இயற்கையைத் தேடும் கண்கள் 1: நடனமாடும் பெருங்கொக்கு!

இயற்கையைத் தேடும் கண்கள் 1: நடனமாடும் பெருங்கொக்கு!
Updated on
1 min read

னக்கும் என் ஒளிப்படக் கலைக்கும் மிகவும் நெருக்கமான ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள கேலாதேவ் தேசியப் பூங்காவில் இந்தப் பறவையை 2006-ல் முதன்முதலாகப் பார்த்தேன். ஒளிப்படக் கலைஞர்கள் அதிகம் விரும்பும் பறவைகளில் புகழ்பெற்றது சாரஸ் கிரேன்.

ஆங்கிலத்தில் ‘சாரஸ் கிரேன்’ என்று அழைக்கப்படும் இந்தப் பறவை தமிழில் ‘சரச பெருங்கொக்கு’ எனப்படுகிறது. வடக்கு, மத்திய இந்தியாவில் தென்படும் இந்தப் பறவைதான், பறக்கக்கூடிய பறவைகளில் மிகவும் உயரமானது. உலகின் உயரமான பறவையான நெருப்புக்கோழியால் பறக்க முடியாது.

சாரஸ் கிரேன் பறவைகளில் ஆண், பெண் இரண்டுமே ஒரே மாதிரியாக இருக்கும். ஆண் பறவை சற்று பெரிதாகத் தெரியும். பரத்பூர் பறவை சரணாலயம், புல்வெளிகள், கோதுமை வயல்கள் போன்றவற்றிலும் இவற்றைப் பார்க்க முடியும்.

ஜூலை – அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், மழைக்குப் பிறகு இணை சேரும் இந்தப் பறவைகள், ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் முட்டையிடும். குளம், குட்டை போன்ற நீர்நிலைகளுக்கு அருகேதான் இவை முட்டையிடும். நான்கைந்து முட்டைகளை இட்டாலும், இரண்டு அல்லது மூன்று மட்டுமே குஞ்சு பொரிக்கும். முட்டைகளைப் பேணிக் காப்பதில், ஆண் பெண் இரண்டுமே பங்களிக்கும். இணையைக் கவர்வதற்காக இவை கொடுக்கும் அழைப்புகளும் நடனமும் உலகப் புகழ்பெற்றவை.

இந்தப் பறவைகளிடையே தென்படும் ஒரு சிறப்புக் குணம் ஆண், பெண் பறவைகள் ஒருமுறை இணைந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் ஒரே இணையோடுதான் வாழும். அதனால், புதிதாகத் திருமணமான ஜோடிகள் இந்தப் பறவைகளைப் பார்த்தால் நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை வட இந்தியாவில் உண்டு. இணை சேரும் காலம் தவிர்த்து இந்தப் பறவைகள் 10 அல்லது 15 கொண்ட குழுவாகத் திரியும். நாடெங்கும் நீர்நிலைகளும் நன்செய் நிலங்களும் ரியல் எஸ்டேட்டுகளாகவும் கட்டிடங்களாகவும் மாறி வரும் நிலையில், இந்தப் பறவைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது! ‘இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கம்’ (ஐ.யூ.சி.என்) இந்தப் பறவையை ‘அழிவுக்கு உள்ளாகக் கூடிய’ (வல்னரபிள்) பறவை இனமாக வகைப்படுத்தியுள்ளது. நடனத்துக்குப் புகழ்பெற்ற இந்தப் பெருங்கொக்கின் எதிர்காலம் மனிதர்களின் கைகளில் சிக்கித் தவிக்கிறது.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

தொடர்புக்கு: rrathika@gmail.com

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா ராமசாமி, தற்போது சென்னையில் வசிக்கிறார். இந்தியாவின் முதல் பெண் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராகப் புகழ்பெற்றவர். உலகின் பல காடுகளிலிருக்கும் உயிரினங்கள், இவரின் கேமரா கண்களில் இருந்து தப்பியதில்லை. இவர் எடுத்த பல ஒளிப்படங்கள் தேசிய, சர்வதேச காட்டுயிர், பயண இதழ்களில் வெளியாகியுள்ளன. பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in