Published : 17 Feb 2018 10:59 AM
Last Updated : 17 Feb 2018 10:59 AM

இயற்கை அங்காடிகளின் முன்னோடி

இயற்கை வேளாண்மைக்கு இதுவரை எத்தனை பேர் மாறியிருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இன்று தமிழகம் முழுவதும் இயற்கை அங்காடிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அந்த இயற்கை அங்காடிகளுக்கு எல்லாம், முன்னோடியான அங்காடியாக ஒரு வகையில் இருந்தது, சென்னையில் உள்ள ‘ரீஸ்டோர்’.

சென்னையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிறுதானியங்கள் வாங்க வேண்டுமென்றால், அதற்கான ஒரே கடையாக இருந்தது ‘ரீஸ்டோர்’ இயற்கை அங்காடி. நேரடியாக உழவர்களிடமிருந்து பொருட்களைக் கொள்முதல் செய்வது, இயற்கை வேளாண் முறை மூலம் விளைந்த பொருட்களை மட்டுமே விற்பனைக்கு எடுத்துக்கொள்வது, அந்தப் பொருட்களை விற்றுக் கிடைக்கிற லாபத்தில் சுமார் 60 - 70 சதவீதம்வரை உழவர்களுக்கே கொடுப்பது, விவசாயிகளின் நிஜமான பிரச்சினைகளைச் சொல்லி பொருட்களை விற்பது எனப் பல புதுமையான வழிகளைக் கையாண்டு இயற்கை வேளாண்மை பற்றி மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது ‘ரீஸ்டோர்’.
 

17CHVAN_RESTOREOFM02

இந்த அங்காடியின் ‘பிசினஸ் மாடலை’ பார்த்து, பலரும் இதுபோன்ற கடைகளை ஆரம்பித்தார்கள். இயற்கை வேளாண்மையின் மீதும், உழவர்களின் நலன் மீதும் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்களின் கடைகள் இன்று தாக்குப்பிடித்து நிற்கின்றன.

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்களும், இயற்கை விவசாயத்தை மேல்தட்டு மக்களுக்கான விஷயமாக மாற்றியவர்களும், இயற்கை விவசாயம் மூலம் விளைந்த பொருள் என்று சொல்லி ஏமாற்றிய போலிகளும் காணாமல் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைக்கு தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலும், சுற்றுச்சூழல், இலக்கியம், புத்தகக் கண்காட்சி என எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும், அங்கு பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகள் கிடைக்கின்றன.

இந்த மாற்றத்துக்கு வித்திட்டத்தில் ‘ரீஸ்டோ’ருக்கும் பங்கு உண்டு. இந்த அங்காடிக்கு இந்த ஆண்டு 10 வயதாகிறது. அதையொட்டி, இந்தக் கடையைத் தொடங்கியவர்களில் ஒருவரும், மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவருமான அனந்துவைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…

வேலையை விட்டு விவசாயத்துக்கு

“தமிழகத்தில் இன்று, மிக நல்லதொரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. ஐ.டி.துறையில் பணியாற்றும் இளைஞர்கள் பலர், கை நிறைய சம்பளம் வாங்கினாலும், வேலையைத் துறந்து கழனியில் இறங்கி விவசாயம் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நானும் என் மனைவி சுமதியும்கூட அப்படித்தான் வந்தோம்.

நாங்கள் இருவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தோம். எங்கள் பணி வாழ்க்கையின் கடைசி ஆறு ஆண்டுகளில், சுவிட்சர்லாந்தில் இருந்தோம். பின்பு ஒரு நாள், ‘இனி பணத்துக்காக மட்டுமே எங்கும் பணியாற்றக் கூடாது’ என்று முடிவெடுத்து வேலையை விட்டோம். இந்தியா திரும்பினோம். அப்போது ராதிகா, சங்கீதா ஸ்ரீராம், உஷா ஹரி, மீரா என்று எங்களைப் போலவே இன்னும் சிலர் ஒத்த சிந்தனையுடன் இருப்பதைக் கண்டோம். சங்கீதா ஸ்ரீராம்தான் எங்களை ஒருங்கிணைத்தார்.

பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு, வேளாண்மை சார்ந்து ஏதாவது செய்யலாம் என்று முடிவெடுத்தோம். உடனே பல கிராமங்களுக்குச் சென்று உழவர்களைச் சந்தித்தோம். அப்போது விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதற்கான முக்கியக் காரணம், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்குச் சரியான சந்தையும் சரியான விலையும் கிடைக்கவில்லை என்ற உண்மையை அறிந்தோம்.

