

கடந்த சில நூற்றாண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த பசுங்குடில் வாயு வெளியேற்றத்தின் காரணமாகக் காலநிலையில் நிகழ்ந்துவரும் மாற்றங்களின் விளைவுகளை, 21ஆம் நூற்றாண்டில் வாழும் மக்களும் வன உயிர்களும் சந்தித்துவருகிறார்கள். 2023 டிசம்பரில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களும் தென் மாவட்டங்களும் வெள்ளத்தில் சிக்கித் திணறியது சமகால உதாரணம். புவி வெப்பமாதலின் விளைவாக நன்னீர்ப் பற்றாக்குறை, உணவுப் பொருள் தட்டுப்பாடு, பொருளாதார மந்தம், வேலையின்மை, தொற்றுநோய்ப் பெருக்கம் போன்ற நெருக்கடிகள் உருவாகின்றன. 2030ஆம் ஆண்டு தொடங்கி, உலகெங்கும் ஒரு வருடத்திற்குக் கிட்டத்தட்ட 560 இயற்கைப் பேரிடர்கள் நிகழலாம் என்றும், 3-10 கோடி பேர் வரை வாழ்வாதாரங்களை இழந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
பேரிடர் அபாயத்தில் இருக்கும் மக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 13ஆம் தேதி சர்வதேச இயற்கைப் பேரிடர் தாக்கத்தை மட்டுப்படுத்தும் நாள் (International Day for Natural Disaster Risk Reduction) கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் போதிய அளவு இல்லை. இந்நிலையில், பேரிடர் ஆபத்துக்கு முகம்கொடுக்க நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம்?
ஆபத்தை உணராத அரசுகள்: பேரிடர் காலத்தில் ஏற்படும் இழப்புகளைத் தவிர்ப்பது, பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது, பேரிடர் காலத்திற்கான தனி நிதி ஆதாரங்களைப் பெருக்குவது, தகவல் பரிமாற்றத்தைச் செழுமைப்படுத்துவது எனப் பல்வேறு பணிகளை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. பேரிடர் சம்பந்தப்பட்ட ஆய்வு அறிக்கைகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் அணுகுவது மிக அவசியம். ஆனால், பெரும்பாலும் ஆட்சியாளர்கள் இவ்விஷயத்தில் உரிய கவனம் செலுத்துவதில்லை.
2023 அக்டோபர் சிக்கிம் மாநிலத்தில் நீரிடி (மேக வெடிப்பு) காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மலைப்பகுதியில் உறைநிலையில் இருந்த லோனாக் ஏரி நீரானது, கனமழையின் காரணமாக உருகி தீஸ்தா ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, சாங்தாங் என்கிற பகுதியில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தப் பகுதியில்தான் மாநில அரசின் நீர்மின் நிலையம் அமைந்துள்ளது. இப்பகுதியில் பேரிடர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என 2013, 2019, 2021 காலகட்டத்திலேயே அறிவியலாளர்கள் எச்சரித்தனர். Geomorphology என்கிற அறிவியல் இதழில் 2021ஆம் ஆண்டு இந்திய, அமெரிக்க அறிவியலாளர்கள் ஒரு கட்டுரையையும் வெளியிட்டுள்ளனர். அதில், சாங்தாங் பகுதியில் உள்ள நீர் மின் நிலையம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், சிக்கிம் அரசோ மத்திய அரசோ அதைப் பொருள்படுத்தவேயில்லை.
மகாராஷ்டிரத்தின் ஜெய்தாபூரில் அமையவிருந்த அணுமின் நிலையத் திட்டம் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த புவி இயற்பியலாளர் ரோஜர் பில் ஹாம், 2012இல் அரசுக்கு ஓர் அறிக்கை கொடுத்திருந்தார். ஜெய்தாபூர் பகுதி நிலநடுக்கம் அதிகம் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ள பகுதி என்பதால், அங்கு அணு உலையை வைப்பது அணுகுண்டு வெடிப்பதற்குச் சமமான செயல் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதை அலட்சியம் செய்த மத்திய – மாநில அரசுகள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்தன. அது மட்டுமல்ல, ரோஜர் பில் ஹாம் சுற்றுலா விசாவில் ஆறு முறைக்கு மேல் வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கொடுமையும் நடந்தது.
