

பொ
ட்டாசியம் எனப்படும் சாம்பல் ஊட்டம் பயிர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இதைப் பல ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன. இந்த ஊட்டம் செல் பிரிதலுக்கு, ஒளிச்சேர்க்கையில் கார்போஹைட்ரேட் உருவாக்கத்துக்கு, சர்க்கரைச் சத்தை இடம் மாற்றித் தருவதற்கு, நைட்ரேட் அளவைக் குறைத்து புரதச் சத்தை உருவாக்குவதற்கு, நொதிமங்களைச் செயல்பட வைப்பதற்கு, பயிர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கார்பன் டை ஆக்சைடை உட்கொள்வதற்கு எனப் பல வகைகளில் பயன்படுகிறது.
புரதங்களுக்கும் பொட்டாசியத்துக்கும் உள்ள நெருக்கமான உறவைத் தொடக்ககால ஆய்வுகளே மெய்ப்பித்துள்ளன. பொட்டாசியம் குறைவான மண்ணில் வளரும் பயிர்களைவிட போதிய பொட்டாசியம் உள்ள மண்ணில் வளரும் பயிர்கள் அதிக மாவுச் சத்தைக் கொண்டு இருப்பது தெரியவந்தது.
பயிர் விளைச்சலுக்குப் பின்னர் மண்ணில் இருந்து பெருமளவு பொட்டாசியம் எடுக்கப்பட்டுவிடுகிறது என்பதை ஆய்வுகள் வழியே கண்டறிந்துள்ளனர். 1995-ம் ஆண்டு தானியங்கள், பயறுகள் ஆகியவற்றின் விளைச்சலால் மண்ணில் இருந்து 11.3 லட்சம் டன் பொட்டாசியம் எடுக்கப்பட்டதைக் கணக்கிட்டுள்ளனர். 2001-ம் ஆண்டு 14.5 லட்சம் டன், 2006-ம் ஆண்டு 16.8 லட்சம் டன்னும் பொட்டாசியம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிட்டுள்ளனர்.
பொட்டாசியம் பயிருக்குக் கிடைக்கக்கூடிய நிலையை வைத்து அதைத் தயார்நிலையில் உள்ள பொட்டாசியம், மெல்லக் கிடைக்கக்கூடிய பொட்டாசியம், அரிதாகக் கிடைக்கக்கூடிய பொட்டாசியம் என மூன்று விதமாகப் பிரிக்கின்றனர். இந்த மூன்றில் அரிதாகக் கிடைக்கக்கூடிய நிலையில் உள்ள பொட்டாசியம்தான் அதிக அளவாக, அதாவது 90-98 சதவீதம் மண்ணில் உள்ளது. இவை படிக நிலையில் தொடக்கநிலை கனிமப் பொருட்களாக உள்ளன. குறிப்பாக ஆர்த்தோகிளேஸ் ஃபீல்ஸ்பேர், மஸ்கோவிட் மைக்கா ஆகிய தாதுக்களாகக் கிடைக்கின்றன.
மெதுவாகக் கிடைக்கக்கூடிய பொட்டாசியம் 2-10 சதவீதம் உள்ளது. இது பையோடைட் மைக்காவாகக் கிடைக்கிறது. பெட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு, சில்வினைட், லாங்பினைட் ஆகியவற்றின் கூட்டுப்பொருட்களாக பொட்டாசியம் உள்ளது.
இந்த பொட்டாசியத் தாதுகள் குறிப்பிட்ட வெப்ப நிலையில் ஆவியாக மாறக்கூடியவை. இவ்வாறு சிதையும் பொட்டாசிய அயனிகள், வடிகால்களில் நீருடன் கலந்து வெளியேறும். இவை உயிரினங்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதன் பின்னர் மெதுவாகக் கிடைக்கும் நிலைக்கு இவை மாறிவிடுகின்றன.
பொட்டாசியம் திரட்டும் நுண்ணுயிர், வேருயரம், தழைச்சுருளம், தழைக்குச்சிலம், பாஸ்பரஸைக் கரைக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றுடன் சேர்ந்து வாழக்கூடியது. இதனால் எந்த எதிர்விளைவும் ஏற்படுவது கிடையாது.
(அடுத்த வாரம்: பயனளிக்கும் பூஞ்சாளங்கள்!)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com