

பி
ளாஸ்டிக் பொருட்கள், சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்களுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. புவி வெப்பமயமாதல் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்கும் உலக நாடுகள், பிளாஸ்டிக் பயன்பட்டைக் குறைப்பதிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என சூழலியலாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதிதான், ‘பிளாஸ்டிக் திமிங்கலம்!’
பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட சுமார் 10 மீட்டர் நீளமுள்ள இந்தத் திமிங்கலம், ரோம் நகரில் சமீபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. சுமார் 250 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு இந்த திமிங்கலம் ‘பிறந்ததற்கு’ ஒரு அதிர்ச்சிகரமான காரணம் உண்டு. உலகெங்கும் ஒரு விநாடிக்கு 250 கிலோ பிளாஸ்டிக் குப்பை கடலில் கலக்கிறது என்பதுதான் அது! இதை உணர்த்தவே அதே எடையில் ‘பிளாஸ்டிகஸ்’ எனப் பெயரிடப்பட்ட இந்த பிளாஸ்டிக் திமிங்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த ‘ஸ்கை’ என்ற நிறுவனம், பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த இப்படியொரு யோசனையுடன் வந்திருக்கிறது. 2016-ம் ஆண்டு பிரிட்டனின் 12 நகரங்களுக்குப் பிரசார பயணம் செய்த இந்த பிளாஸ்டிகஸ் திமிங்கலத்துக்கு, என்ன பெயர் வைக்கலாம் என்ற போட்டியும்கூட நடத்தப்பட்டது.
அதற்குக் கிடைத்த வரவேற்பு, உலகில் உள்ள இதர சுற்றுச்சூழல் அமைப்புகளையும் ஈர்த்துள்ளது. விளைவு… அதேபோன்ற திமிங்கலத்தை உருவாக்கி, பூமி தினம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் அவை காட்சிப்படுத்தி வருகின்றன.
லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற இடத்திலும் இந்த பிளாஸ்டிகஸ் காட்சிப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இதேபோன்ற கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் குறித்து வேல்ஸ் இளவரசரும் இங்கிலாந்தின் மன்னராகத் தேர்வு செய்யப்பட உள்ள சார்லஸும் பேசியிருந்தனர்.
உலகுக்கு ஒரு பிளாஸ்டிகஸ் திமிங்கலம் போதும். நிஜ திமிங்கலங்கள் நெகிழி இல்லாத கடலில் நீந்தட்டும்!