

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் 150 வகையான பாரம்பரிய சிறுதானிய விதைகளைச் சேகரித்து அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் திண்டோரி மாவட்டத்திலுள்ள சில்பாடி கிராமத்தில் பைகா பழங்குடிகள் வசிந்து வருகின்றனர். இப்பழங்குடி இனத்தைச் சேர்ந்த லஹரி பாய் (27) என்கிற இளம் பெண் சிறுதானியங்களைச் சேகரித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். லஹரி பாய் தனது சிறிய வீட்டில் இருக்கும் இரண்டு அறைகளில் ஒன்றைச் சமையலறையாகவும், மற்றொன்றைப் பாரம்பரிய விதைகளுக்கான சேமிப்பகமாகவும் மாற்றியுள்ளார்.
லஹரி பாய் இதுவரை அழியக்கூடிய நிலையில் இருந்த கோடோ, குட்கி, சன்வா, சல்ஹர், கருவரகு, சாமை, சம்பா, வெள்ளை தினை, ராகி, பனிவரகு உள்ளிட்ட 150 வகையான பாரம்பரிய விதைகளை இடைவிடாது முயற்சித்து சேகரித்திருக்கிறார். லஹரி பாய் தான் சேகரித்த விதைகளை நிலத்தில் விளைவித்து அதனை 15-20 கிராமங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு விநியோகிக்கின்றார். பதிலுக்கு, விவசாயிகள் தங்கள் விளைச்சலில் ஒரு சிறிய பகுதியை லஹிரி பாய்க்குப் பரிசாக வழங்குகிறார்கள்.
தனது பயணம் குறித்து லஹரி பாய் நினைவுகூரும்போது, “பெண் என்பதால் மக்கள் என்னைக் கேலி செய்தார்கள், அடிக்கடி என்னை விரட்டியடித்தார்கள். ஆனால், எனக்கு இரண்டு நோக்கங்கள் மட்டுமே இருந்தன, ஒன்று திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய வேண்டும், இரண்டாவது தானிய விதைகளைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன். இப்போது யாரும் என்னை அவமானப்படுத்துவதில்லை,”என்றார். - எல்னாரா