இந்தியாவின் 551 மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மேக வெடிப்பு, அதிதீவிர மழை, வெள்ளப்பெருக்கு போன்ற நிகழ்வுகளுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால், இவற்றில் 137 மாவட்டங்களில் மட்டுமே வெள்ள அபாயம் பற்றி எச்சரிக்கும் மையம் உள்ளது. பேரிடர் மேலாண்மை குறித்த நமது அரசுகளின் அக்கறை இதுதான்.
ஒடிஷா கற்றுக்கொண்ட பாடம்: 1999 அக்டோபரில், வட இந்தியப் பெருங்கடலில் உருவாகிய மிகப்பெரிய வெப்பமண்டலப் புயல் ஒடிஷாவைத் தாக்கியது. மணிக்கு 260 கிலோமீட்டர் வேகம் கொண்ட அந்தப் புயலின் காரணமாக 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரூ.10,000 கோடி பொருளாதார இழப்பை ஒடிஷா சந்தித்தது. இந்தப் பெரும் புயல் குறித்து எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அந்த அலட்சியம், ஒடிஷாவுக்கு மறக்க முடியாத பாடத்தைக் கற்றுத்தந்தது. பேரிடர் மேலாண்மையில் ஒடிஷா இன்று சிறந்து விளங்குவதற்கான தொடக்கப்புள்ளியாக அந்தப் பாடம் இருந்தது.
1999 நவம்பர் மாதமே ஒடிஷா மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (Odisha State Disaster Management Authority) அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின்கீழ், விரைவு நடவடிக்கைப் படை, தனி மருத்துவப் பிரிவு உள்பட பலவிதமான குழுக்கள் செயல்படுகின்றன. முதல்வர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் பேரிடர் மேலாண்மை பற்றிய வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அரசின் உதவியை எதிர்பாராமல் மக்களே பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையிலான ஏற்பாடுகளையும் ஒடிஷா அரசு செய்திருக்கிறது. பேரிடர்களை அதிகம் சந்திக்கும் கிராமங்களில் 23 ஆயிரம் பொதுமக்களை அரசு பயிற்றுவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புயல் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. கடற்கரையை ஒட்டி உள்ள அனைத்துக் கட்டிடங்களும் கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. தீயணைப்புத் துறையினருக்குச் சிறப்புப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு அம்மாநிலத்தின் 328 கிராமங்கள் சுனாமி பேரிடரை எதிர்கொள்ளும் வல்லமையுடன் உள்ளன. தென்கிழக்கு ஆசியாவிலேயே சுனாமியை எதிர்கொள்ளும் தன்மையுடன் இருக்கும் கிராமங்கள் இன்று ஒடிஷாவில் மட்டும்தான் உள்ளன. குறிப்பாக, இரண்டு கிராமங்களுக்குத் தனிச் சான்றிதழையே யுனெஸ்கோ கொடுத்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் ஆறுக்கும் மேற்பட்ட புயல்கள் ஒடிஷாவைக் கடந்துள்ளன. குறிப்பாக 2019இல் மிகப்பெரிய புயலானது ஒடிஷாவைக் கடந்தது. இந்தக் காலகட்டத்தில் 10 லட்சம் மக்களை, 24 மணி நேரத்தில் புயலின் மையப் பகுதியிலிருந்து அம்மாநில அரசு அப்புறப்படுத்தியது. உலக வரலாற்றிலேயே, குறுகிய காலத்தில் இப்படி ஒரு மிகப்பெரிய இடப்பெயர்வு நடந்ததில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1999 காலகட்டத்தில் மற்ற மாநிலங்களிடம் பேரிடர் உதவியை எதிர்பார்த்து நின்ற ஒடிஷா, இன்று இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு மீட்பு நடவடிக்கைக்கும் களப்பயிற்சிக்கும் தன்னுடைய மாநில நிபுணர்களை அனுப்புகிறது. ஒடிஷா மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை மாதிரியாகக் கொண்டு மத்திய அரசும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரியான ஓர் அமைப்புதான் தமிழகத்திற்கான தற்போதைய தேவை, இதை நோக்கியே அரசின் அடுத்தகட்ட நகர்வு அமைய வேண்டும்.
கட்டுரையாளர், ஆக்கிரமிப்பு இனங்கள் ஆராய்ச்சியாளர்