

ந
ம் உணவுக்கு ஆதாரமாகத் திகழும் உழவர்கள் அண்மைக்காலமாகச் சந்தித்துவரும் சிக்கல்கள் உலகறிந்த உண்மை. அந்தச் சிக்கல்கள் தொடருமானால் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த நாடே பெரும் பஞ்சத்துக்கு ஆட்படுவதற்கான சாத்தியம் உள்ளது. அது தண்ணீர்ப் பஞ்சமல்ல, நாட்டில் உழவர்களே இல்லாமல் போகும் பஞ்சம்தான்.
போதுமான வருமானம் இல்லாமையும் கடன் தொல்லையுமே இதற்கு அடிப்படைக் காரணம். அத்துடன் வேளாண் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் வெவ்வேறு வேலைகளுக்குச் அனுப்பப்படுவதும், பல உழவர்கள் நிலத்தை விற்றுவிட்டு வேறு வேலைக்குச் செல்வதும் மிகச் சாதாரணமாகிவிட்டது.
இது வெறும் வேளாண் தொழில் சார்ந்த பிரச்சினையென்று எளிதாகக் கடந்து செல்ல முடியாது. ஏனென்றால், உழவே உலகுக்கு உணவளிக்கிறது. உலகின் மிகப் பெரும் வேளாண் நாடான நம் நாட்டில் சமீப காலமாக உழவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில பத்தாண்டுகளாகப் பல இடங்களில் கேட்டுக்கொண்டிருந்த கூக்குரல்களும் நடந்தேறிய போராட்டங்களும் ஒரு தேசிய பிரச்சினையாக 2017-ல் உருவெடுத்து நாடு தழுவிய போராட்டமாக மாறியுள்ளது.
இதுவரை இப்படிப்பட்ட போராட்டங்கள் பரவலாக நடைபெற்றதில்லை. தமிழகம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், கர்நாடகம், பஞ்சாப் முதலான மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். தமிழ்நாட்டு உழவர்களின் போராட்டக் கதையை டெல்லி ஜந்தர்-மந்தர் கண்ணீர் மல்க சொல்லும். வேளாண் கடனுடன் நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி விவகாரம் எனப் பல்வேறு கூடுதல் சிக்கல்களைத் தமிழக உழவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
வயலில் ஒரு பயிரை விளைவித்து அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வருவதுவரை எதுவும் நிச்சயமில்லை. வறட்சி, கடும் மழை, வெள்ளம், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற இயற்கைப் பேரிடர்கள், உரம், பூச்சிக்கொல்லிகள், கால்நடைத் தீவனம் என மிதமிஞ்சிய இடுபொருள் செலவுகள் உழவர்களுக்குக் கடுமையான நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றன. இப்படிப்பட்ட தருணங்களில் எந்தப் பின்புலமும் இல்லாமல், நிலத்தை மட்டுமே நம்பி வாழும் ஒரு சாதாரண உழவரால் என்ன செய்துவிட முடியும்?
கையிருப்புத் தொகை, நகை, வங்கிக் கடன் மூலம் வேளாண்மை செய்வார்கள். அங்கிருந்துதான் சிக்கல் தொடங்குகிறது, கடன் வாங்கி வேளாண்மை செய்யும்போது மீண்டும் இயற்கைப் பேரிடர் தாக்குதலோ போதுமான வருமானம் இல்லாத சூழ்நிலையோ ஏற்படலாம். அப்போது கடன் தொகையைத் திருப்பி செலுத்த முடியாமல் போகிறது. அதைச் சமாளிக்க கடனுக்கு மேல் கடன், நிலத்தை விற்றுவிடுவதுவரை நிலைமை மோசமடைகிறது.
நிலம் பொய்க்கும்போது, உழவர்கள் பொய்த்துப் போவதும் நடக்கிறது. ஆண்டுதோறும் உழவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி 2013-ம் ஆண்டு 11,772 பேர், 2014-ம் ஆண்டு 12,360 பேர், 2015-ம் ஆண்டு 12,602 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள், இன்னும் 2016-17-ம் ஆண்டுகளிலும் மேலும் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சரி, இதற்குத் தீர்வுதான் என்ன?உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு அவர்களே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதுதான் இதற்கான தீர்வாக அமையும். இந்த வகையில் உழவர்களுக்கான சட்ட முன்வரைவை அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கியுள்ளது.
உழவர்களின் தொடர் போரட்டங்களின் விளைவாக 130 உழவர் இயக்கங்கள் ஒன்றிணைந்து, அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவை (AIKSCC) உருவாக்கியுள்ளன.
முதல் மசோதாவின்படி, நிலுவையிலுள்ள அனைத்து வேளாண் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் கடன் பிரச்சினை வராமல் இருப்பதற்கு ‘உழவர்களின் கடன் நிவாரணத்துக்கான ஆணையம்’ அமைக்கப்பட வேண்டும். தேசிய உழவர்கள் ஆணையத்தில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைவராகவும், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேர், உழவர் பிரதிநிதிகள் நான்கு பேர், துறை சார் நிபுணர்கள் இரண்டு பேர், பொருளாதார /கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் ஒன்பது பேரைக் கொண்ட ஆணையம் செயல்பட வேண்டும்.
இரண்டாவது மசோதாவின்படி அனைத்து விளை பொருட்களுக்கும் நிலையான விலை உறுதிசெய்யப்பட வேண்டும், உழைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ள உழவர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக (MSP) 50% கிடைக்கும்படி வழிவகுக்க வேண்டும்.
2017 நவம்பர் 20, 21-ம் தேதிகளில் டெல்லி நாடாளுமன்ற வீதியில் லட்சக்கணக்கான உழவர்கள் கூடிய ‘உழவர்களின் நாடாளுமன்றம்’ நடத்தப்பட்டது. அந்த மாதிரி நாடாளுமன்றத்தில் இந்த இரண்டு சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. 2018 மே 10-ம் தேதி நாடெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில், அகில இந்திய உழவர்கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு இச்சட்ட முன்வரைவுக்கான கோரிக்கையை மாவட்ட ஆட்சியர்களிடம் அளித்தது. தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இது நடந்தது.
முழு நிவாரணம், வேளாண் விளைபொருட்களுக்கு உறுதி செய்யப்பட்ட லாபகரமான விலை ஆகியவற்றை வலியுறுத்தும் இந்த இரு தனிநபர் மசோதாக்களைக் கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கே.கே.ராகேஷ், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ராஜு ஷெட்டி ஆகியோர் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.
இந்தச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), சிவசேனா உட்பட 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் சிறு, குறு உழவர்கள், பழங்குடி உழவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், பால் உற்பத்தியாளர்கள் என வேளாண் சார்ந்த தொழில் செய்யும் அனைவரும் பயனடைவார்கள். ஆனால், அது நடப்பது ஆட்சியாளர்கள் கையில்தான் இருக்கிறது. உழவர்களின் கோரிக்கைகளை இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்துவரும் மத்திய ஆட்சி, அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையிலாவது அவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைக்குச் செவி சாய்க்குமா?
கட்டுரையாளர் தொடர்புக்கு: sivasivasankar00@gmail.com