

பயணம் எல்லாருக்கும் விருப்பமானது. புதிய சூழல், புதிய மனிதர்கள். புதிய உறவுகள், புதிய அறிவுகளைத் தரவல்ல அலாதியான அனுபவம். அறிவியல் ஆய்வுகளுக்காக, நாடு பிடிப்பதற்காக, மெய்யறிவுத் தேடலுக்காகப் பயணம் மேற்கொண்டவர்கள் பலர். தனி மனிதர்கள் மேற்கொண்ட சில பயணங்கள் வரலாற்றைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. ஆனால், பயணத்தின் சிறப்பு கூடு திரும்புவதில் இருக்கிறது.
பயணங்களின் முன்னோடிகள் விலங்கினங்களே. பருவச் சுழற்சியை அடியொற்றிய விலங்குகளின் வலசையில் ஓர் ஒழுங்கு தென்படுகிறது. வலசை உயிரினங்களின் நடத்தைகளில் பொதுப்பண்பு ஒன்று உண்டு- குறித்த காலத்தில் அவை தங்கள் வாழிடங்களுக்குத் திரும்புகின்றன.
உயிரினங்களின் காலம் தவறாப் பயணங்களை, இருப்பிடம் திரும்பும் துல்லியத்தைத் தீர்மானிப்பது எது? மலைப்பூட்டும் கேள்வி. அறிவியல் இதற்குப் பல விளக்கங்களைத் தர முயல்கிறது. சூரியன், சந்திரன், காற்று, மூளை, இயக்குநீர் சுரப்பிகள் என்பவற்றோடு, இனத்தின் தொகுப்பு நினைவும், அகத் தூண்டலும் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
கூடு எப்படி ஒரு பறவையை ஈர்க்கிறது? இயற்கையோடு, வாழிடச் சூழலோடு அப்பறவை பேணிவரும் உறவு நெருக்கம் ஒரு காரணம். வீடு உயிர்களின் பெருமைக்குரிய அடையாளம், முகவரி, நிகழ்காலம், எதிர்காலம். போக்கிடமற்றவனுக்கு அகதி என்று பெயர். கூட்டில் குஞ்சுகள் தாய்ப் பறவைக்காகக் காத்திருக்கின்றன. அல்லது, தாய்ப் பறவை தன் இணையின் வரவுக்காகக் காத்திருக்கிறது. முட்டைகளைத் தாயும் தந்தையும் முறை வைத்து அடைகாக்கும் பறவையினங்களும் உண்டு.
கூடு திரும்புதலுக்குத் தன் இருப்பிடம் குறித்த புரிதலும், உறவுகள் மீதான ஒட்டுதலும் தேவை. உறவு சார்ந்த உணர்வுதான் உயிர்களை இயற்கை நோக்கி ஈர்க்கிறது எனத் தோன்றுகிறது. இயற்கையை அவதானிப்பதும் வாழிடத்தைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணிப்பதும் அனைத்து உயிரினங்களின் இயல்பாக இருக்கிறது.
காட்டினுள் அந்நியரின் ஊடுருவலைக் கண்காணித்துச் சக உயிரினங்களை எச்சரிக்கும் கணந்துள் (ஆள்காட்டி) பறவையைக் குறித்து சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பு உள்ளது. குழுவாக வாழும் பல உயிரினங்களிலும் இப்பண்பு காணக் கிடக்கிறது.
கூடு இழப்பின் வலி: என் தோட்டத்தில் வழக்கமாகத் தேங்காய் பறிக்கத் தென்னை மரத்தில் ஏறுகிறவர் அன்றைக்கு மட்டைகளுக்கு இடையில் அமைக்கப்பட்டிருந்த ஓர் அணில் கூட்டைக் குஞ்சுகளுடன் கீழே தூக்கி வீசினார். ஓடிச்சென்று அதைக் கையிலெடுத்தேன்.
