புரிந்துகொள்ளப்படாத பாலூட்டி

சாம்பல் தேவாங்கு
சாம்பல் தேவாங்கு
Updated on
2 min read

இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு என் வேண்டுகோள் இதுதான். “உங்கள் வருங்காலச் சந்ததியினருக்குத் தூய்மையான காட்டையும், அதன் உயிர்நாடியான உயிரினங்கள், பறவைகள், மலைகள், நதிகள், பள்ளத்தாக்குகள், மரங்கள், செடிகொடிகள் ஆகியவற்றையும் அப்படியே விட்டுச் செல்லுங்கள். அது ஒன்றே நமது நாட்டைப் பெருமைகொள்ள வைக்கும்.” - ஜிம் கார்பெட்

சிறிய வகைப் பாலூட்டிகளிலேயே மனிதர்களால் வெறுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட, பேரழிவைச் சந்தித்த உயிரினம் தேவாங்குகளாகத்தான் இருக்க முடியும். தேவாங்கு என்னும் சிறிய உருவமுடைய பாலூட்டியானது ஓர் இரவாடி. Primates எனப்படும் குரங்கினத்தைச் சேர்ந்த விலங்குகளில் தேவாங்கும் ஒன்று.

தேவாங்குகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை 1) சாம்பல் தேவாங்கு (Loris lydekkerianus) 2) செந்தேவாங்கு (Loris tardigradus).சாம்பல் தேவாங்கு தென்னிந்தியா,இலங்கையிலும், செந்தேவாங்கு இலங்கையிலும் காணப்படுகின்றன.

உடலுக்கு சம்பந்தமில்லாத உருண்டையான தலை, துருத்திய பெரிய கண்கள், கண்களைச் சுற்றிப் பழுப்புநிற வளையம், புசுபுசு என்கிற ரோமம், குச்சி போன்ற கைகளும் கால்களும், மொட்டையான வாலும் கொண்ட தோற்றத்தைப் பெற்றது. இவை சராசரியாக 18 செ.மீ. முதல் 26 செ.மீ. நீளமும், 85 முதல் 350 கிராம் வரை எடையும் கொண்டவையாக இருக்கும். அழகு என்று நமக்குப் போதிக்கப்பட்ட வரையறையின்படி பார்த்தால், இதன் தோற்றம் நம் ஆர்வத்தைச்சட்டென்று கவர்வதில்லை.

பழக்க வழக்கங்கள்: பகலில் இவற்றைக் காண்பது அபூர்வம். அடர்ந்த மரக்கிளைகளில் உள்ள பொந்துகள் அல்லது சிறு குச்சி, தழைகளால் அமைக்கப்பட்ட கூடுகளில் ஓய்வெடுக்கும். இரவில் மட்டுமே சுறுசுறுப்பாக இரை தேடி இயங்கும்.

இவற்றின் உணவுப்பட்டியலில் பறவைகளின் முட்டைகள், புழு பூச்சிகள், பல்லிகள், வெட்டுக்கிளிகள், ஓணான்கள் ஆகியவை முதன்மையாக உள்ளன. சில வேளைகளில் தழைகள், சில வகைப் புற்கள் ஆகியவற்றையும் உண்ணும். ஓணானின் செதில்கள், எலும்புகளையும்கூடத் தின்றுவிடும். அவற்றைத் தேவாங்கு எளிதில் செரித்துவிடுவது விந்தைதான்.

தேவாங்குகளின் உடல் நீளமாக இருப்பதால், அவை விரும்பியப்படி எல்லாத் திசைகளிலும் திரும்பி அருகே உள்ள கிளைகளைப் பற்றி நகர்ந்து செல்ல ஏதுவாக இருக்கிறது. இவற்றின் கைகளும் கால்களும் அதிகப் பிடிப்புத்திறன் கொண்டுள்ளதால், நீண்ட நேரத்திற்கு மரக்கிளைகளைப் பற்றித் தழுவி, நகர்ந்து செல்லவும், கிளைகளில் தலைகீழாகத் தொங்கியபடி இருக்கவும் வசதியாக உள்ளது.

