

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இன்றைய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி வரையிலான காலகட்டத்தில் இந்திய வேளாண் துறை என்னவிதமான மாற்றத்தைப் பாதகமாகவும் சாதகமாகவும் பெற்றது என்பதை இந்த நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மக்கள்தொகை அதிகரிப்பால் வேளாண் பரப்பு தொடர்ந்து அதிகரித்துவந்ததைத் தரவுகளுடன் நூல் சுட்டுகிறது.
அதே காலகட்டத்தி லேயே இந்தியாவில் பணப்பயிர்கள் பயிரிடுவது அதிகரித்ததையும் புள்ளிவிபரங்களுடன் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக இருந்தது உணவுத் தட்டுப்பாடு. அதை இந்தியாவின் முதல் பிரதமர் எவ்வாறு கையாண்டார் என்பதை நூலாசிரியர் மேற்கோள்களுடன் பதிவுசெய்துள்ளார்; நேருவின் வேளாண் வளர்ச்சிக் கொள்கையையும் நான்காக வகைப்படுத்தி அலசுகிறார்.
லால் பகதூர் சாஸ்திரியின் ஆட்சிக் காலத்தில் அவரது அரசு உணவுப் பதுக்கலைத் தடுத்த விதத்தை நூல் குறிப்பிடுகிறது. இந்திரா காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட பசுமைப் புரட்சியின் சாதகங்களைப் பட்டியலிடும் நூலாசிரியர், அதன் பாதகங்களையும் குறிப்பிடுகிறார். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி போன்றவர்களின் தற்சார்பு கொள்கை, நரசிம்மராவ், மன்மோகன் சிங் போன்றவர்களின் தாராளமயக் கொள்கை இவை இரண்டையும் சாராத, அறிவித்துக்கொள்ளாத கொள்கையுடன் மோடி அரசு செயல்படுவதை நூல் பதிவுசெய்கிறது.
2020இல் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பெருமளவுக்குப் பாதித்ததையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இதனால் விளை பொருளுக்கான ஆதார விலை கிடைக்காமல் போகும் சூழலும் மானியங்களும் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதையும் நூல் சுட்டிக்காட்டுகிறது. - விபின்
இந்திய அரசியல் பொருளாதாரமும் வேளாண்மையும்
முனைவர் பு.அன்பழகன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.280
தொடர்புக்கு: 044 24332924