

காடுகள், புதர்கள், விவசாய நிலங்களில் ஏற்படும் தீயால் உலக அளவில் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக ‘நேச்சர்’ (Nature) இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. காலநிலை மாற்றத்தால் வெள்ளம், அதிக மழை, வறட்சி போன்றவை உலகம் முழுவதும் பரவலாக நிலவுவதுபோல் காற்று மாசுபாடும் பரவலாகி வருகிறது.
பொருளாதாரத்தில் வலுவான நாடுகளைவிடக் குறைவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளே காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு அதிகளவில் காற்று மாசுபாட்டை எதிர்கொண்டு வருகின்றன. மேலும், காற்று மாசுபாட்டால் சுவாசக் குழாய் நோய்ப் பாதிப்புகள், மன அழுத்தம் போன்றவை ஏற்படுவதாக நிபுணர்களும் கூறுகின்றனர்.
அமேசானில் காட்டுத் தீ: அமேசான் காடுகளில் 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட காட்டுத் தீ எண்ணிக்கை 2022ஐவிட 10 சதவீதம் அதிகமாகும் என்று அலபாமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
2007ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகப்படியான காட்டுத் தீ விபத்துகள் 2023ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ஏற்பட்டுள்ளன. காட்டுத் தீ அவ்வப்போது ஏற்படுவது இயல்பு என்றாலும் காலநிலை மாற்றம், மனிதர்களின் செயல்பாட்டால் காட்டுத் தீ விபத்து ஏற்படுவது அதிகரித்துள்ளது.