

மி
க வேகமாக அருகிவரும் காட்டுயிர்களில் ஒன்று, வேங்கைப் புலி. அதைப் படமெடுப்பது, சஸ்பென்ஸ் நிறைந்த படம் ஒன்றைப் பார்ப்பதற்கு நிகரானது. நீங்கள் புலியைப் படமெடுக்க வேண்டுமென்றால், மான்கள், குரங்குகள் போன்றவை எழுப்பும் எச்சரிக்கை ஒலிகளைக் கேட்க வேண்டும். அதுவரை நிசப்தமாக இருக்கும் வனம், புலி நகரத் தொடங்கியதும் வேகவேகமாக உயிர்ப்பு கொள்ளும்.
இந்தியாவின் முதல் வேங்கைப் புலிகள் காப்பகமான ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, என் விருப்பத்துக்குரிய ‘ஷூட்டிங் ஸ்பாட்’களில் ஒன்று. என்னைப் பொறுத்தவரை புலிகளைப் படமெடுக்க, அதுவே சிறந்த இடம். கடந்த ஆண்டு அங்கே சில நாட்கள் தங்கியிருந்தேன். முதல் மூன்று நாட்கள், ஒரு புலிகூடக் கண்ணில் தட்டுப்படவில்லை. என்றாலும், மான்கள் விடுக்கும் எச்சரிக்கை ஒலியை மட்டும் என்னால் கேட்க முடிந்தது.
நான்காவது நாள், பூங்காவிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தேன். அப்போது சாலையை ஒட்டியிருந்த புதர்கள் சலசலத்தன. கண்களைப் புதர்களில் குவிமையப்படுத்தினேன். அங்கே… வேங்கைப் புலி! அப்போது எந்த எச்சரிக்கை ஒலியும் எழவில்லை. ஆச்சரியமாக இருந்தது.
சாலையைக் கடந்து போகும் ஓடையின் கரையில் புலி நடந்துகொண்டிருந்தது. ஓடையின் மறுபக்கக் கரையில், மான்கள் கூட்டமாகக் நடந்துகொண்டிருந்தன. மான்களைப் பார்த்ததும் வேங்கைப் புலி அவற்றின் மீது பாயும் என்றே நினைத்தேன். ஆனால், நடந்ததோ வேறு. புலியைப் பார்த்த அதிர்ச்சியில், மான்கள் உறைந்து நிற்க, அவற்றைக் கண்டும் காணாததுபோல சாவகாசமாக நகர்ந்தது வேங்கைப் புலி.
எந்த ஒரு கணத்திலாவது அந்த மான்களை வேங்கைப் புலி திரும்பிப் பார்க்கும் என்று நினைத்து, என் கேமராவைத் தயாராக வைத்தேன். புலியும் அப்படியே திரும்பிப் பார்த்தது. மான்களும் புலியும் கண்ணோடு கண் நோக்கிய அந்தத் தருணத்தை, என் கேமராவில் பாதுகாத்தேன். கண் இமைக்கும் நொடியில் நடந்து முடிந்தது அந்த அற்புதம். இரையும் இரைகொல்லியும் இப்படி ஒரே காட்சியில் அகப்படுவது காட்டுயிர் ஒளிப்படத் துறையில் மிகவும் அரிதாகவே நிகழும். எனக்கு அது சாதனை. அதிக அளவில் பாராட்டுகளைப் பெற்ற என் படங்களில் இதுவும் ஒன்று.
அன்று நான் கற்றுக்கொண்ட பாடம்… தனக்கு உணவு தேவைப்படாதபோது, ஒரு சிற்றுயிரைக்கூட இரைகொல்லிகள் தீண்டுவதில்லை என்பதுதான். ஆனால் மனிதர்கள்?