சென்னை புத்தகத் திருவிழா 2024 | 2023 சுற்றுச்சூழல் நூல்கள்

சென்னை புத்தகத் திருவிழா 2024 | 2023 சுற்றுச்சூழல் நூல்கள்
Updated on
3 min read

அழிக்கால் பேரிடர் ’22, வறீதையா கான்ஸ்தந்தின், கடல்வெளி

முட்டம் மீன்பிடித் துறை முகத்தில் அமைக்கப்பட்ட அலைத்தடுப்புச் சுவரால், அருகிலுள்ள அழிக்கால் எனும் கடற்கரைச் சிற்றூர் கடல் அரிப்பால் அழிவுக்கு ஆளாகியுள்ளது. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஊருக்குள் மணலுடன் புகுந்த அலைகள் மீனவ மக்களின் வீடுகளை மூழ்கடித்தன. தற்போது மணல் மூட்டை அடுக்கப்பட்ட வீடுகள், காலி செய்யப்பட்டுவிட்ட வீடுகளால் நிறைந்துள்ளது இந்த ஊர். கடற்கரை மக்களின் குரலை சமவெளி மனிதர்களும் அரசும் காதுகொடுத்துக் கேட்பதேயில்லை என்பதை இந்த நூலும் மீண்டும் வலியுறுத்துகிறது.

இயற்கை 24X7, l நக்கீரன், காடோடி

சுற்றுச்சூழல் அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது இந்தக் காலத்தின் அவசியத் தேவை. அப்படிப் புரிந்துகொள்வதற்கு உதவும் நூல் இது. இந்து தமிழ் உயிர்மூச்சில் தொடராக வெளிவந்து வரவேற்பு பெற்ற தொடரின் நூல் வடிவம். சுற்றுச்சூழல் பற்றி அறியாதவர்கள், சுற்றுச்சூழல் அரசியலைப் பேசாமல் சுற்றுச்சூழலைக் காக்கப் போராடுபவர்கள் ஆகியோருக்கு மத்தியில் அறிவியல்-அரசியல்-அறவியல் அடிப்படையில் சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.

சூழலும் பெண்களும், நாராயணி சுப்ரமணியன், ஹெர் ஸ்டோரீஸ்

இயற்கையைப் பாதுகாக்கவேண்டிய ஒரு நெருக்கடி நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. கிரெட்டா துன்பர்கின் துணிச்சலான, உணர்வுபூர்வமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த முன்னெடுப்புகள் இதில் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பூமியின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் அடங்கியுள்ளது. இப்படிப் பல்வேறு கோணங்களில் பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்குமான உறவையும் இதுவரை நம் கவனத்தை ஈர்த்திராத செய்திகளையும் உணர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் தொகுத்துத் தந்திருக்கிறது.

பூமிக்கு யார் சொந்தம்?, செ.கா., புத்தகக்கடை.காம்

தீவிர வாசகரும் அறிவியல் செயல்பாட்டாளருமான நூலின் ஆசிரியர் இயற்கை, சுற்றுச்சூழல், பரிணாமவியல் உள்ளிட்டவை பற்றி அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாகியுள்ளன. ஹம்போல்ட், சார்லஸ் டார்வின் தொடங்கி டேவிட் அட்டன்பரோ, ரிச்சர்டு டாக்கின்ஸ் வரை சுற்றுச்சூழல்-பரிணாமவியல் சார்ந்து செயல்பட்ட பல்வேறு ஆளுமைகளைப் பற்றியும் அவர்களது கருத்துகளையும் இந்த நூல் பேசுகிறது.

