

சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம் புதிதாக இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார். ‘பூச்சிகளின் தேசம்' நூல் மூலமாக நம்மைச் சுற்றி வாழும் பூச்சிகளைப் பற்றி ஏற்கெனவே அறிமுகம் செய்திருந்தார். தற்போது 'எறும்புகளின் வரிசை கலைகிறது' என்கிற பெயரில் எறும்புகளைப் பற்றிய ஓர் அறிமுக நூலை எழுதியிருக்கிறார்.
இதில் எறும்புகள் வாழும் முறை, இனப்பெருக்கம், கூட்டு வாழ்க்கைப் பொறுப்புகள், அவற்றின் தனித்துவம் போன்ற பல்வேறு விஷயங்களை விளக்கி எழுதியுள்ளார். நம் வீட்டில் எளிதில் காணக்கூடிய சிற்றுயிராக இருந்தாலும், எறும்புகளைப் பெரிதாக நாம் சட்டை செய்வதில்லை.
எறும்புகள் சிற்றுயிர்களாக இருந்தாலும் உயிரின உலகத்துக்கும், பூவுலகுக்கும் அளித்துவரும் பங்களிப்பு மிகப் பெரிது. இந்த நூலைப் படித்தால் எறும்புகள் பற்றி நாம் அறியாத இன்னும் பல புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இயற்கையை நெருங்கிப் பார்க்கும் ஆர்வம் அதிகரித்துவருகிறது. தங்களைச் சுற்றி இருக்கும் பறவைகள், பாலூட்டிகள், பூச்சிகள், தாவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் மக்கள் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
அதிலும் குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். தொடர்ச்சியாகச் சிலர் சிறு குழுவாகக் காடுகளுக்குப் பயணம் சென்று அங்கிருக்கும் இயற்கை, உயிரினப் பன்மை, காட்டுயிர்கள் குறித்து அறிந்துகொண்டும் வருகிறார்கள்.
இப்படிக் காட்டை அறிவதற்காகச் சென்ற பயணங்களை அடிப்படையாகக் கொண்டு 'காடறிதல்' என்கிற நூலை கோவை சதாசிவம் எழுதியுள்ளார். காடறிதலின் தேவை, காடறிதலின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள், காட்டுயிர்களின் முக்கியத்துவம், காட்டுயிர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது.
எறும்புகளின் வரிசை கலைகிறது; காடறிதல்
- இரண்டு நூல்கள்
எழுதியவர்: கோவை சதாசிவம்
வெளியீடு: குறிஞ்சி பதிப்பகம்
தொடர்புக்கு: 91 99650 75221