

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகச் சென்னையைச் சேர்ந்த நூலகர் ஒருவர் நாடக ஆசிரியராகவும், நடிகராகவும் கூடுவிட்டுக் கூடு பாய்கிறார். அவர் அண்ணா பல்கலைக்கழக நூலகர் சிவக்குமார்.
"கல்லூரி நாட்கள்ல இருந்தே மேடை நாடகங்கள் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். பல நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் நூலகரா வேலைக்குச் சேர்ந்த பிறகு, அதை மட்டுமே எனது அடையாளமா நினைக்கலை. பதிமூணு வருஷமா நாடகத் துறையில் ஈடுபட்டு வர்றேன்" என்கிறார் சிவக்குமார்.
2003-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்களைக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகக் கலாசாரக் குழுவை இவர் உருவாக்கியிருக்கிறார்.
மண் மீது அக்கறை
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதா இல்லை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதா என்ற கேள்வி எழும்போது, அனைவரும் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியே சிந்திப்பதால்தான், புதிய தொழிற்சாலைகள் அமைக்க விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளுக்கு ஒப்படைக்கப் படுகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன, இதனால் நாளுக்கு நாள் நமது பூமிப் பந்து மாசுபடுகிறது.
இதுபோலப் பூமியின் வெப்பம் அதிகரிக்க முக்கியக் காரணம் மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், அதிலிருந்து வெளியேறும் கழிவுகள், விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவது போன்றவைதான்.
விருது நாடகம்
"நமது வருங்கால சந்ததிக்கு மாசற்ற பூமியைப் பத்திரமா ஒப்படைக்க வேணாமா? அதற்கான விடை தேடும் முயற்சிதான் என்னுடைய ‘வெந்து தணிந்தது' நாடகம்" என்கிறார் சிவக்குமார்.
அவர் இயக்கி, நடித்த ‘வெந்து தணிந்தது’ சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகம் 2009-ம்
ஆண்டு முதல் டெல்லி, மும்பை உட்பட 25 இடங்களில் மேடையேறி இருக்கிறது.
தமிழக அளவில் ‘சிறந்த கருத்தாழம் மிக்க நாடகம்’ என்ற விருதை மயிலாப்பூர் அகாடமியிடம் 2009-ல்
பெற்றிருக்கிறது. ‘காணி நிலம் வேண்டும்’, ‘திரவியம் தேடி’, ‘வழிகாட்டிகள்’ ஆகிய நாடகங்களும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
"குறைந்தபட்சம் நூறு இடங்களிலாவது ‘வெந்து தணிந்தது' நாடகத்தை மேடையேத் தணும். சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தணும். அதுதான் நாடகக் கலையில் என்னோட இலக்கு" என்கிறார் இந்தச் சூழலியல் நாடகக்காரர்.
சிவக்குமார்