‘இல்லாதன இல்லை’

தாமரைக்கோழி
தாமரைக்கோழி
Updated on
3 min read

எனது கிராமமான மன்னங்காடு, தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. ஒன்றுடன் இன்னொன்று இணைந்த பல ஓடைகள் சூழ்ந்து அமைந்த நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் நிறைந்த ஊர் அது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கோடைக்கால மாலை வேளையில், மன்னங்காட்டின் பறவை வகைகளைப் பற்றிப் பெரியவர் ஒருவரிடம் கேட்டேன்: ‘கொக்கு மடையான்தான் இங்கே இருக்கு, வேற ஒன்னும் வர்றது இல்லயே’ என்றார்.

‘அறிஞரும் கண்டிராத, கற்பனைக்கு எட்டாத தோற்றங்களிலெல்லாம் கோடானுகோடி வகைகளில் உயிரினங்கள் உலகில் உள்ளன’ என கம்ப நாடன் ஆரண்யக் காண்டத்தில் கூறுகிறானே, நம்மூர் அதற்கு விதிவிலக்கோ என்று எண்ணித் தளர்ந்தவாறு ஓடையின் கரையில் நடக்க ஆரம்பித்தேன்.

வியக்க வைத்த பறவைகள்: சிறிதளவே நீர் இருந்த அந்த ஓடையில், திடீரென ஒரு பறவை வானிலிருந்து செங்குத்தாக நீரில் விழுந்தது. என்ன நடந்தது என்பதை உணரும் முன், வீழ்ந்த நொடியிலேயே மீண்டெழுந்து பறந்தோடியும்விட்டது. திரும்பி வந்த அப்பறவை நீர் மட்டத்துக்கு 15-20 அடி உயரத்தில் பறந்தவாறே நிலையாக நின்று கீழ்நோக்கி நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. பின் திடீரெனக் கண்ணிமைக்கும் நேரத்தில் கீழ்நோக்கி அம்புபோல் நீரில் பாய்ந்து, சிறிய மீன் ஒன்றை நீண்ட அலகில் கவ்வியவாறு நீரிலிருந்து வெளியேறிச் சென்றது.

அது ஒரு கறுப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher) வகை என்பதை அறிந்து வியந்தேன். நாம் ஆங்காங்கே காணும் சிறிய நீல மீன்கொத்தி (Common Kingfisher), வெண்மார்பு மீன்கொத்தி (White-throated kingfisher) வகைகளிலிருந்து நிறத்தில் மட்டுமல்ல, மீன் பிடிக்கும் முறையிலும் வேறுபட்டது இது. இது போன்ற வேறுபாடுகள் கண்ணில் படப்பட மேலும் பல பறவைகளைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் மேலிட்டது.

மற்றொரு நீர்நிலையில் என்னை வெகுவாக ஈர்த்தது தாமரைக்கோழி (Pheasant-tailed jacana). பெயருக்கு ஏற்றாற்போல் அல்லி, தாமரை இலைகளின்மேல் இவை லாகவமாக நடப்பதே தனி அழகு. இப்பறவையின் மிக நீண்ட விரல்கள் இலைமேல் நடப்பதற்காகவே பரிணாமம் கொடுத்த வரம். அதைவிடவும் அழகு, ஆண் இலைக்கோழியின் தகதகக்கும் தங்கநிறப் பின்கழுத்து, நீண்டு வளைந்த வால் சிறகு. நீரில் மிதக்கும் கூட்டை அமைத்து முட்டையிட்டு, பெண் தாமரைக்கோழிகள் விலகிச் சென்றுவிட, ஆண் கோழிகள் அடைகாக்கின்றன.

இவ்வாறு பல பறவைகளை அடையாளம் கண்டு பட்டியலிட்டுக் கொண்டிருந்தபோது உள்ளூர் ஆர்வலர் வெங்கடேஸ்வரன் என்னுடன் இணைந்தார். வயல்வெளிகள், குளங்கள், ஓடைகள், காட்டாற்றுப் படுகை என எங்கள் தேடலின் எல்லை விரிந்தது. ஊர்க்கோடியில், ஒரு குளக்கரை மரத்தில் ஓரிரு விநாடியே வந்தமர்ந்து பறந்தோடிய நீலக்கண்ணியை (Blue-faced malkoha) முதன்முறையாகப் பார்த்தது, படம்பிடித்து அடையாளம் கண்டது பெருமகிழ்ச்சி. ஏனெனில், நீலக் கண்ணும் நீண்ட வாலும் உள்ள அந்தக் குயில் வகைப் பறவை அதற்குமுன் ஊருக்குள் கண்ணில் பட்டதில்லை!

கறுப்பு வெள்ளை மீன்கொத்தி
கறுப்பு வெள்ளை மீன்கொத்தி

விரிந்த படை: பொங்கல் பறவைக் கணக்கெடுப்பில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தாலும், உள்ளூர்க் கல்லூரி மாணவர்கள் எங்களுடன் இணைந்த 2022ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு சிறப்பானது. எத்தனை வகைப் பறவைகள் இருந்துவிடப் போகின்றன எனும் சந்தேகத்துடனேயேதான் வந்துசேர்ந்தார்கள். பல்வேறு திசைகளில், அருகில், தூரத்தில் என ஒரே நேரத்தில் பல கண்கள் கண்காணிக்க, கண்ணில் பட்ட பறவைகள் ஏராளம். இளைஞர்களின் கண்களில் வியப்பு அதனினும் ஏராளம். இவ்வாறுதான் விக்னேஷ், நவீன், ராஜாராம், கவியரசு, விஷால், ஃபிடல் காஸ்ட்ரோ, முகுந்தன் என எங்கள் ஆர்வலர் குழு சிறகு விரித்தது.