இதற்கு என்ன தீர்வு என்று யோசித்தபோது, ‘நாம் ஏன் அந்தப் பொருட்களை வாங்கி விற்கக் கூடாது?’ என்ற கேள்வி எழுந்தது. அதைச் செயல்படுத்துவதற்குச் சில்லறை வணிகம்தான் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். அப்படித் தொடங்கியதுதான் ‘ரீஸ்டோர்’ இயற்கை அங்காடி” என்று புன்னகைத்துவிட்டு சற்று இடைவெளி எடுத்துக்கொண்டார்.

லாப நோக்கமற்ற வணிகம்

அடையாறில், நண்பர் ஒருவரின் ‘கார் நிறுத்துமிட’த்தில் தொடங்கப்பட்டதுதான் ‘ரீஸ்டோர்’. இப்போதுவரை மூன்று இடம் மாறிவிட்டது. இன்றுவரை, அதன் முதன்மைக் கடைக்குக்கூட நிரந்தர இடம் இல்லை. “வேறென்ன… காசுதான் பிரச்சினை!” என்கிறார் அனந்து. அதேநேரம், ஆக்கப்பூர்வமான அம்சமாக சென்னையில் 10 இடங்களில் ‘ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்கெட்’ (ஒ.எஃப்.எம்.)என்ற பெயரில் இதன் கிளைகள் இன்றைக்கு விரிந்துள்ளன.

“நாங்கள் இந்தக் கடையை ஆரம்பித்தபோது, எங்களின் கொள்கை ‘பியாண்ட் ரீடெய்ல்’ (சில்லறை வணிகத்தையும் தாண்டி) என்பதாக இருந்தது. அதனால் லாப நோக்கமற்று, தன்னார்வலர்களைக் கொண்டு கடையை நடத்துவது என்று தீர்மானித்தோம். எனவேதான் இன்றுவரை வாடகை இடங்களில் இயங்கி வருகிறோம்.

ஐ.டி. துறையில் பணியாற்றிய பல இளைஞர்கள், அங்கு வாங்கிய ஊதியத்தைவிட குறைவாக இருக்கும் என்று தெரிந்தும் மனநிறைவுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். இன்னும் சிலர் ஐ.டி. துறையில் இருந்துகொண்டே தன்னார்வலராகப் பங்களித்து வருகிறார்கள்” என்றவரிடம், நுகர்வோரையும் விவசாயிகளையும் ‘ரீஸ்டோர்’ எப்படி இணைக்கிறது என்று கேட்டோம்.

“ஒவ்வொரு அரிசியிலும் உங்களின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது’ என்பார்கள். ‘ரீஸ்டோர்’ அங்காடியைப் பொறுத்தவரை, இங்குள்ள ஒவ்வொரு பொருளுக்குப் பின்னும், அதை விளைவித்த உழவரின் பெயர் இருக்கும். அதனால், நுகர்வோரே எங்களிடம் குறிப்பிட்ட உழவரின் பெயரைச் சொல்லி, அவரிடமிருந்து பொருள் வந்திருக்கிறதா என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு ‘ரீஸ்டோர்’ ஒரு பாலமாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி.

அது மட்டுமல்ல. வேறு கடைகளைப் போல, இங்கு எந்தப் பொருளையும் நாங்கள் ‘பிளாஸ்டிக் பேக்கிங்’ செய்வதில்லை. எண்ணெய் வாங்க வேண்டுமென்றால், நுகர்வோர் வீட்டிலிருந்து பாட்டில் கொண்டுவர வேண்டும். அதேபோல, காய்கறி வாங்க பைகளைக் கொண்டுவர வேண்டும். அப்படித்தான் எங்கள் கடைக்குப் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். இப்படி ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தியதுதான் ‘ரீஸ்டோர்’ செய்த பெரும் சாதனை” என்கிறார்.

விவசாயிகள் வைக்கும் விலை

தொடக்கத்தில் செங்குன்றம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய பகுதிகளிலிருந்து பழங்கள், காய்கறிகள் போன்றவற்றைக் கொள்முதல் செய்துவந்தார்கள். இப்போது தமிழகத்தின் வேறு பகுதிகளிலிருந்தும் வேறு மாநிலங்களிலிருந்தும் பொருட்களைக் கொள்முதல் செய்கிறார்கள்.

