Last Updated : 10 Feb, 2024 06:00 AM

 

Published : 10 Feb 2024 06:00 AM
Last Updated : 10 Feb 2024 06:00 AM

இயற்கையின் பேழையிலிருந்து! 22: அறிவின் ஊற்றுக்கண்ணாகத் தஞ்சாவூரை மாற்றிய சரபோஜி

சரஸ்வதி மஹால் நூலகம்

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் நவீனத் தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்த தகவல் பரிமாற்றத்தில் பெருநகரமான லண்டனுடன் தஞ்சாவூர் நேரடியாகத் தொடர்பில் இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் அக்காலகட்டத்தில் தஞ்சாவூரை ஆண்ட இரண்டாம் சரபோஜி. அவருக்கு இருந்த அறிவுப்பசி; கலை, இலக்கியம், மருத்துவம், இயற்கை வரலாறு எனப் பல துறைகளில் இருந்த அளவுகடந்த ஆர்வம்; ஆராயும் குணம் ஆகியவற்றால் தஞ்சாவூரை அறிவின் ஊற்றுக்கண்ணாக அவர் ஆக்கியிருந்தார்.

ஓர் இடம் பலவிதமான அறிவுத்தளங்களின் தோற்றுவாயாகவும், அது சார்ந்த தகவல்களைப் பல இடங்களுக்குப் பரப்புவதிலும் சிறந்துவிளங்கினால் ஆங்கிலத்தில் அதை Centre of Calculation என்பர்.சரபோஜி காலத்தில் தஞ்சாவூர், அப்படிப் பட்ட ஓர் இடமாக இருந் திருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அறிவுசார் படைப்புகள், அது சார்ந்த பணிகளில் ஈடுபடுவது போன்ற யாவும் அவர்களுக்கே உரித்தானதாக இருந்திருக்கின்றன. இதற்கு விதிவிலக்காக இருந்தது இரண்டாம் சரபோஜியும் அவரது பணிகளும்.

கலை, அறிவியல் போன்ற துறைகளில் ஐரோப்பிய முறைகளை மட்டுமே பின்பற்றாமல் உள்ளூர் அறிவையும் சேர்த்துப் படைத்ததாலேயே அவருடைய பங்களிப்புகள் தனித்துவமானதாகின்றன. அறிவொளிக் காலத்தில் (Age of Enlightenment) முக்கியமான ஒருவராக, ஆங்கிலேயர் அல்லாத ஓர் அறிஞராகத் திகழ்ந்தவர் இரண்டாம் சரபோஜி.

கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள், பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட உள்ளுறைஞர்கள் (Residents), மருத்துவர்கள், தஞ்சாவூரிலும் தரங்கம்பாடியிலும் இருந்த கிறிஸ்துவ மிஷனரிகள், அவரது அரசவையில் இருந்த பல்துறை மேதைகள் என யாவரும் அவரது அறிவுசார் பணிகளுக்கு உதவியாக இருந்துள்ளனர். எனினும் சரபோஜியின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர் அவரது குரு கிறிஸ்டியன் பிரீட்ரிக் ஸ்வார்ஷ் பாதிரியார்தான்.

தஞ்சாவூர் தானியங்களின் ஓவியத்
தொகுப்பில் ஒன்றான கொட்டை
முத்து தாவரத்தின் ஓவியம்.
நன்றி: Library and Archives,
Natural History Museum, London

கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள்: சரபோஜியின் ஆட்சிக் காலத்தில் உள்ளுறைஞராக இருந்தவர் பெஞ்சமின் டோரின். இந்த உள்ளுறைஞர்கள் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டவர்கள். இந்திய மன்னர்களின் ஆட்சி பிரிட்டிஷ் அரசின் போக்குக்கு ஏற்ப நடக்கின்றனவா என்று பார்த்துக்கொள்வது இவர்களது வேலை. தென் தமிழ்நாட்டில் பாளையக்காரர்கள் ஆட்சி செய்தபோது (தற்போதுள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகள்) 1790இல் கலெக்டராக இருந்தவர் டோரின். பணி ஓய்விற்குப் பிறகு 1801இல் இவர் இங்கிலாந்து திரும்பினார்.

எனினும், அங்கிருந்துகொண்டே சரபோஜியின் தனிப்பட்ட முகவராக சுமார் இருபது ஆண்டுகள் செயல்பட்டார். தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள சரபோஜியின் பளிங்கு உருவச் சிலை, தேவநாகரி மொழியில் இயற்றப்பட்ட நூல்களுக்கான அச்சகம், சரபோஜி ராஜாவின் குருவான கிறிஸ்டியன் பிரீட்ரிக் ஸ்வார்ஷ் பாதிரியாரின் நினைவாக மதராஸ் புனித மேரி ஆலயத்தில் எழுப்பப்பட்ட நினைவுச்சின்னம் போன்ற காரியங்களைச் செய்து முடிக்க டோரின் பேருதவி புரிந்தார்.

அறுவை சிகிச்சைக்கான கருவிகள், மருந்துகள், கலப்பில்லாத குதிரைகள், வளர்ப்பு நாய்கள், கால்நடைகள் யாவற்றையும்கூட இங்கிலாந்தில் இருந்து அனுப்ப இவர் உதவி செய்தார். இதற்குக் கைமாறாக சரபோஜி அரசவையில் இருந்த தஞ்சாவூர் பாணி ஓவியர்களான மூச்சீஸ் (Moochies) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தீட்டிய காட்டுயிரினங்கள், தாவரங்கள் போன்றவற்றின் ஓவியங்கள் பல டோரினுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 117 ஓவியங்கள் தற்போது பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ளன. இவற்றில் ஒன்று சிவிங்கிப்புலியின் (Cheetah) ஓவியம்.

