

அமெரிக்காவில் 1852இல் வெளிவந்த அங்கிள் டாம்ஸ் கேபின் முதல் 2015இல் வெளியான நம்மூர் பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி வரை, நாவல் என்கிற இலக்கிய உத்தியை, சமூக அவலத்தை வெளிச்சம்போட்டுக் காட்டப் பல படைப்பாளிகள் பயன்படுத்தியுள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளாக அந்தமான் -நிகோபார் தீவுக்கூட்டங்களில் பயணித்து எண்ணற்ற கட்டுரைகளையும் பல நூல்களையும் எழுதியுள்ள சூழலியல் ஆய்வாளர் பங்கஜ் ஷேக்சரியா எழுதிய The Last Wave என்கிற ஆங்கில நாவலின் மொழியாக்கம் இது.
இந்த நாவலின் மூலம் இந்தத் தீவுக் கூட்டங்களின் மேலும், அங்கு அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஜாரவா தொல்பழங்குடியினர் மேலும் வெளிச்சம் பாய்ச்சுகின்றார். வங்காள விரிகுடாவில் சிதறி இருக்கும் 571 அந்தமான் நிகோபார் தீவுகளின் 37 தீவுகளில் மட்டுமே பழங்குடியினர் வசிக்கின்றனர். அலையாத்தி காடுகளும், மழைக்காடுகளும் பவளத்திட்டுகளும் கொண்ட இந்தத் தீவுகளின் உயிர்ப்பன்மை அளப்பரியது.
நார்கொண்டம் தீவிலுள்ள இருவாச்சி பறவைபோல, உலகில் வேறெங்கும் இல்லாத பல ஓரிடவாழ்விகளை தன்னகத்தே கொண்டவை இத்தீவுகள். அண்மை ஆண்டுகளில் மேம்பாடு, ராணுவ கட்டமைப்பு என்கிற பெயர்களில் இத்தீவிலுள்ள காடுகள் சீரழிக்கப்படுகின்றன. அதை அருகில் இருந்து கவனித்த நூலாசிரியரின் ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த நாவல்.
கதையும் களமும்: சாகசப்பயணத்தில் ஆர்வம் கொண்ட இளைஞன் ஹரீஷ் அந்தமானுக்குச் செல்கின்றார். அங்கு அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தொல்பழங் குடியினரான ஜாரவா மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கின்றது. அவர்களது வாழ்க்கை மெல்ல மெல்ல சீரழிந்து கொண்டிருப்பதைக் கவனித்து, இது குறித்து ஏதாவது செய்யவேண்டும் என உறுதி பூணுகின்றார்.
இந்தப் பணியில் அவருக்கு பேம் என்கிற 70 வயது படகோட்டியின் நட்பு கிடைக் கின்றது. அவர் மயன்மாரிலிந்து வந்த கரன் இனத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தையை பிரித்தானியர்கள் 1920களில் படகோட்டுவதற்காக இங்கு கூட்டி வந்தனர். அதே போல் சீமா என்கிற பெண்ணும் இவரது நண்பராகின்றார்.
அந்தமான் சிறைச்சாலையிலிருந்த கைதி ஒருவரின் வம்சாவளியைச் சேர்ந்தவர் சீமா. இவருக்கு ஹரீஷ் மேல் ஈர்ப்பு உருவா கின்றது. இவர்கள் யாவரும் முதலைகளைக் கணக்கெடுக்க ஒன்றாகப் பயணிக்கும்போது, 2004இல் எழுந்த சுனாமி ஆழிப் பேரலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.
நூலின் குவிமையம் அந்தமானின் பூர்வகுடிகளான ஜாரவா மக்கள். அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கரிசனத்துடன் நாவலாசிரியர் அணுகியுள்ளார். நூலின் இணைப்பாக அவர்களது வரலாற்றை ஒரு காலப்பட்டியல் மூலம் சொல்கின்றார். வெட்டுமரத் தொழிலால் காடழிப்பு, சுற்றுலாவின் பாதிப்பு போன்ற அந்தமானின் சூழலியல் பிரச்சினைகள் நாவலின் பின்புலமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
அவ்வப்போது, ஜப்பானியர் படையெடுப்பு போன்ற வரலாற்றுக் குறிப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தமான் தீவுகளில் நூலாசிரியர் நடத்திய களப் பணியின் சாரம் இந்நூலைத் தாங்குகின்றது. தீவுகளின் சுற்றுச்சூழல் பற்றிய அவரது பட்டறிவு இங்கு புலப்படுகின்றது. இதை ஓர் அறிவியல் புனைவு என்று விவரிக்கலாம். இதைப் படிக்கும் போது எனக்கு மைக்கேல் கிரைட்டன் எழுதிய காங்கோ (1980) புதினம் நினைவிற்கு வந்தது.
மொழிபெயர்ப்பில்... மொழிபெயர்ப்பில் சில இடங் களில் நெருடல் ஏற்படுகின்றது. ஆங்கிலத்தில் பொதுவாகச் செயப்பாட்டு வினையில் (passive voice) எழுதுவார்கள். தமிழில் எழுதப்படும்போது செய்வினையில் (Active voice) வர வேண்டும். அது தமிழ் மொழியின் மரபு. அதேபோல ஆங்கில உவமைகளை மொழிபெயர்க்கக் கூடாது. The tip of the iceberg என்பது ‘பனி வெளியில் தெரியும் சிறு முகடு’ என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது.
சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்யப்படக் கூடாது. Virgin forest என்பதை ‘கன்னிக்காடு’ என்கின்றார். டால்பின் எனும் விலங்கின் தமிழ்ப் பெயர் ஓங்கில். ஆனால், இது டால்பின் என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதேபோல mangrove forest என்பதற்குச் சரியான தமிழ் சொல் அலையாத்திக் காடுகள். சதுப்புக்காடுகள் அல்ல.
கடலில் வாழ்வது கடலாமை (turtle). ஆனால், ஆமை என்கிற பொதுப்பெயர் நூல் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதிலும் இந்தக் கதையில் இடம்பெறுவது தோணியாமை. அது பற்றிக் குறிப்பிடப்படவில்லை. முதலையின் குட்டிகள் என்று குறிப்படாமல் ‘குஞ்சுகள்’ என்று எழுதுவது தவறு. இடப்பெயர்களை மொழிபெயர்க்கக் கூடாது. Barren island என்கிற பெயரை ‘ஆளில்லா தீவு’ என்று மொழிபெயர்த்திருக்கின்றார்.
நூல் முறையாகச் செப்பனிடப்படவில்லை என்பதுபோல் தோன்றுகின்றது. சந்திப்பிழைகள் மலிந்துள்ளன. சூழலியல் தளத்தில் எழுதப்பட்ட நாவல்கள் தமிழில் வெகு அரிது. அந்தமான் என்றாலே அங்கிருக்கும் சிறைச்சாலையைப் பற்றி மட்டும் அறிந்திருக்கும் மக்களுக்கு அத்தீவுகளின் தனித்துவமான இயற்கை வளத்தை இந்நூல் விவரித்து காட்டுகின்றது.
தனித்திருக்கும் தீவுக்கூட்டம், பங்கஜ் ஷேக்சரியா,
தமிழில்: த.சித்தார்த்தன், தடாகம் பதிப்பகம்,
368 பக்கங்கள்,
விலை ரூ. 430
- கட்டுரையாளர் - மூத்த சுற்றுச்சூழல் எழுத்தாளர்; theodorebaskaran@gmail.com