

காலநிலை மாற்றத்தினால், மனிதகுலம் தீவிர சுற்றுச்சூழல் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. ஆங்காங்கே அதிகரித்து வரும் வெள்ளம், புயல், அதீத மழை, வெப்பம் காரணமாக காலநிலை மாற்றத்தால் பூமிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு கண்டே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளோம்.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக்கணிப்பதோ, அதனை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதோ அவ்வளவு எளிதான பணி அல்ல. ஒரேயொரு துறை சார்ந்த விஞ்ஞானிகள், வல்லுநர்கள் செய்துவிடக்கூடிய பணியல்ல இது. கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு, கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம், சமூகவியல், பொருளாதாரம், வரலாறு எனப் பல துறை வல்லுநர்களும் இணைய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். பொதுமக்களும் இதில் இணைந்து செயல்பட வேண்டும்.
அந்த வகையில் ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின் பொருளியல் துறை தலைவர் நா. மணியின் முயற்சியால், மத்திய அரசின் இந்திய சமூக விஞ்ஞான கழகத்தின் நிதியுதவியோடு, தேசிய கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“காலநிலை மாற்றத்தின் விளைவுகள், காரணங்கள், அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள், இந்தியாவின் இலக்குகள்" என்கிற தலைப்பில் ஜனவரி 24, 25 தேதிகளில் தேசிய கருத்தரங்கம் ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
இதில் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வுக் கட்டுரைகளை ( தமிழ், ஆங்கிலம்) பதிவு செய்யலாம். பதிவு செய்யப்படும் கட்டுரைகள் கருத்தரங்க ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதனை தேசியக் கருத்தரங்கில் சமர்பிக்கலாம். அதன் ஆய்வு சுருக்கம் கருத்தரங்க ஒருங்கிணைப்பு குழுவால் ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்டு,இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்திற்குச்சமர்பிக்கப்படும். அது, தமிழில் தனி நூலாகவும் வெளியிடப்படும்.
கருத்தரங்கம் பற்றிய விரிவான தகவல்கள், பதிவு, இதர விவரங்கள், கருத்தரங்க விளக்கக் குறிப்பு, பதிவுப் படிவம் உள்ளிட்டவை குறித்து அறிய: https://shorturl.at/ahsuZ