

ஆ
ங்கிலத்தில் ‘ஓரியண்டல் டார்ட்டர்’ என்று அழைக்கப்படும் இந்தப் பறவையின் தமிழ்ப் பெயர், ‘பாம்புத்தாரா’. வளைந்து, நெளிந்து செல்லும் பாம்பைப் போல, இதனுடைய கழுத்து இருக்கும். நீரில் இது மீன் பிடிக்கச் செல்லும்போது, உடல் முழுவதும் நீருக்கடியில் இருக்க, கழுத்து மட்டும் நீருக்கு மேலே இருக்கும். அது நீந்திச் செல்லும்போது, நீரில் பாம்பு ஒன்று செல்வது போலவே இருக்கும். அதனால் கிராமப்புறங்களில் இதை ‘பாம்புப் பறவை’ என்றும் அழைக்கின்றனர்.
நீரிலிருந்து வெளியே வந்தவுடன், ஈரமான தன் இறகுகளை விரித்து வைத்து மரத்தில் அமர்ந்திருக்கும். அந்த நிலையில்தான் பலரும் இந்தப் பறவையை படம் எடுத்திருக்கிறார்கள். நானும் அதுபோன்ற படங்களையே எடுத்திருக்கிறேன். ஒருமுறை, ராஜஸ்தான் பரத்பூர் பறவைகள் சரணாலயத்தில் எனக்கு வேறொரு அனுபவம் கிடைத்தது.
அங்கிருந்த நீர்நிலையின் இரண்டு கரைகளிலும் தலா ஒரு பாம்புத்தாரா அமர்ந்திருந்தது. அக்கரையிலிருந்து ஒரு பறவை ஒலி எழுப்புவதும், அதற்குப் பதில் அளிக்கும் வகையில், இக்கரையிலிருந்து இன்னொரு பறவை ஒலி எழுப்புவதும் என ஏதோ பேசிக்கொண்டிருந்தன. இரண்டுமே ஆண் பறவைகள்.
இதைப் பார்த்ததும் கேமராவைத் தயாராக வைத்தேன். சட்டென்று, இரண்டு பறவைகளும் நீரில் குதித்தன. அவை மீன் எதையும் பிடிக்கவில்லை. ஆனால், இரண்டும் தங்களின் இறகுகளை ‘பட பட’வென அடித்துக்கொண்டு வலப்பக்கமாகப் போவதும், பிறகு இடப்பக்கமாகப் போவதும் என, போக்குக் காட்டியபடி இருந்தன.
சில நிமிடங்களுக்குப் பிறகு கரைக்குத் திரும்பிய அவை, மீண்டும் நீரில் குதித்து முன்புபோலவே சண்டையிட்டன. அந்தத் தருணத்தில் எடுத்ததுதான் இந்தப் படம்.
இவை இப்படிச் சண்டையிடுவதற்குக் காரணம், இடத்துக்கான போட்டிதான். அதாவது, ‘இது என் ஏரியா. நீ உள்ளே வராதே’ என்று தன் இருப்பிடத்தின் மீதான கட்டுப்பாட்டைக் காட்டவே, இந்தச் சண்டை. ஆனால் படத்தைப் பார்த்தால் இரண்டும் சண்டையிடுவதைப் போலவா தெரிகிறது? நடனத்தைப் போலிருக்கிறதில்லையா?
நீர்ப் பறவைகளில் மிகவும் பெரிய பறவை பாம்புத்தாரா. சுமார் 85 முதல் 100 செ.மீ. வரை உயரத்தைக் கொண்டிருக்கும். இந்தியாவில் எங்கெல்லாம் ஏரி, குளங்கள், சதுப்பு நிலங்கள், ஓடைகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் இந்தப் பறவை தென்படும்.
வட இந்தியாவில் மழைக்குப் பிறகு, ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. தென்னிந்தியாவில் குளிர்காலத்தில், அதாவது டிசம்பர் முதல் ஜனவரிவரை இனப்பெருக்கம் செய்கின்றன. மரத்தின் உச்சியில்தான் இவை கூடு அமைக்கும். விரைவில் அழிவுக்கு உள்ளாகக்கூடிய பட்டியலில் இந்தப் பறவை இடம்பெற்றுள்ளது. காரணம் நீர் நிலைகள், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதுதான்.
இந்தப் பறவையின் முதன்மை உணவு மீன். அது மீனை உண்ணும் ‘ஸ்டைல்’ மிகவும் அழகானது. மேலிருந்து நீருக்குள் மூழ்கி, மீனைப் பிடித்து மேலே தூக்கி வரும். உடனடியாக மீனைச் சாப்பிட்டுவிடாது. இதனுடைய அலகு மிகவும் நீளமாக இருப்பதால், மேலே தூக்கிப்போட்டுப் பிடித்து, மீனை விழுங்கும்.
கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com