வளரும் குட்டிகளுக்கென மெத்துமெத்தென்று கலைநுணுக்கத்தோடு தாய் உருவாக்கியிருந்த அக்கூட்டின் செய்நேர்த்தியை வியப்பதா, இல்லை, அக்கூடு கீழே விழுந்த அதிர்ச்சியில் துடித்துக்கொண்டிருக்கும் குஞ்சுகளுக்கு இரங்குவதா, இல்லை, இன்னும் சற்று நேரத்தில் வரப்போகும் தாய் அணில் அதன் கூட்டையும் குஞ்சுகளையும் காணாமல் தவிக்கப்போவதை நினைத்து நொந்துகொள்வதா? நான் குழம்பித்தான் போனேன். கூடு இழப்பு, குடும்பத்தை இழப்பதற்கு நிகரானது அல்லவா?
இருவாச்சி: மழைக்காடுகளில் உயர்ந்த மரங்களின் பொந்துகளில் பெண் இருவாச்சி முட்டையிட்டு அடைகாக்கிறது. பொந்தின் வாசலைக் கழிவுகளால் அடைத்துவிட்டு, அதில் தன் அலகை மட்டும் வெளியே நீட்டுகிற அளவுக்கு ஒரு துளையை இடுகிறது. முட்டையிலிருந்து வெளியே வரும் குஞ்சுகளுக்காகத் தன் இறகுகளை உதிர்த்து ஒரு படுக்கையைத் தயார்செய்து வைக்கிறது பெண்பறவை, இப்படி அடைகாக்கும் காலத்தில் ஆண்பறவை கொணரும் உணவைத் துளை வழியாகப் பெற்றுக்கொள்கிறது. அது ஒரு பெரும் திட்டம்.
கூட்டில் முட்டையை அடைகாத்துக் கொண்டிருக்கும் தாய்ப் பறவைக்கு உணவு கொண்டு வரவேண்டிய இணைப் பறவை கூடு திரும்பவில்லை என்றால் என்னாகும்? இறகை உதிர்த்துவிட்ட பறவைக்குப் புதிய இறகுகள் முளைப்பதற்குக் காலம் எடுக்கும். இப்போதைக்கு அதனால் கூட்டைவிட்டுப் பறந்துசெல்ல முடியாது. ஒரு குடும்பமே அழிந்து போகும். குஞ்சுகளுக்கான இரையுடன் இணைப்பறவை திரும்பி வரும்போது கூடும் குடும்பமும் இல்லை என்றால் என்னாகும்?
காலநிலை அகதிகள்: சகவுயிர்களின் வலியை மனிதர்கள் பொருள்படுத்த வாய்ப்பில்லை. ஆனால், மனிதர்களுக்கு இந்த வலி ஏற்பட்டதை 2020 கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நம்மால் உணர முடிந்தது. பெருநகரம் ஒட்டுமொத்தமாக வீடு அடங்கிக் கிடந்தபோது எப்படியேனும் வீடு திரும்பிவிட வேண்டும் என்று வடநாட்டுக் கூலித் தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் சென்னைப் பெருநகரத்திலிருந்து 1,000, 1,500 மைல்கள் நடைப்பயணம் மேற்கொண்டனர். உறவுகளின் அருகிலிருந்து உயிர்விட்டாலும் பரவாயில்லை என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது.
அவ்வாறு போனவர்களில் நூற்றுக் கணக்கானோர் வழிநெடுக மாண்டனர். அது கொடுங்கனவுகளின் காலம். வளைகுடா நாடுகளில் புலம்பெயர்ந்து போயிருந்த மீனவர்கள் ஊர் திரும்ப வழியின்றித் தவித்த தவிப்பையும் காண முடிந்தது. போர் அகதிகள், பேரிடர் அகதிகளைப் பற்றி நாம் அறிவோம். எதிர்கால மனிதர்களுக்கு மற்றோர் அடையாளப் பெயர் காத்திருக்கிறது- ’காலநிலை அகதி’. உலகின் ஒட்டுமொத்தப் பரப்பும் வாழத் தகுதியற்றது என்றான பின்பு, அந்த அகதிகள் எங்கே போய்த் தஞ்சம் புகுவார்கள்?
