Last Updated : 06 Apr, 2024 10:10 AM

 

Published : 06 Apr 2024 10:10 AM
Last Updated : 06 Apr 2024 10:10 AM

குளுகுளு ஊட்டியின் வறண்ட இன்னொரு முகம்

கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. தலைநகர் சென்னையில் வெயிலின் தாக்கத்தால் ஆங்காங்கே தண்ணீர்த் தட்டுப்பாடு தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது. சென்னை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் தண்ணீர்ப் பிரச்சினை என்பது அனைவரும் கவலைப்படும் தலைப்புச் செய்தி. அதுவே மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் தண்ணீர்ப் பிரச்சினையோ, நம் கவனத்துக்கே வராது.

நீலகிரி பழங்குடி மக்களின் வசிப்பிடங்களில் உள்ள ஓடைகள், ஊற்றுகள், கிணறுகளில் முன்பு நீர்வளம் செழிப்பாக இருந்தது. தற்போது நிலைமை அவ்வாறு இல்லை. காலநிலை மாற்றம், காடழிப்பு போன்ற செயல்களால் பழங்குடிகள் தங்கள் நீராதாரங்களை இழந்துவருகிறார்கள். கோடைக்காலத்தில் அவர்களின் நிலைமை மோசமடைவது உண்டு.

தமிழ்நாட்டில் பழங்குடி மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மாவட்டங்களில் ஒன்று நீலகிரி. இந்தியாவில் 730க்கும் மேற்பட்ட பழங்குடியினங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 36 வகைப் பழங்குடி மக்கள் வசித்துவருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தொதவர் (தோடர்), கோத்தர், குறும்பர், பனியர், காட்டு நாயக்கர், இருளர் என 6 வகைப் பழங்குடிகள் வாழ்கின்றனர். இவற்றைத் ‘தொன்மைப் பழங்குடி குழுக்கள்’ என அரசு வரையறுத்துள்ளது.

சாவுக்காலம்: உதகமண்டலத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது மசினகுடி. ஒருகாலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக அறியப்பட்ட மசினகுடி, ஆண்டின் பெரும்பாலான நாள்களில் வறண்ட நிலமாகத் தற்போது காட்சியளிக்கிறது.

மசினகுடியின் பொக்காபுரத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக ஊர் மக்கள் தயாராகிக்கொண்டிருந்தனர். அதே பொக்காபுரத்தில், குறும்பர் பழங்குடிகள் வசிக்கும் குறும்பர்பாடியில் திருவிழாவுக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

அமைதி நிறைந்திருந்த குறும்பர்பாடியில், மாடு கட்டும் கயிறுடன் சென்றுகொண்டிருந்தார் சத்யா. அவர் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். அப்பா, அம்மா இரண்டு பேரும் காலையிலேயே காட்டு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். வீட்டில் தன் தம்பியைக் கவனித்துக் கொள்கிறார் சத்யா.

சத்யா

சத்யா சொன்ன விஷயம் பெருநகர வாசியான என்னைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்கியது. “உங்களுக்கு அன்றாடத்துல தண்ணீர் எதுக்கெல்லாம் பயன்படும்? குடிக்க, சமைக்க, குளிக்க, துவைக்க, பாத்திரம் கழுவ இப்படித்தானே? ஆனா, எங்களுக்கு அப்படி மட்டும் பயன்படுவது கிடையாது.

எங்க சனங்களின் வாழ்வாதாரமே தண்ணிய வெச்சுதான் இருக்கு. எங்களுக்குப் பொழப்பு காட்டுல விறகு எடுக்கிறது, மாடு மேய்க்கிறது. இங்க வருசத்துல 6 மாசம்தான் தண்ணி இருக்கும். மிச்ச 6 மாசம் வறண்டு போய்டும்.

“அங்க பாக்குறீங்களே குட்டை, அங்குதான் எங்களுடைய தினப் பயன்பாட்டுக்கான தண்ணிய எடுப்போம், எங்க மாடுகளும் அங்கதான் தண்ணி குடிக்கும். வறட்சிக் காலத்துல தண்ணி வத்திடும். நாங்க ஊருக்குள் போய் எங்காவது குழாயில் தண்ணி எடுத்துட்டு வருவோம். மாடுகளுக்குக் கொடுக்கிற அளவுக்குத் தண்ணி கிடைக்காது.

