

கை
நிறைய சம்பளம் கிடைக்கும் ஐ.டி. துறையை விட்டு, இயற்கை அங்காடி ஆரம்பித்த சிலர்… வெளிநாட்டு வேலையைத் துறந்துவிட்டு தமிழகக் கிராமப்புறங்களில் இயற்கை வேளாண்மையை மேற்கொண்டிருக்கும் சிலர்… நகரங்களை விட்டே ஒதுங்கி, ஒத்த சிந்தனையுடன் இருக்கும் சிலருடன் இணைந்து ‘உலகக் கிராமம்’ அமைத்திருக்கும் சிலர்…
இப்படி மாற்று வாழ்க்கை முறையைக் கொண்டாடுவோர் கூடும் நிகழ்வாக இருந்தது ‘ரீஸ்டோர்’ இயற்கை அங்காடியின் 10-ம் ஆண்டு விழா. கடந்த வாரம் சனி, ஞாயிறுக்கிழமைகளில் சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடந்த இந்தக் கொண்டாட்டம், பொழுதுபோக்கு அம்சமாக இருக்கவில்லை. மாறாக, வளங்குன்றா வாழ்வாதாரத்துக்குள் மேலும் பலரை ஈர்க்கும் ஒன்றாக இருந்தது.
சித்த மருத்துவர் கு.சிவராமன், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிராகப் போராடி வரும் கவிதா குருகந்தி, பாரம்பரிய நெல் வகைகளைப் பாதுகாத்து வரும் ‘நெல்’ ஜெயராமன் போன்று நமக்கு ஏற்கெனவே அறிமுகமான முகங்களுடன், நாடறிந்த சூழலியலாளர் ஆசிஷ் கோத்தாரி, பெங்களூருவில் ‘பஃபெல்லோ பேக்’ என்ற பெயரில் இயற்கை அங்காடி, பாரம்பரிய உணவு அங்காடியை நடத்திவரும் விஷாலா, 1,400 வகை நெல் வகைகளைப் பாதுகாத்துவரும் தேபால் தேவ் எனப் புதிய ஆளுமைகளும் இந்த நிகழ்ச்சியில் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ‘இந்தியாவின் எதிர்காலம்’ பற்றி நாடு முழுவதும் உள்ள பல்துறை ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளை ‘ஆல்டர்னேட்டிவ் ஃபியூச்சர்’ என்ற தலைப்பில் தான் தொகுத்த புத்தகத்தை வெளியிட்டார் ஆசிஷ் கோத்தாரி. அவர் பேசும்போது, “எதிர்ப்பு என்பது சமூக முன்னேற்றத்துக்கான ‘மாற்று’ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இருந்துவருகிறது. வருங்கால இந்தியா வளமுடனும் நலமுடனும் இருக்க மாற்று அரசியல், மாற்றுப் பொருளாதாரம், மாற்றுச் சமூகம், மாற்றுக் கலாச்சாரம், மாற்றுச் சூழலியல் ஆகியவை முக்கியம். மாற்று வாழ்க்கை முறையும் இன்று கவனம் பெற்று வருகிறது.
முன்பெல்லாம் வெளியூர் சென்றால் ஏதேனும் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்குவோம். இப்போது அப்படி இல்லை. பெரும்பாலான நகரங்களில் முன்பின் அறிமுகமில்லாத நிலையிலும் தங்களின் வீடுகளில் பயணிகள் சிலரைத் தங்க வைத்துக்கொள்பவர்கள் உருவாகி இருக்கிறார்கள். உணவும் பரிமாறுகிறார்கள். இதெல்லாம் இலவசம்தான். பரஸ்பரம் ஒரு மனிதர் மற்றொருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் இங்கு ரூபாய்க்குப் பதிலாகப் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. இப்படி ஒரு நடைமுறையை ‘ஃப்ரீ லாட்ஜிங்’ என்கிறார்கள்” என்றார்.
ஐ.டி. பணியை விட்டு இயற்கை வேளாண்மையில் இறங்கிய சுஜாதா மகேஷ் பேசும்போது, “வேலையை விட்டு, நகரத்தை விட்டு கிராமத்தில் இயற்கை வேளாண்மை செய்வது, மரக்கன்று நடுவது போன்ற எங்களின் பணிகளைப் பார்த்த கிராம மக்கள், தொடக்கத்தில் எங்களை மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போலப் பார்த்தார்கள். நானும் என் கணவரும் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டோமோ என்பது போன்ற விமர்சனங்கள்கூட எழுந்தன. இவற்றை எதிர்கொள்வது எங்களுக்குச் சவாலாக இருந்தது” என்றார்.