வலசையின் சூட்சுமம்: பருவகாலங்களின் ஒழுங்குதான் உயிரினங்களின் வாழ்வை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. இந்தச் சீர்மை பிறழ்ந்தால் சூழலியல் பேரிடர் கவியும். மனித இனம் மட்டும் அதிலிருந்து தப்பித்துவிட முடியாது. கோடை வறட்சியைக் கடப்பதற்காக ஆண்டுதோறும் பலநூறு மைல்கள் பயணிக்கும் கால்நடைகளின் இலக்கு நன்னீர் நிலைகள்.
சைபீரிய நாரைகள் 8,000 மைல் தொலைவு பறந்து இந்தியாவின் தென்முனையிலுள்ள நீர்நிலைகளை அடைகின்றன. விலங்கினங்கள் இனப்பெருக்கத்துக்குக்குறிப்பிட்ட பருவகாலத்தைத் தேர்ந்தெடுக் கின்றன. முட்டையிடுவதற்கும் குஞ்சுகள் உணவு தேடுவதற்கும் அக்காலமே இசைவானது என்பதைத் தலைமுறை அனுபவத்தினால் தீர்மானிக்கின்றன.
அச்சூழல் நிலவும் இடத்தைத் தேடி மீன்களும் நெடுந்தொலைவு வலசை போகின்றன. வலசைக் காலத்தில் சால்மன், விலாங்கு போன்ற மீன்கள் நிகழ்த்தும் சாகசங்களும் தியாகமும் காதல் காவியத்துக்கு நிகரானவை. பறவைகள் முட்டையிடுவதற்கு ‘நீண்ட பகல் வேளை’ நிலவும் பருவகாலத்தைத் தேர்ந்துகொள் கின்றன.
முட்டை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றும் இயக்குநீர் சுரப்பிகள் (ஹார்மோன்கள்) போதிய அளவு சுரப்பதற்குப் பகல் வெளிச்ச நேரம் தூண்டுதலாக இருக்கிறது. பிராய்லர் கோழிப் பண்ணைகளில் 24 மணி நேரமும் விளக்கு எரிவது கோழிகள் இரை உண்பதை அதிகரிக்கவும் இனப்பெருக்க ஹார்மோன்களைத் தூண்டுவதற்காகவும்தான்.
மஞ்சள் துடுப்புச் சூரை: இந்தியக் கடல்களில் மஞ்சள் துடுப்புச் சூரை (Thunnus Albacares) பிடிப்பதற்கு ஒரு பருவம் இருக்கிறது- அக்டோபர், நவம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சற்றுக் குளிரான நீரில் மட்டும்தான் அவை வருகின்றன. இந்த வெப்பநிலையை ஒட்டி, உலகக் கடல் முழுவதும் அவை பயணித்துக் கொண்டேயிருக்கின்றன. இந்த வெப்பநிலை நகர்கிற திசையில் அவை நகர்ந்துகொண்டேயிருக்கும்.
சில கால்நடை யினங்கள் உணவு, குடிநீர்த் தேவைகளை முன்னிட்டு ஆண்டுதோறும் பல நூறு கிலோமீட்டர் தொலைவு பயணித்துக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று திரும்புகின்றன. ஏராளமான விலங்குகளின் வாழ்க்கைச் சுழற்சியில் இடப்பெயர்வு முக்கியமான இடத்தை வகிக்கிறது. காலநிலை பிறழ்வு இந்தச் சாத்தியங்களை இல்லாமல் ஆக்கியிருக்கிறது என்பது நிச்சயம் நமக்கு நல்ல செய்தியல்ல.
(தொடரும்)
- vareeth2021@gmail.co