

மே மாத இறுதியில் ஒரு நாள். புது டெல்லியில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் ஒரு வழக்கைத் தள்ளிவைத்தது. “நீதிமன்றத்துக்குள் குளிர்சாதன வசதி இல்லை; கழிவறையில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வெக்கையால் வியர்வை வழியும் நிலையில் வாதி, பிரதிவாதிகளின் வாதங்களைக் கேட்பது கடினம். விசாரணையை நடத்த இயலாததால் வழக்கு தள்ளி வைக்கப்படுகிறது’ என வழக்கை விசாரிக்கும் முதன்மை அதிகாரி கூறினார்.
வெப்ப நிலை அதிகரிப்பால், வட மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், புது டெல்லியின் அன்றாட வாழ்க்கையே இப்படிக் குலைந்துவிட்டது. மே 29 இல் புது டெல்லியில் உள்ள முங்கேஷ்பூர், நரேலா ஆகிய இடங்களில் வெப்பநிலை 52.9 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது.
வெப்பநிலையை அளவிடுவதில் நேர்ந்த தவறு காரணமாக இப்படிப் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை டெல்லியில் பதிவானதில் 50 டிகிரிதான் அதிகபட்ச வெப்பநிலை.
ராஜஸ்தானில் தொடர்ந்து நிலவிவரும் வெப்ப அலைக்குப் பலர் பலியாகி வருகிறார்கள். ராஜஸ்தானில் சமீபத்திய ஏழு நாள்களில் வெப்ப அலைக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 55 ஆகவும், இந்தக் கோடைக் காலத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 122 ஆகவும் உள்ளது.
கடந்த புதன், வியாழக்கிழமைகளில் ராஜஸ்தானின் 20 மாவட்டங்களில் வெப்ப அலை காரணமாகச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுரு பகுதியில் வரலாறு காணாத அதிகபட்ச வெப்பநிலையாக 50.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கங்காநகர், பலோடி, பிலானி ஆகிய பகுதிகளில் 49 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது, இது இயல்பை விட 7.5 டிகிரி செல்சியஸ் அதிகம்.
எரியும் அடுப்புக்கு முன் நிற்பதுபோன்ற நிலை வட மாநிலங்களில் பல ஊர்களில் நிலவுகிறது. கட்டுமானப் பரப்பு பெரிதும் அதிகரித்ததும், மரங்கள் அடங்கிய பசுமைப் பரப்பு சுருங்கியதுமே 50 டிகிரி வெப்பநிலையைத் தாண்டியதற்கு முதன்மைக் காரணங்களாகக் கருதப் படுகின்றன.