வறட்சியினால புல்லும் இருக்காது. இதனால், மாடுங்க செத்துப் போறதும் உண்டு. வறட்சி வந்தா எங்களுக்குச் சாவுக்காலம் மாதிரி தோணும்” என்று சத்யா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நான்கைந்து சிறுவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.

பொக்காபுரிலுள்ள குறும்பர் பாடி

குறும்பர்பாடியில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலான சிறுவர்கள் பள்ளிப் பக்கமே சென்ற தில்லை. அவர்களது வாழ்க்கையில் பள்ளிப் பருவமே இல்லை. மாடு, காடு, தண்ணீர் இந்த மூன்றைச் சுற்றித்தான் தலைமுறை தலைமுறையாக அவர்களது வாழ்க்கை பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது.

தண்ணீரே வேலையைத் தீர்மானிக்கிறது... இருளர் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்று வாழைத்தோட்டம். பெரும்பாலும் விவசாயக் கூலிகள். இருளர் பெண்ணான ஜோதிக்கு வயது 65. இன்னும் வயிற்றுப்பாட்டுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறார். “எம்மா, நீங்க பாக்குற ஊட்டியும் நாங்க வசிக்கிற ஊட்டியும் ஒண்ணு கிடையாது.

ஊட்டிக்குள்ள நிறைய கிராமங்க இருக்கு. செல்வச் செழிப்பு ஒருபக்கம், கரெண்ட்டே இல்லாம இருக்கிற வீடுங்க இன்னொரு பக்கம். எங்களுக்கு எல்லாமே பிரச்சினைதான். தண்ணியைப் பத்தி சொல்லவே வேணாம். குடிக்கிற தண்ணிக்குத் தினமும் 2 கி.மீ. நடக்கணும். அஞ்சாவது படிக்கிற குழந்தை முதல் 70 வயது பாட்டிவரை வயசு வித்தியாசமில்லாமல் தண்ணிக்கு அலைவோம். நாங்க இந்த மாசம் என்ன வேலை பார்க்கப் போறோங்கிறத தண்ணிதான் தீர்மானிக்குது.

தண்ணி இருக்கிற காலத்துல விவசாயம் பண்ணுவோம். வறட்சிக் காலத்துல கட்டிட வேலைக்குப் போய்டுவோம்” என்று பேசிக்கொண்டிருந்த ஜோதியின் முகத்தில் காணப்பட்ட வருத்தம், பழங்குயினர் வாழ்க்கையின் அவலத்தைக் காட்டியது.

பொக்காபுரம், வாழைத்தோட்டம் பகுதிகள் மட்டுமல்லாது செம்மநத்தம், ஆனைக்கட்டி, சொக்கநல்லி, சிறியூர் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி களுக்கும் இந்தக் கோடைக்காலம் அச்சுறுத்தும் காலமாகவே மாறியுள்ளது என்பதை அவர்களுடன் பேசுகையில் புரிந்துகொள்ள முடிந்தது.

மறையும் நீராதாரங்கள்: நீலகிரியில் உள்ள பழங்குடி இனங்களில் குறும்பர், பனியர், இருளர், காட்டு நாயக்கர் சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் மிகவும்பின்தங்கியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ஊரின் ஒதுக்குப் புறங்களில் வசிக்கின்றனர். இன்னும் சிலர் காடுகளை விட்டு வெளிவருவதே இல்லை.

இவர்களுடன் ஒப்பிட்டால் தொதவர், கோத்தர் மேம்பட்ட நிலையில் உள்ளனர். தொதவர்களைப் பொறுத்தவரை, பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்கிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். தொதவர் இனப் பெரியவரான பெத்த குட்டனைச் சந்தித்தேன்.

“எனக்கு 70 வயசு ஆகுது. பல வளர்ச்சிகளையும் அழிவுகளையும் பார்த்துட்டு வாறேன். 50 ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்த நிலைமை இப்போது இல்லை. எங்க இனத்தோட அடையாளங்களில் ஒண்ணு எருமை. ஒவ்வொரு வீட்டுக்கும் 100 எருமைகளாவது வெச்சிருப்போம். இன்னைக்கு ஒண்ணு, ரெண்டு இருக்கிறதே ஆச்சரியம். எங்க இன மக்கள் படிச்சு ஆபிஸ் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க.

