Last Updated : 10 Feb, 2018 11:47 AM

 

Published : 10 Feb 2018 11:47 AM
Last Updated : 10 Feb 2018 11:47 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 69: அருகிவிட்ட பண்டைய முறை

 

ழனி அருகே உள்ள மாமரத்தில் இருந்து விழும் பழங்களை பழன வயலில் உள்ள வாளை மீன் உண்ணும் என்று குறுந்தொகை குறிக்கிறது, இதன்மூலம் மீனும் நெல்லும் இணைந்து சாகுபடி செய்யும் மரபு நம்மிடம் இருந்தது தெரியவருகிறது.

“கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்” - குறுந்: 8:2

“வேழப் பழனத்து நூழிலாட்டு,” - மது: 257

சம்பங்கோரை கிடந்த பழன வயலைத் துழாவி வாளை மீன்களைப் பிடிக்கும் செய்தியை மலைபடுகடாம் கூறுகிறது,

“கண்பு மலி பழனம் கமழத் துழைஇ,

வலையோர் தந்த இருஞ் சுவல் வாளை” - மலை: 454

அல்லி பூத்திருக்கும் பழன வயலைப் பற்றி நற்றிணை குறிப்பிடுகிறது,

“ஆம்பல் அமன்ற தீம்பெரும் பழனத்து” - நற்: 200:6

தாமரை உள்ள பழன வயலையும் நற்றிணை சுட்டுகிறது,

“பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ” - நற்: 260:2

பழன வயலில் அயிரை மீன் இருந்ததை குறுந்தொகை கூறுகிறது.

“அயிரை பரந்த வந்தண் பழனத்” - குறுந்: 178:1

தாமரையும் வாளையும்

பழனத்துக்கு மருத நிலம் என்ற பெயரும் உள்ளது. நீர் நிறைந்த இடம் என்ற பொருளில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது,

பழன வயலில் உள்ள வாளை மீன்கள் பாளையை உண்டதாகப் பரிபாடல் குறிப்பிடுகிறது,

“பழன வாளை பாளை உண்டென” - பரி: 7:34

பழனப் பகுதி அதாவது மருதப் பகுதி என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது,

“செழும்பல் வைப்பிற் பழனப் பாலும்” - பதிற்று: 10:21

தாமரை பூத்த பழன வயலில் வாளை மீனை உண்ண வந்த நீர்நாயைப் பற்றி அகநானூறு குறிப்பிடுகிறது,

“சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,

அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,

வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்” - அகம்: 6:16

பரிசல் நெல் அறுவடை

பழன வாளை மீனைத் துண்டாக்கி வெண்சோற்றுடன் உண்ணும் செய்தியை புறநானூறு பதிவு செய்கிறது,

“பழன வாளைப் பரூஉக்கட் டுணியல்

புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை யாக” - புறம்: 61:4

“ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல் உகழ” என்று ஆண்டாள் திருப்பாவையில் குறிப்பிடுகிறார். பழன வாளை என்ற மீன் என்ற ஒரு வகை மீன் குறிப்பிடப்பகிறது.

இந்தப் பாடல்களில் குறிப்பிடப்படுவதைப் போல மடு முழுங்கி என்ற நெல் வெள்ளத்தை தாங்கி வளரும் தன்மை கொண்டதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். பரிசலில் சென்று நெல் அறுவடை செய்த நிகழ்வுகள் நடந்துள்ளன. நீர் உயரும்போது நெல்லும் உயரும் சிறப்புக் கொண்ட நெல் வகை இது. இப்படி நெய்தல் நில வேளாண்மையில் மீனையும் நெல்லையும் இணைத்துச் செய்யும் வேளாண்மை கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருக்கின்றன. ஆனால், நமது நாட்டில் இது அருகிவிட்டது.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x