பொங்கல் கணக்கெடுப்புக்குப் பின்னர், ஊரின் மூலை முடுக்குகள், ஊர் எல்லையையும் தாண்டிய நீர்நிலைகள், அண்டைக் கிராமங்களின் வயல்வெளிகள் என ஆராய ஆரம்பித்தோம். குழுவில் ஒருவர் கண்ணில்படாத பறவை, மற்றொருவர் கண்ணில் எளிதாகப் பட்டது. அயராத நீண்ட நடைகள், அதன் விளைவாக இன்று ஊருக்குள் நடமாடும் நூற்றுக்கும் மேற்பட்ட பறவை வகைகளைப் பட்டியலிட்டிருக்கிறோம்.

முன்பு வெளியிட்ட உள்ளூர் பறவைகள் களக்கையேட்டின் விரிவாக்கப் பதிப்பினை வெளிக்கொணர இருக்கிறோம். இந்த முயற்சி மைனா, காகம் போன்ற புழக்கடைப் பறவைகளையும் தாண்டி உள்ளூரில் காணப்படும், ஆனால் எளிதில் கண்ணில்படாத பறவைகளை அறிமுகப்படுத்துவதுடன் புதிய ஆர்வலர்களையும் உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம்.

எங்கள் குடும்பத்தினர்கூட இப்போதெல்லாம் பறவைகளைக் ‘கவனிக்க’ ஆரம்பித்திருக்கிறார்கள். எங்களிடம் உள்ள பறவையியல் நூல்களை அவர்கள் புரட்டிப் பார்க்கிறார்கள். சில ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களையும் எங்கள் குழுவில் இணைத்துக் களப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம்.

மக்கள் அறிவியல் திட்டமான ebird இணையதளத்தில் பறவைத் தரவுகளை அலசுவதிலும் எங்கள் குழுவினர் கைதேர்ந்தவர் களாகிவிட்டனர். மேலும், ஒளிப்படத்துக்கு ஈடாகப் பறவைகளை ஓவியம் வரையும் திறனும் எங்கள் ஆர்வலர் குழுவில் மறைந்திருந்ததையும் அடையாளம் கண்டுகொண்டோம்.

உயிர்ப்பன்மை மிளிரும் ஊர்: வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வலசை வரும் அழகிய காச்சுலு (Indian pitta) பறவைகள் வெகுவாக வேட்டையாடப் பட்டுக்கொண்டிருந்தன. இந்நாள்களில் எங்கள் ஊரில் இப்பறவைகள் வேட்டையாடப் படுவதில்லை எனினும், அவற்றைக் காண்பது அரிதாகவே உள்ளது.

இவ்வாறு இருக்க, குடியிருப்புகளிலிருந்து தொலைவில் உள்ள நீர்நிலைகளுக்கு வரும் நீர்ப்பறவைகளை, முட்டைகளை ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வேட்டையாடுதல் இன்றும் தொடர்வதாகவே தெரிகிறது. இவற்றைக் கண்காணிப்பதும் கடினமாகவே உள்ளது. வரும் காலத்தில் நிலைமை மாறும், பறவைகள் காக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

‘மன்னுயிர்தாம் பல்லாயிரக் கோடி பரந்துளவால் இல்லாதன இல்லை, இளங்குமரா’ என இலக்குவனை நோக்கி ராமன் கூறும் உயிர்ப் பன்மை, அவனுக்கு மட்டும் கூறுவதல்ல, அதை உலகுக்கும் உரக்கக் கூறுகிறான் கம்பன். ஆழ்கடலிலிருந்து மலைமுகடு வரையில், பாலையிலிருந்து சோலைவரையில், அங்கிங்கெனாதபடி எங்கும் விரவிப் பரவி நிலைத்துப் பல்லாயிரம் கோடி உயிரினங்களை உள்ளடக்கியிருக்கும் உயிர்ப்பன்மை எங்கள் கிராமத்திலும் அவ்வாறேதான் உள்ளது.

உள்ளூர்ப் பறவைகள் மீது முழுமையாகக் கண்வைத்து அவற்றின் பன்மையையும் கண்கூடாகக் கண்டுள்ள நாங்கள், ஊரின் பிற உயிரினங்களின் பன்மையையும் கவனித்தவாறே நடைப்பயணத்தைத் தொடர்கின்றோம்.

இப்பறவையின் மிக நீண்ட விரல்கள் இலைமேல் நடப்பதற்காகவே பரிணாமம் கொடுத்த வரம். அதைவிடவும் அழகு, ஆண் இலைக்கோழியின் தகதகக்கும் தங்கநிறப் பின்கழுத்து, நீண்டு வளைந்த வால் சிறகு. நீரில் மிதக்கும் கூட்டை அமைத்து முட்டையிட்டு, பெண் தாமரைக்கோழிகள் விலகிச் சென்றுவிட, ஆண் கோழிகள் அடைகாக்கின்றன.

- durainava@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in