தண்ணீர் நெருக்கடிக்கான தீர்வு என்ன? - கருத்தரங்கில் நிபுணர்கள் விவாதம்
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 ‘உலக சுற்றுச்சூழல்’ நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான சுற்றுச்சூழலைப் பேணிக் காப்பதில் இருக்கும் சவால்களைப் பற்றி விவாதிக்கவும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் சென்னையில் அண்மையில் சுற்றுச்சூழல் நாள் கருத்தரங்கு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ‘ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ தொண்டு நிறுவனம் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல் நாளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் இந்த ஆண்டு கருப்பொருள்: ‘நில மறுசீரமைப்பு, பாலைவனமாதல் - வறட்சி தடுப்பு’ என்பதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய இந்தியாவின் ‘தண்ணீர் மனிதர்’ என்றழைக்கப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் ராஜேந்திர சிங், “தண்ணீர் நெருக்கடி என்பது உலகளாவிய பிரச்சினை. ஆனால், அதற்கான தீர்வு உள்ளூரிலிருந்து தொடங்க வேண்டும். தண்ணீர் நெருக்கடிக்கான முதன்மையான தீர்வு சரியான நீர் மேலாண்மைதான்” என்றார்.
’ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ அமைப்பின் தலைவர் கல்பனா சங்கர் பேசும்போது, “இந்தியாவில் ஏராளமான இயற்கை வளங்கள் இருந்தாலும், சூழல் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. ஆனால், குறைந்த மக்கள்தொகை கொண்ட வளர்ந்த நாடான ஸ்வீடனில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைச் சரியாகக் கையாள்கின்றனர். அங்கு பெரும்பாலும் பொது போக்குவரத்தையே அதிகமானோர் தேர்வு செய்கிறார்கள். தண்ணீர், மின்சாரப் பயன்பாட்டில் கவனமாக இருக்கிறார்கள். இதை மற்ற நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும். இதனால் சூழல் பாதிப்புகள் குறையும்" என்றார்.
