

த
மிழகத்து நாய் இனங்கள் பற்றிய வரலாற்று ரீதியிலான வரைவை, ஒட்டியும் வெட்டியும் இதுவரையில் சொல்ல முயன்றேன். அநேகமாக தமிழில் நாய் இனங்கள் பற்றி விரிவாகப் பேசிய முதல் தொடர் இதுவாகத்தான் இருக்கும்.
வழக்கமாக ஒரே கட்டுரையில் தமிழகத்தின் அத்தனை நாய் இனங்களும் பட்டியலிடப்பட்டு முடிக்கப்பட்டுவிடும். நாய் இனங்கள் பற்றி தமிழில் இதுவரை வெளியான ஒரு சில கட்டுரைகளைத் தவிர்த்து, பெரும்பாலான கட்டுரைகளில் ஒரே மாதிரியான தகவல்களே மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகின்றன. சற்று பிரயத்தனத்துடன், தமிழக நாய் இனங்களை ஒருபடி முன் நகர்த்திய கட்டுரைகளாக பத்திரிகையாளர் கோலப்பன் (‘தி இந்து’ ஆங்கிலம்) எழுதிய கட்டுரைகளைச் சொல்லலாம்.
1940 – 50-களில் மா.கிருஷ்ணன் அத்தகைய முயற்சியைச் செய்தார். பின்னர், மிகக் காத்திரமாகச் சூழலியல் கட்டுரைகள் தொடங்கி தொல் எச்சங்கள் பற்றிய கட்டுரைகள்வரை நாய்கள் பற்றிய அறிமுகத்தை வழங்கியவர், மூத்த சூழலியலாளர் சு. தியடோர் பாஸ்கரன்.
1985-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான ‘அவர் கெனைன் ஹெரிடேஜ்’ என்ற கட்டுரையும், 2017-ல் வெளியான ‘தி புக் ஆஃப் இந்தியன் டாக்ஸ்’ என்ற புத்தகமும் மிகப் பெரிய அளவில் கவனம் பெற்றவை. தற்போது அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து ‘இந்திய நாய் இனங்கள் – ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் புத்தகம், காலச்சுவடு பதிப்பகத்தால் சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ராஜபாளையம் வந்திருந்த தியடோர் பாஸ்கரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழக நாய் இனங்களைப் பற்றிய வரலாற்று ரீதியிலான உரையாடல் தொடங்கி அரபு நாடுகளில் நடைபெறும் ‘ஸ்லை ஹவுண்ட்ஸ்’ (sleigh hounds) நாய் இனங்களுக்கான ‘ரேஸ்’ வரை, நிறைய விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மிகுந்த அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் என்னிடம் அவர் ஒரு கேள்வி கேட்டார்.
‘ஏன் தமிழகத்தில் வேட்டை நாய் இனங்களை வளர்ப்பவர்களுக்கு மத்தியில் இவ்வளவு பகை இருக்கிறது?’ மிக முக்கியமான கேள்வி. வேட்டை நாய்களை வளர்ப்புப் பிராணிகளாக அல்லாமல் கவுரவத்தின் குறியீடாக மட்டுமே பார்க்கும் மனநிலை இன்றும் பலரிடம் உள்ளது. அது ஒரு வன்மத்தை உருவாக்குகிறது. அதுதான் காரணம். சமீபகாலமாக அந்த நிலை மாறி வருகிறது.
வேடிக்கை என்னவென்றால், அந்த வன்மத்தை இன்று முகநூல் குழுக்கள் பாதுகாத்து வருகின்றன. காரணம், வரலாறு பற்றிய போதாமைதான். அந்தத் தளத்தில் நின்று நாட்டு நாய் இனங்கள் பற்றிய வரலாற்றுச் சித்திரத்தை வழங்க ‘முதல் நண்பன்’ தொடர் முயற்சித்தது. மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்!
(நிறைந்தது)
கட்டுரையாளர்,
நாட்டு நாய்கள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு:
sivarichheart@gmail.com