பாரம்பரிய விதைகளின் முக்கியத்துவம் பற்றிப் பேசிய இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன், “ஆங்கிலத்தில் ‘மைனர் மில்லட்ஸ்’ என்று சொல்வதை அப்படியே மொழிபெயர்த்து சிறுதானியங்கள் என்று சொல்கிறோம். சிறுதானியங்கள் என்று சொல்லி அவற்றைச் சிறுமைப்படுத்த வேண்டாம்.
இனி அவற்றை ‘அருந்தானியங்கள்’ என்று அழைப்போம். காட்டு உணவு, வேளாண் உணவு ஆகியவை நம்மிடையே இருந்தன. இன்றைய இயந்திரமயமாக்கல் சூழலில், ‘இண்டஸ்ட்ரியல் ஃபுட்ஸ்’ (தொழிற்சாலை உணவு) முந்தைய இரண்டு உணவு முறைகளை வேகமாக அழித்துவருகிறது” என்றார்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ‘எர்த் ட்ரஸ்ட்’ அமைப்பின் திட்ட இயக்குநர் நிம்மி ஜான் பேசும்போது, “எல்லோருமே காய்கறிகள், பழங்கள் என்றால் ‘இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்ற முன்தீர்மானத்துடன் இருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு கேரட் என்றால் சிவப்பாக, நேராக, நீளமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவ்வாறில்லாமல், கைகால் முளைத்த கேரட், குட்டியாக இருக்கும் கேரட் போன்ற முறையற்ற வடிவத்தில் உள்ள காய்கறிகளையோ பழங்களையோ மக்கள் நிராகரிக்கிறார்கள்.
அவையும் உணவுப் பொருட்கள்தானே? நீங்கள் அழகான கேரட் வாங்கினாலும் அதைச் சமைக்கத்தானே போகிறீர்கள்? அப்படியிருக்கும்போது, அழகில்லாத கேரட்டுகளை வாங்குவதில் நமக்கு ஏன் மனத்தடை?
கேரட் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தரப்படுத்தல் முறைகளால், உதகையில் ஒரு விவசாயி, விளைவித்த 10 ஆயிரம் கிலோ கேரட்டுகளில் சுமார் 4 ஆயிரம் கிலோ கேரட்டுகளை வீணாக இழக்க நேரிட்டது. மதிப்புக் கூட்டுப் பொருளாக அவற்றை மாற்றுவதற்கும் இங்கு போதிய வசதிகள் இல்லை. அதனால் அவை அழுகிப் போயின. அழகாக இல்லை என்ற ஒரே காரணத்துக்காக உணவு வகைகளை இப்படி வீணாக்குவது நியாயமானதா?” என்றார்.
இறுதியாகப் பேசிய தேபால் தேவ், “மனிதர்கள் சுமார் 200 வகை உணவுப் பயிர்களையும், 40 வகையான காட்டுயிர்களையும் பழக்கப்படுத்திவிட்டார்கள். முதன்முதலில் பழக்கப்படுத்தப்பட்ட உயிரினம் நாய்.
கடைசியாகப் பழக்கப்படுத்தப்பட்ட உயிரினம் முயல். அதற்குப் பிறகு கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பட்டியலில் ஒரு உயிரினம்கூடக் கூடுதலாகச் சேர்க்கப்படவில்லை.
மேற்கண்ட 200 வகை உணவுப் பயிர்களில் நாம் பயன்படுத்தாத நெல் வகைகளின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக்கிறது. 1970-ம் ஆண்டு, மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்தியாவில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் நெல் வகைகள் இருந்ததாகத் தெரிய வந்தது. அவற்றில் பலவற்றை இப்போது இழந்துவிட்டோம்” என்றார்.
இந்த நிகழ்வில் ஆளுமைகளின் பேச்சு அறிவை நிறைக்க, சிறுதானிய உணவுத் திருவிழா, இயற்கை வேளாண் பொருட்களின் கண்காட்சி போன்றவை வயிற்றையும் மனதையும் நிறைத்தன.