இந்திய வனவிலங்குப் பாதுகாப்பும் மேலாண்மையும், பா.ராம்மனோகர், பாரதி புத்தகாலயம்

நம் நாட்டின் இயற்கை வளங்களில் குறிப்பிடத்தக்கதான அரிய உயிரினங்கள் பாதிக்கப்படும் நிலை, அதற்கான காரணங்கள், அவற்றைக் காக்கவும், உரிய முறையில் மேலாண்மை செய்யவும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், சட்டங்கள், விவரங்கள் அடங்கிய தொகுப்பு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் வனத்துறை அலுவலர்கள், அரசுப் பணி தேர்வுகளுக்குத் தயாராகிவருபவர்கள் எனப் பலருக்கும் பயன்படும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

சங்க இலக்கியத்தில் புலியும் யானையும், க.ரத்னம், சந்தியா பதிப்பகம்

சங்க இலக்கியத்தைப் படிக்கும் போதெல்லாம் யானை, புலி ஆகிய இரண்டுக்கும் இடையேயான போராட்டத்தை விரிவாகப் பல பாடல்கள் தெரிவிக் கின்றன. பறவைகளைப் பார்க்க காடுகள், மலைகள் என அலைந்து திரிந்துள்ள நூலின் ஆசிரியருக்கு, புலிகளையும் யானைகளையும் நேரில் பார்த்து அவற்றின் செயல்பாட்டினைக் கண்டறிய முதுமை வாய்ப்பு தரவில்லை. அந்த வகையில், இயற்கையோடு நெருக்கமான தொடர்புடைய சங்கப் புலவர்கள் பாடிய பாடல்களை ஆதாரமாக வைத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

இந்திய மாநில விலங்குகள், ஏற்காடு இளங்கோ, மங்கை வெளியீடு

இந்திய தேசிய சின்னங்களைப் போல் இந்திய மாநிலங்களுக்கான சின்னங் களும் நம் நாட்டில் உண்டு. மாநிலங்களின் தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு வழி இது. இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் தங்கள் மாநிலத்தின் தனித்துவ உயிரினங்களை, மாநில உயிரினங்களாக அறிவித்துள்ளன. அந்த உயிரினங்களைப் பற்றிய தகவல்களை வாசிப்பதன் மூலம் இந்தியாவின் உயிரினப் பன்மையைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.

பருவநிலை மாற்றம், இரா.மகேந்திரன்-ஜெ.பழனிவேல், காலச்சுவடு பதிப்பகம்

கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் காலநிலை மாற்றத்துக்கான காரணிகளை இந்த நூல் தொகுத்துத் தருகிறது. மக்களின் வாழ்க்கைக்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையிலான தொடர்பை உறுதியான முறையில் இந்நூல் விளக்கியுள்ளது.

சூழலியல்: ஒரு அறிமுகம், ஸ்டிபன் க்ரோல், வில்லியம் ரான்கின், தமிழில்: இலக்கியா, நந்தினி, விடியல்

இயற்கைச் சூழலுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்ன? ஓர் அமைப்பாக இயற்கைச் சூழல் எப்படி இயங்குகிறது? பல லட்சக்கணக்கான உயிரினங்களை உள்ளடக்கிய இந்த அமைப்பிற்குள் பொருளாதார விலங்காக நுகர்ந்துகொண்டிருக்கும் மனிதர்களான நம்மைப் பொருத்திக்கொள்வது எப்படி? மனித சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் கணக்கில் கொண்டு ஒரு மாற்று சூழலியல் நாகரிகத்தைத் தோற்றுவிப்பது எப்படி என்பது போன்ற பல கேள்விகளுக்கு இப்புத்தகம் விடையளிக்கிறது.

இயற்கை விஞ்ஞானியின் கதைகள், பி.மந்தேய்ஃபெல், தமிழில்: பூ.சோமசுந்தரம், பரிசல் வெளியீடு

உலகப் புகழ்பெற்ற ரஷ்ய இயற்கை அறிவியலாளர் பி.மந்தேய்ஃபெல். இயற்கை, உயிரினங்கள் குறித்து அவர் எழுதிய நூலான இயற்கை விஞ்ஞானியின் கதைகள் நூலும் புகழ்பெற்றது. மிக அதிக எண்ணிக்கையில் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய புத்தகங்களில் ஒன்றாகத் தமிழுக்கு வந்துசேர்ந்த அந்தப் புத்தகம், இயற்கை குறித்த புரிதலை, பரவலாகவும் சுவாரசியமாகவும் எடுத்துச் சொன்னது. அந்த நூலின் மறுபதிப்பு இது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in