வில்லியம் பிளாக்பர்ன் ராணுவத்தில் பணிபுரிந்தவர். இந்துஸ்தானி, மராத்தி மொழிகளைக் கற்றறிந்தவர். ஸ்வார்ஷ் பாதிரியாரின் மறைவுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசுக்கும் சரபோஜி மன்னருக்கும் இடையே மராத்தி மொழிபெயர்ப்பாளராக இவர் இருந்துள்ளார்.

நுண்ணோக்கி முதலான பல்வேறு ஆராய்ச்சிகளுக்கான கருவிகளையும் இவர் சரபோஜிக்குப் பெற்றுத்தந்துள்ளார். வில்லியம் சாமர்வல் மிட்ஷெல் தஞ்சாவூரில் இருந்த உள்ளுறை மருத்துவர் (Resident Surgeon). இவரிடமிருந்தே உடற்கூறு (anatomy) குறித்த பாடங்களை சரபோஜி கற்று வந்தார். மேலும் மருத்துவக் கருவிகள், மருத்துவம், இயற்கை அறிவியல் சார்ந்த நூல்களையும் பெற்றுவந்தார்.

இரண்டாம் சரபோஜி ராஜா

கிறிஸ்துவ மிஷனரிகள்: ஸ்வார்ஷ் பாதிரியாரின் மறைவுக்குப் பிறகு ஜான் கஸ்பர் கோல்ஆஃப் தஞ்சாவூர் மிஷனரிக்குத் தலைமை வகித்தார். இவர் சரபோஜிக்குத் தமிழ் மொழிபெயர்ப்பாளராக இருந்துள்ளார். தரங்கம்பாடியில் இருந்த கிறிஸ்டோபர் சாமுவேல் ஜான், யோஹான் பீட்டர் ராட்லர் போன்றோர் சரபோஜியின் தாவரங்கள், மற்ற உயிரினங்கள் சேகரிப்பு சார்ந்த இயற்கை அறிவியல் தொடர்பான கலந்தாய்வுகளின் மூலம் நெருங்கிய தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர்.

துறைசார் நூல் சேகரிப்பு: சரஸ்வதி மகால் நூலகம் 16ஆம் நூற்றாண்டில் நாயக்கர்களால் தொடங்கப்பட்டிருந்தாலும், அதை மேம்படுத்திய பெருமை சரபோஜியையே சேரும். துறைசார் நூல்கள் பலவற்றை ஐரோப்பிய நாடுகளில் இருந்து தருவித்து, அவரது சேகரிப்பில் வைத்திருந்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்ததால் பல ஆங்கில நூல்கள், செய்தித்தாள்கள், இதழ்கள் பலவற்றை அவரது தொடர்பில் இருந்தவர்களின் உதவியால் தஞ்சாவூருக்கு வரவழைத்துள்ளார். இவரது நூலகத்தில் இருந்த சேகரிப்புகளைப் பல ஆங்கிலேய வல்லுநர்களுக்கும் தந்து உதவியுள்ளார்.

அரசவை ஓவியர்கள்: சரபோஜியின் அரசவையில் பல ஓவியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு, அவர்களுக்குத் துறை சார்ந்த ஓவியங்களைத் தீட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. சரபோஜியே ஓவியங்களைத் தீட்டியுள்ளதாகவும் குறிப்புகள் உள்ளன. மூச்சீஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்களான இந்த ஓவியர்களில் சிறந்து விளங்கியவராக கோபன் சித்தர் (ஆங்கிலத்தில் Coopan Sithar) அறியப்படுகிறார்.

தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் முதலியவற்றை ஓவியமாகத் தீட்டுவதில் இவர் கைதேர்ந்தவர். Tanjour Grains என்று தலைப்பிட்ட தஞ்சாவூர் தானியங்களின் பதின்மூன்று கையடக்க ஓவியங்களின் (15 செமீ உயரமே உள்ள) தொகுப்பு லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ளது. இவை 1790களின் தொடக்கத்தில் தீட்டப்பட்டவை. இந்த ஓவியங்களைத் தீட்டியது கோபன் சித்தராக இருக்கக்கூடும் என வரலாற்று ஆசிரியரான சாவித்திரி பிரீதா அனுமானிக்கிறார்.

இவரது மறைவிற்குப் பின் வெங்கடபெருமாள், வெங்கடநாராயணா, கோபாலகிருஷ்ண நாயக், கோபாலு ஆகியோர் இயற்கை அறிவியல் சார்ந்த ஓவியங்களைத் துல்லியமாகத் தீட்டப் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது. சரபோஜியின் தொடர்பில் இருந்த பல ஆங்கிலேய அறிஞர்களும் இந்த ஓவியர்களின் பணியை நாடியபோதெல்லாம், அவர்களுக்கும் ஓவியங்கள் தீட்ட சரபோஜி உதவியுள்ளார்.

உலகின் பல இடங்களில் இருந்து பல அறிவியல் அறிஞர்கள் குறிப்பாக, இயற்கை அறிவியல், மருத்துவத் துறையில் ஆர்வமுள்ளவர்கள், நூலகத்தையும் சரபோஜியையும் காண்பதற்குத் தஞ்சாவூருக்கு வருகை தந்துள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தஞ்சாவூர் அறிவொளியைப் பரப்பும் ஒரு மையமாக உருவெடுக்க காரணமாக இருந்த இரண்டாம் சரபோஜியை, காலத்தை மீறிச் சிந்தித்தவராகக் கருதுவதில் எந்தத் தவறும் இல்லை.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x