“அன்றெல்லாம் அந்தப் பகுதிகளில் விவசாய நிலங்கள் இருந்தன. காலம் செல்லச் செல்ல, அவை ரியல் எஸ்டேட்டாக மாறிவிட்டன. அதனால் நாங்களும் எங்களின் பரப்பளவை நீட்டித்துக்கொண்டோம். இன்று, எங்கள் கடையில் கிடைக்கும் கோதுமை, மகாராஷ்டிராவிலிருந்து வருகிறது. எங்கள் கடையின் ஆடை ரகங்களின் அங்கமான ‘துலா’ அமைப்புக்குத் தேவைப்படும் பருத்தி, இயற்கை சாயங்கள் கர்நாடகத்திலிருந்து வருகின்றன.

17CHVAN_RESTOREOFM03 ‘ரீஸ்டோர்’ இயற்கை அங்காடியில் அனந்து right

எங்களுக்கு அனுப்பும் பொருட்களுக்கு, உழவர்களே விலை நிர்ணயிக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, எங்களிடம் துவரம் பருப்பு 120 ரூபாய், 140 ரூபாய் என இரண்டு விலைகளில் கிடைக்கும். ஆனால் 140 ரூபாய் வைத்து விற்கிற அளவுக்கு அந்தத் துவரம் பருப்பில் என்ன இருக்கிறது என்று நுகர்வோர்கள் கேட்டால், அதற்கான காரணத்தை விளக்குவோம்.

துவரம் பருப்பை விளைவித்த விவசாயி, கடனில் சிக்கிக்கொண்டு பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்ற உண்மையைச் சொல்வோம். 140 ரூபாய் விலை கொண்ட அந்த துவரம் பருப்புதான் முதலில் விற்றுத் தீரும்.

இயற்கை வேளாண் முறையில் விளைந்தது என்று சொல்லி, எந்த விவசாயி எங்களுக்குப் பொருளை அனுப்பினாலும் அதை நாங்கள் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. அவரது நிலத்துக்கே நேரடியாகவும் திடீரென்றும் சென்று, இயற்கை முறையில் வேளாண்மை செய்கிறாரா என்று பரிசோதித்து விட்டுத்தான் பொருட்களை வாங்கிக்கொள்வோம்” என்றவரிடம், ‘இன்றைக்கு நிறைய இயற்கை அங்காடிகள் வந்துவிட்டனவே. போட்டி எப்படி இருக்கிறது?’ என்று கேட்டோம்.

“இந்தியாவில் இயற்கை வேளாண்மைக்கான சந்தை இன்றைக்கு ஒரு சதவீதம்கூட இல்லை. தேவை அதிகமாக இருக்கிறது. அதனால், இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கான விலையும் அதிகமாக இருக்கிறது. என்றாலும், மக்கள் அந்தப் பொருட்களைத் தேடிச் சென்று வாங்க விரும்புகிறார்கள். சொல்லப் போனால், இன்னும் நிறைய இயற்கை அங்காடிகள் வர வேண்டும். ஆனால், அப்படிக் கடை ஆரம்பிப்பவர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கை வேளாண்மை என்பது சில்லறை விற்பனையுடன் முடிந்துவிடுவது அல்ல, அது ஒரு நெடும் பயணம்!” என்று விடைகொடுக்கிறார் அனந்து.

‘ரீஸ்டோர்’, ஒ.எஃப்.எம். தொடர்புக்கு: 98417 66299

இன்றும் நாளையும் 10-ம் ஆண்டு விழா

‘ரீஸ்டோர்’ தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, சென்னை ஸ்டெல்லா மேரி மகளிர் கல்லூரியில் இன்றும் நாளையும் பாரம்பரிய உணவுத் திருவிழாவும் கருத்தரங்கமும் நடைபெறுகின்றன. சுற்றுச்சூழல், வேளாண்மை சார்ந்து நிபுணர்கள் கருத்துரைக்கும் அமர்வுகளும் உள்ளன. இதில் பிரபல சூழலியலாளர் ஆசிஷ் கோத்தாரி, 1,400 நெல் வகைகளைப் பாதுகாத்து வரும் தேபால் தேவ், சித்த மருத்துவர் கு. சிவராமன், பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், நெல் ஜெயராமன், நடிகைகள் ரேவதி, ரோஹிணி, உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்கின்றனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x