Last Updated : 21 Oct, 2023 06:02 AM

 

Published : 21 Oct 2023 06:02 AM
Last Updated : 21 Oct 2023 06:02 AM

பயன் தருகிறதா நானோ யூரியா உரம்?

இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு (IFFCO) அமைப்பு ஆறு ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின் 2021இல் நானோ யூரியாவை அறிமுகப்படுத்தியது. யூரியா 45 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டிய இடத்தில் விவசாயிகள் இப்போது நானோ யூரியா 500 மில்லி பாட்டிலைப் பயன்படுத்தினால் போதுமானது என்று கூறப்படுகிறது. வழக்கமான யூரியாவைவிட இது பல விதங்களில் சிறந்தது எனச் சொல்லப்படுகிறது. மண்ணில் கலப்பது, இலைத் தெளிப்பு இரண்டு முறையிலும் இது பயன்தரக் கூடியது எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நானோ உரத்தைப் பயன்படுத்தும்படி விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். நானோ யூரியா எவ்வாறு பயன்தரக் கூடியது என்பதைப் பற்றிய நம்பகமான ஆய்வுகள் இல்லை எனச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேக்ஸ் ஃப்ராங்க், சொரன் ஹஸ்டட் ஆகிய இருவரும் அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த நானோ யூரியா அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட விளைவுகள் ஏதும் இல்லாத ஒரு தயாரிப்பு எனச் சொல்லியுள்ளனர். உரப் பயன்பாடு, சுற்றுச்சூழல் இணக்கம் போன்றவை பற்றிய தவறான அறிவிப்புகளுடன் இது சந்தைப்படுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நானோ உரத்தில் சேர்க்கப்பட்ட மூலப் பொருள்கள் குறித்து மர்மமே நீடிக்கிறது. நானோ திரவ யூரியாவைத் தயாரிக்கும் செயல்முறை காப்புரிமை பெற்றதாகும். அதனால் இந்தத் தகவலை எங்களால் பகிரங்கப்படுத்த முடியாது என்று இது குறித்த கேள்விக்கு இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு அமைப்பு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மூலப்பொருள்களின் பற்றாக்குறை, மானியச் சுமை, உக்ரைன் - ரஷ்யா போருக்குப் பிறகு யூரியா மூலப்பொருள்களின் விலை உயர்வு ஆகியவை இதற்குப் பின்னாலுள்ள காரணம் எனச் சொல்லப்படுகின்றன. அதனால் நானோ யூரியா துரித கதியில் ஊக்குவிக்கப்பட்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது.

‘டவுன் டு எர்த்’ இதழ் மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்களில் நடத்திய கள ஆய்வில் நானோ யூரியா பயன்பாட்டுக்கு முன்பும் பின்புமான பயிர் விளைச்சலைக் கணக்கிட்டுள்ளது. விவசாயிகளிடம் நேரடியாகவும் பேசியுள்ளது. இதில் நானோ யூரியா பயிர் விளைச்சலில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது புலனாகியுள்ளதாக அதன் அறிக்கை தெரிவிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x