இவை உண்ணும் இலை தழைகளிலேயே தேவையான நீர்ச்சத்து கிடைப்பதால் தேவாங்குகள் தனியாக நீர் அருந்துவதில்லை. வாரத்திற்கு ஒருமுறைதான் மலம் கழிக்கும். தேவாங்கின் ஆயுள்காலம் 12 முதல் 14 ஆண்டுகளாகும்.

இனப்பெருக்கம்: தேவாங்குகள் வருடத்திற்கு இரண்டு முறை குட்டிகளை ஈனும். கர்ப்ப காலம் சுமார் ஐந்து மாதங்கள். பிறந்த தேவாங்குக் குட்டி 20 செ.மீ. நீளமும், 50 முதல் 60 கிராம் எடையும் கொண்டிருக்கும். இரண்டு குட்டிகள் அல்லது ஒரு குட்டியைப் பிரசவிக்கும்.

ஐந்தாறு மாதங்களுக்குப் பாலை மட்டுமே புகட்டி வளர்க்கும். அதுவரை குட்டிகள் குரங்குக் குட்டிகள்போலத் தாயின் மார்பை அணைத்தபடியே பயணிக்கும். அதன்பின் தனித்து விடப்படும்.

இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியாவில் வங்க தேசம், கிழக்கு பிலிப்பைன்ஸ், சீனாவின் யுனான் மாகாணம், ஜாவாவின் தென்பகுதி ஆகிய பகுதிகளில் தேவாங்குகள் பரவலாகக் காணப்படுகின்றன.

தேவாங்கு
தேவாங்கு

மூட நம்பிக்கைகள்: லண்டன் பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் சங்கம், நம் நாட்டுக் காட்டியல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியின்படி கிடைக்கப் பெற்ற தரவுகள்:

பாரம்பரிய மருந்துகள், சடங்குகள், மந்திரங்கள், கலாச்சார நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட மற்ற விலங்கு களைவிட தேவாங்குகள்தாம் அதிக அழிவைச் சந்தித்துள்ளன. இவற்றிற்கு முக்கியக் காரணி மக்களின் மூடநம்பிக்கையே.

தேவாங்குகளின் உடலில்உள்ள ஒவ்வோர் உறுப்பும் மருத்துவக் குணமுடையது என்று கண்மூடித்தனமாக மக்கள் நம்புவதால் கள்ளவேட்டைக் காரர்களால் இவை கணக்கு வழக்கில்லாமல் உயிரிழப்பைச்சந்தித்து வருகின்றன.

நம் நாட்டில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி அட்டவணை 1இல் தேவாங்குகள் கடுமையான சட்டப் பாதுகாப்பிற்கு உட்பட்டிருந்தபோதும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமையால் அழிவுக்கு ஆளாகின்றன.

விவசாயியின் தோழன்: பயிர்களைத் தாக்கி விவசாயத்திற்குப்பேரழிவை ஏற்படுத்தும் புழு, பூச்சிகள், வெட்டுக்கிளிகள் ஆகியவற்றைத் தேவாங்கு உணவாகக் கொள்வதால், இயல்பாகவே இவை விவசாயிகளின் தோழனாகக் கருதப்படுகிறது. காடுகளில் சூழலியல் சமநிலையைப் பேணுவதில் Keystone Species எனப்படும் ‘உயிர்நாடி உயிரின’மாக தேவாங்குகள் செயல்படுகின்றன எனக் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

தேவாங்கு சரணாலயம்: தமிழ்நாடு மாநில அரசு, இந்தியா விலேயே முதல் முறையாக கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கடவூர், அய்யலூர் வனப்பகுதிகளை உள்ளடக்கி தேவாங்கு சரணாலயமாக ஆணை பிறப்பித்துப் பணிகளைத் துரிதமாகச் செயல்படுத்தி வருகிறது.

யாருக்கும் எந்தத் தீங்கையும் செய்யாத, பாவப்பட்ட தேவாங்குகளை, எல்லா மக்களும் ஒன்றுபட்டு, அவற்றின் அழிவைத் தடுக்க முயலாவிட்டால், இந்தியா தனது பாலூட்டிகளில், சிறந்த ஓர் இனத்தை இழந்து வருந்த நேரிடும் என்பதில் ஐயமில்லை.

- கட்டுரையாளர், இயற்கை ஆர்வலர்; krishnarajp70@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in