

த
மிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் தோடா எருமை வகை தென்படுகிறது. அங்கு வாழும் பழங்குடியினங்களில் தொதவர் (தோடர்) இனமும் ஒன்று. இவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் இந்த எருமையைச் சார்ந்தே இருக்கிறது. எனவே, இந்த எருமைக்கு ‘தோடா’ எருமை என்று பெயர் வந்தது. தொதவர்களைத் தவிர படுகர்கள், கோத்தர் பழங்குடிகளும் இந்த எருமையை வளர்த்துவருகின்றனர்.
1848-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த எருமை இனத்தின் எண்ணிக்கையில், குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படவில்லை. அப்போது 2,171 எருமைகள்தாம் இருந்ததாகத் தெரிகிறது. 1994-ம் ஆண்டு அவற்றின் எண்ணிக்கை சற்றே கூடி 3,531 எருமைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கடைசியாக, 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 3,003 எருமைகள் இருந்திருக்கின்றன. இன்று அந்த எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேய்ச்சல் நிலம் அருகி வருவதையே அவற்றின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்குக் காரணமாகச் சொல்கின்றனர்.
இந்த எருமைகள் சில நேரம் கோயில்களுக்கு நேர்ந்துவிடப்பட்டு ‘கோயில் எருமை’களாகவும் வலம் வருவதுண்டு. ஆஜானுபாகுவான உடல், வேகமாக ஓடுவதற்குத் தேவையான குளம்புகள், மூர்க்கத்தனம் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த எருமைகள், எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் தன்மை கொண்டவை.
இவை பெரும்பாலும் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்துடன் காணப்படும். இவற்றின் உடலில் அடர்த்தியான ரோமங்கள் இருப்பதால், இவை அதிக மழையும் அதிக வெப்பமும் கொண்ட பகுதிகளில் வாழும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. இவற்றின் கொம்புகள் பிறைநிலாபோல அரைவட்ட வடிவில் அமைந்திருக்கின்றன. கொம்புகள் சுமார் 62 செ.மீ. நீளத்துக்கு இருக்கும்.
ஆண் எருமை மாடுகள் வீடுகளில் வளர்க்கப்படுவதில்லை. அவை ‘ஊர்திரி’ (ஃபெரல்) உயிரினங்களாகக் காட்டில் அலையும். அவை சில நேரம் வீடுகளில் வளர்க்கப்படும் பெண் எருமை மாடுகளுடன் இணை சேர்வதுண்டு. பெண் எருமை மாடுகள், தங்களின் முதல் ஈனுதலுக்கு நான்கு ஆண்டுகளை எடுத்துக்கொள்கின்றன. அதன்பிறகு ஒவ்வொரு 14 மாதங்களுக்கு ஒருமுறை அவை கன்றுகளை ஈனுகின்றன. ஒவ்வொரு கன்றுக்கும் பெயரிடும் வழக்கம் தோடர்களிடத்தில் உண்டு.
இந்த எருமைகளின் ஆண்டு பால் உற்பத்தி 500 கிலோ. இவற்றின் பால் அதிக கொழுப்புச் சத்தைக் கொண்டுள்ளதற்காகப் பெயர் பெற்றவை. இந்தப் பாலில் 8 சதவீதக் கொழுப்புச் சத்து உண்டு.