பெத்த குட்டன்

அதனால், எருமை வளர்ப்பது குறைஞ்சிட்டது ஒரு காரணம். ஊட்டிய சுத்தி நீராதாரங்கள் அழிய ஆரம்பிச்சதும் இன்னொரு காரணம். நான் சின்ன வயசுல பார்த்த நீராதாரங்கள் இன்னைக்கு இல்லை. சுவிட்சு போட்டால் மோட்டார்ல தண்ணி வாரதுனால தண்ணிக்குப் பிரச்சினை இல்லைனு அர்த்தம் இல்லை என்பதை ஜனங்க உணரணும்” என்றார்.

தொதவர்களின் வழிபாட்டு இடம்
தொதவர்களின் வழிபாட்டு இடம்

என்ன காரணம்? - நீலகிரியில் தீவிரமடைந்துவரும் வறட்சிக்கு என்ன காரணம் என்று நீரியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜனகராஜனிடம் கேட்டபோது, “மேற்கு மலைத் தொடர் பாதுகாப்பு குறித்துப் பத்து வருடங்களுக்கு முன்பு சூழலியல் பேராசிரியரான மாதவ் காட்கில் தலைமையில் அறிக்கை ஒன்று மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

மேற்கு மலைத் தொடரில் நான்கில் மூன்று பகுதிகள் அதன் அடர்த்தியை இழந்துவிட்டன. இனியும் இது தொடர்ந்தால் அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, காட்டு நிலங்களை வேறு பயன்பாட்டிற்குப் பயன்படுத்த கூடாது என்று அந்த அறிக்கை முன்வைத்தது.

ஆனால், இதற்கு நாம் செவி சாய்க்கவேயில்லை. சுற்றுலா மேம்பாடுஎன்கிற பெயரில் தொடர்ந்து நீலகிரிக் காடுகளை அழித்துக்கொண்டு வருகிறோம். காடழிப்பு தீவிரமாகஇருப்பதால் வெப்பம் அதிகரித்து விட்டது. இதனால் அப்பகுதிகளில் மழையின் அளவும் நீரோட்டமும் குறைந்துவிட்டது” என்றார்.

பழங்குடி மக்களுக்கு யார் பொறுப்பு? - ஊட்டி என்பது வெறும் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல. இங்குள்ள மக்களுக்கென்று ஒரு வாழ்க்கை உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் கோடைக்காலத்தில் இங்கு வறட்சியின் தீவிரம் அதிகரிக்கிறது. இதில் முதலில் பாதிக்கப்படுவது காடுகளை ஒட்டி வாழும் பழங்குடிகள்தாம்.

அதேபோல், வறட்சிக் காலத்தில் காட்டுயிர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை இன்னும் தீவிரமானது. காடுகளில் நீர் இல்லாத சூழலில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டு யிர்கள் நுழையும் போக்கு அதிகரித்துவருகிறது.

“அதிக வறட்சிமிக்க பழங்குடிப் பகுதிகளைக் கண்டறிந்து லாரிகள் மூலமாகவோ, குழாய்கள்அமைத்தோ தண்ணீர்த்தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும். காட்டுப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கு நீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கும் நிதி சரியாகச் சென்றடைய அரசு வழிசெய்ய வேண்டும்”என்று வறட்சிக் காலங்களுக்கான தற்காலிகத் தீர்வை முன்வைக்கிறார் பழங்குடி செயற்பாட்டாளரான செல்வராஜ்.

நகர மக்களால் தங்கள் பிரச்சினையை அரசுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட முடியும். ஆனால், பழங்குடி மக்களின் சூழல் அப்படி இல்லை. எனவே, பழங்குடி மக்கள் சார்ந்த பிரச்சினைகளை அரசு தானாகவே முன்வந்து ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை வழங்க வேண்டும்.

‘இந்தியாவில் தண்ணீர்த் தட்டுப்பாட்டில் நிலவும் பாலினப் பிரச்சினை’ என்கிற தலைப்பில் ஆய்வுசெய்ய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய ‘மீனா சுவாமிநாதன் ஊடகக் கூட்டாய்வு’க்காக எழுதப்பட்ட கட்டுரை.

- indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x