

எ
ங்கள் மாடி வீட்டுக்கு ஊசித்தட்டான்கள் தொடர்ச்சியாக வந்து செல்கின்றன. இப்படி வழக்கமாக வந்து செல்வது குட்டி ஊசித்தட்டான் (Pygmy Dartlet). பச்சையும் கறுப்பும் கலந்த நிறத்தைக் கொண்ட இந்தத் தட்டானின் வால் செங்கல் நிறத்தில் இருக்கும். ஆனால், ஒரு முறை வந்திருந்த ஊசித்தட்டான் முன்பு பார்த்தவற்றிலிருந்து வேறுபட்ட நிறத்தில் இருந்தது. இந்த ஊசித்தட்டானின் வயிற்றுப் பகுதி பளிச்சென்ற மஞ்சள் நிறத்திலும் வால் போன்ற கடைசி கண்டம் நீல நிறத்திலும் இருந்தது.
புதிதாகப் பார்த்தது தங்க ஊசித்தட்டான். ஆங்கிலத்தில் Golden dartlet, அறிவியல் பெயர் Ischnura aurora. இந்த ஊசித்தட்டான் வகையில் ஆணும் பெண்ணும் ஒரே நிறத்தில் இருக்காது. பெண் தட்டான் ஆணைவிட மங்கலான நிறத்திலேயே இருக்கும். அத்துடன் பெண் தட்டானுடைய உடலின் கடைசி கண்டத்தில் நீல நிறம் தென்படாது. பறவைகளிலும் பூச்சிகளிலும் சில வகைகளில் ஆண்-பெண் வகைகள் மாறுபட்ட நிறத்திலிருக்கும். அவை தனி வகையென்று குழப்பிக்கொள்ளக் கூடாது.
இந்தியா மட்டுமின்றி கீழைத்தேய நாடுகள், ஆஸ்திரேலியா பகுதிகளில் ஆண்டு முழுவதும் காணப்படும் ஊசித்தட்டான் வகை இது. 2.5 செ.மீ. நீளம் கொண்ட இந்தத் தட்டான் நீர்நிலைகளுக்கு அருகிலும் திறந்த நிலப்பகுதிகளில் வளர்ந்திருக்கும் தாவரங்களின் மீதும் உலாவும்.
பொதுவாகத் தரையோடு பறக்கும் இயல்பைக் கொண்டது தங்க ஊசித்தட்டான். குளம், ஏரி, வயல்வெளி, புல்வெளி ஆகிய பகுதிகளில் பொதுவாகக் காணப்படுமாம். இது எதுவும் எங்கள் மாடி வீட்டில் இல்லை. எங்கள் வீட்டின் பின்புறம் உள்ள கடல்நீல நிறக் கதவில் தொற்றிக்கொண்டு தட்டான்கள் ஓய்வெடுக்கும். இப்படி எங்களைத் தேடி தட்டான்கள் மாடிக்கு வருவது எங்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?