

ஒ
ரு முறை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டைக்குச் சென்றிருந்தபோது வீட்டுத் தோட்டச் செடியொன்றில் வெள்ளை மாவைப் போன்ற தோற்றத்தில் சில பூச்சிகள் ஒட்டியிருப்பதைப் பார்த்தேன். அவை மாவுப்பூச்சிகள். ஆங்கிலத்தில் Mealy bugs அல்லது Scale Insects.
அந்தப் பூச்சிகளுக்கு சிவப்பு எறும்புகள் உதவிக்கொண்டிருந்தன. வீட்டுத் தோட்டச் செடிகளில் இதுபோன்ற மாவுப்பூச்சிகளையும், எறும்புகள் அவற்றுக்கு உதவுவதை நீங்களும் பார்த்திருக்கலாம். நாடு முழுவதும் காணப்படும் மாவுப்பூச்சிகள் பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன.
தாவரச் சாறை உறிஞ்சி வாழ்பவை இந்தப் பூச்சிகள். இறக்கையுள்ள ஆண் பூச்சிகள் உண்பதில்லை. அதேநேரம் பெண் பூச்சிகளோ பறக்க முடியாதவை. கால்களைக் கொண்ட சில பெண் பூச்சிகளால் நடக்க முடியும்.
பெண் மாவுப்பூச்சிகளே தாவரச் சாறை உறிஞ்சி வாழ்கின்றன. தாவரப் பிளவுகள், வேர்கள், பழத்தின் அடிப்பகுதிகளில் இருந்து சாறை எடுக்கின்றன. தாவரங்களோடு ஒட்டியிருக்கும் இவை, சாறை எடுக்கும்போது தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மாவு போன்ற படலத்தைச் சுரக்கின்றன. அதனால் இவை வாழும் தாவரத் தண்டுகள் மாவைப் பூசியது போன்று காணப்படும்.
தாவரங்களில் இருந்து சாறை உறிஞ்சும் மாவுப்பூச்சி அதைத் தேனாக மாற்றுகிறது. இதை எறும்புகள் உணவாகக் கொள்கின்றன. அதேநேரம் மாவுப்பூச்சிகளை ஒரு தாவரத்திலிருந்து மற்றொரு தாவரத்துக்கு எறும்புகளே எடுத்துச் சென்று பரப்புகின்றன. நிலத்துக்கு அடியில் உள்ள சுரங்கங்கள் வழியாகவும் எறும்புகள் இப்படிப் பரப்பும் வேலையைச் செய்கின்றன. எறும்புகளும் மாவுப்பூச்சிகளும் இப்படி இணக்கமான உறவைப் (symbiotic relationship) பராமரிக்கின்றன. மாவுப்பூச்சிகளுக்கும் எறும்புகளுக்கும் இடையிலான இந்தத் தொடர்பு ஆதிகாலம் தொட்டு நிலவி வருகிறது.
இதே வகையில் அசுவினிப் பூச்சிகளுக்கும் எறும்புகள் உதவுகின்றன. அசுவினிப் பூச்சிகளையும் மாவுப்பூச்சிகளையும் குழப்பிக்கொள்ளக் கூடாது.
ஒரு தாவரத்தின் மீது மாவுப்பூச்சிகள் எண்ணிக்கையில் அதிகரிக்கும்போது, தாவரங்கள் இறக்க நேரிடலாம். ஒரு தாவரத்தில் மாவுப்பூச்சிகளுடன் எறும்புகளும் சேர்ந்து இருப்பது ஆபத்தாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், எதிரிகளான ஒட்டுண்ணிகள், இரைகொல்லிகளிடம் இருந்து மாவுப்பூச்சிகளை எறும்புகள் பாதுகாக்கின்றன.