை ஒவ்வொரு பாவனையைக் கொண்டிருக்கும். பார்க்கப் பார்க்க அலுக்காத ஒரு பறவை.
புள்ளி ஆந்தை (Spotted Owlet) ஒரு சிறு பறவை. நாடு முழுக்கத் தென்படும் இந்தப் பறவை திறந்தவெளிக் காடுகள், மக்கள் வாழுமிடங்கள், வீட்டுத் தோட்டங்களில் காணப்படும். மரப்பொந்துகளில் வாழும். ஆணும் பெண்ணும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். நவம்பர் - ஏப்ரல் மாதங்கள் இதன் இனப்பெருக்க காலம். பொதுவாக மூன்று முட்டைகள் இட்டு குஞ்சு பொரிக்கும்.
எலிதான் இதற்குப் பிடித்த, முதன்மையான உணவு.
வயல்கள், தோட்டங்களில் எலிகள் அதிகம் இருக்கும் என்பதால், அவற்றுக்கு அருகில் உள்ள மரப்பொந்துகளில் கூடமைக்கும். எலிகள் எளிதாகக் கிடைக்கும் என்பதுதான் இதற்கு அடிப்படைக் காரணம்.
இரவில் சுறுசுறுப்பாகச் செயல்படும் இரவாடி. பகலில் தூங்கிக்கொண்டே இருக்கும் என்று சொல்ல முடியாது. மரப்பொந்துகளில் உட்கார்ந்தபடி பாதிக் கண்கள் மூடி அரைத்தூக்க நிலையில் இருப்பது போலிருக்கும். அது தூக்கமில்லை என்பதற்கு அறிகுறி, அதன் எச்சரிக்கைத் தன்மை. சிறு சத்தத்துக்கும் சட்டென்று விழித்துப் பார்க்கும். ஒவ்வொரு முறையும் நன்கு உற்று பார்க்கும்.
'ஆந்தை மாதிரி முழிக்காதே' என்பார்கள். நன்கு விழித்துப் பார்ப்பதுதான் இதன் சிறப்பு. மஞ்சள் வெளிவட்டத்துக்குள் இருக்கும் அதன் கருவிழிகள் அழகு. பெரிய வட்ட வடிவத்தில் இருக்கும் கண்களை உருட்டி உருட்டி அது பார்க்கும் அழகே தனி. ஆந்தையின் கண்கள் பார்ப்பதற்கு கோளம் போலிருந்தாலும், அவை கோள வடிவமல்ல. கண்ணிலிருந்து காதுவரை நீண்டதொரு குழாய் வடிவத்தில் இருக்கும் என்கிறார்கள்.
இதன் காரணமாக ஆந்தைகளால் கண்ணை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்ப முடியாது. அதனால் தலையையே முழுமையாகத் திருப்பியும் சுற்றியும் பார்க்கும். அதேபோல தலையை மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக நடன அசைவுபோல ஆட்டி ஆட்டிப் பார்க்கும். புள்ளி ஆந்தைகள் அதிகபட்சமாக 270 டிகிரி வரை தலையைத் திருப்பும் திறன் கொண்டவை. ஒரு பொருளை பல கோணங்களில் உள்வாங்கும்.
ஹரியாணா மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் பறவைகள் சரணாலயத்துக்கு குளிர்காலத்தில் ஒரு முறை சென்றிருந்தேன். அப்போது உடலை கதகதப்பாக்கிக் கொள்ள வெயில் காய்வதற்காக பகலிலேயே வெளியில் உட்கார்ந்திருந்தது ஒரு புள்ளி ஆந்தை. அது என்னைப் பார்த்தவுடன் தலையை மேலும் கீழும் ஆட்டி ஆட்டி பார்த்தது, வணக்கம் சொல்லி வரவேற்பதைப் போலிருந்தது. அதை நான் எடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் அப்போது வைரலானது.
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் சுல்தான்பூர் பறவை சரணாலயத்தில் சுவாரசியமான மற்றொரு காட்சியைப் பார்க்க முடிந்தது. ஒரு டிசம்பர் குளிரில் இரண்டு ஆந்தைகள் அருகருகே வெளியே உட்கார்ந்திருந்தன. நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே, ஒரு ஆந்தை மற்றொன்றின் இறகுகளைக் கோதி சிக்கெடுக்க ஆரம்பித்தது. ஆங்கிலத்தில் இதை Preening என்பார்கள். தொலைவிலிருந்து அதைப் பார்ப்பதற்கு கொஞ்சிக் குலாவுவது போலிருந்தது. அது மறக்க முடியாத காட்சி.
நான் எடுத்த புள்ளி ஆந்தை வீடியோவைக் காண: https://bit.ly/2L4ACVY
கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com