

இந்தியாவின் உணவு உற்பத்தியை பசுமைப் புரட்சி அதிகரித்தது. ஆனால், உலகில் மிக அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நாடாக அந்தப் புரட்சி இந்தியாவை மாற்றியது. அது மட்டுமல்ல உலகத் தண்ணீர் பயன்பாட்டில் 90 சதவீதம் விவசாயத்துக்குத்தான் பயன்படுத்தப்படுவதாக ஐநாவின் உலகத் தண்ணீர் பயன்பாட்டு அறிக்கை சொல்கிறது. நாட்டின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சுமார் 22 கோடி மக்களுக்கு தொடர்ந்து உணவளிக்க வேண்டுமென்றால் உலகின் விவசாய முறை இயற்கைக்கு ஒத்ததாக இருக்க வேண்டும்.
அதனால் இப்போதுள்ள வேதி விவசாய நடைமுறையோ மண், நீர் வளங்களை உறிஞ்சும் வகையில் இருக்கிறது. ஆனால், இயற்கை விவசாய முறை என்பது மண், நீர் ஆகிய வளங்களை மேம்படுத்தக்கூடியது. வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள், இயந்திரங்கள் போன்ற செயற்கையான பயன்பாட்டைக் குறைப்பது, மறுஉற்பத்தி விவசாய முறை என அழைக்கப்படுகிறது. மத்திய அரசும் மறுஉற்பத்தி விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. உத்தராகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், குஜராத் போன்ற மாநிலங்களும் இதை ஊக்குவிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஜோத்பூரில் உள்ள மத்திய வறட்சி மண்டல ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், அதன் பயன் உறுதியாகியுள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த கேட்டி விர்சாட் மிஷன் என்னும் சமூக நல அமைப்பு 2021-22 இல் மாநிலத்தில் 350 க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் விவசாயிகளில், 93.6 சதவீதம் பேர், வேதி அடிப்படையிலான விவசாயத்துடன் ஒப்பிடும்போது, இயற்கை விவசாயம் செய்யும் தங்கள் நிலத்தில் மழைநீர் தேங்கும் திறன் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர். இயற்கை விவசாயம் நீர்ப்பாசனத் தேவைகளை 30-60 சதவீதம் குறைத்தது.
அதுபோல் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ் பிரகதி சஹ்யோக் என்கிற அமைப்பு 2016-18இல் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 2,000 ஹெக்டேர் நிலத்தில் விவசாயிகள் 1,000 பேரின் நிலத்தில் நடத்திய களச் சோதனையில் இயற்கை விவசாயத்தால் மண் வளம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.- விபின்