

பெ
ருங்கடல் சாகசப் பயணங்களின் முன்னோடிகள் பினீசியர்கள்தான். ஆனால், கடலறிவியல் என்கிற அறிவுப்புலத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள் ஐரோப்பியர்களே. பெரும்பான்மையான கடல் செலவுகள் குடியேற்றத்துக்காக, வணிகத்துக்காக, வளங்களைக் கொள்ளையிட நிகழ்த்தப்பட்டன. கடலைக் குறித்த அறிவைத் தேடும்படியாக அந்தப் பயணங்கள் அமையவில்லை.
‘பிரிட்டிஷ் அரசில் சூரியன் மறைவதில்லை’ என்று ஒரு நாடு இறுமாப்புக் கொள்ளும் அளவுக்குக் குடியேற்றங்கள் விரிந்தன. கடலில் நெடுஞ்செலவு மேற்கொள்ளும் கப்பலில் உயிரியல், வானவியல், கணிதவியல் வல்லுநர்களை உடன் அழைத்துச் சென்று பயணத்தினூடே பலவகைக் கடலாய்வுகள் நிகழ்த்திப் பதிவு செய்ய உலகுக்கு வழிகாட்டியவர் கேப்டன் ஜேம்ஸ் குக்.
1769-ல் அவர் நிகழ்த்திய கடல் சாகசப் பயணத் தொடர்தான் 1859-ல் பரிணாமக் கொள்கையை சார்லஸ் டார்வின் உலகுக்குத் தர வழிகோலியது. பல்துறை ஆய்வர்களைக் கடற்பயணத்தில் அழைத்துச் செல்லும் முறைமை குக்கின் காலத்துக்குப் பிறகே வழக்கில் வந்தது.
1769 தொடங்கி பத்தாண்டு காலத்தில் குக் மூன்று கடல் பயணங்களை நிகழ்த்தினார். முதல் பயணத்தின் வழியாக ஐரோப்பியர்களுக்கு ஆஸ்திரேலியக் கண்டத்தைப் பரிசளித்தார். இறுதியாக பெரிங் நீரினை வழியாக ஆர்ட்டிக் கடலுக்குள் வெற்றிகரமாகப் பயணத்தைத் துண்டித்தார். ஆர்ட்டிக் பனிக்கட்டிகள் அவரைத் தொடர்ந்து முன்னேற விடவில்லை. திரும்பி வரும்போது ஹவாய் தீவுகளைக் கண்டடைந்தார். அங்கு ஹவாய் மக்களால் கொல்லப்பட்டார்.
கடல் செலவு வரலாற்றில் அடுத்த மைல்கல்லாக எச்.எம்.எஸ். பீகிள் கப்பல் பயணத்தைக் குறிப்பிட வேண்டும். அது கி.பி.1831-ல் டிவோன்ஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, கானரி, வெர்தா, காலபாகோஸ் உள்ளிட்ட பல நிலப்பகுதிகளைக் கண்டடைந்து, நீண்ட ஆய்வுகள் நிகழ்த்தி 1836-ல் பிளைமவுத் துறைமுகத்தில் நிறைவுற்ற ஐந்தாண்டுப் பயணம்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இளம் இயற்கையியலாளர் சார்லஸ் டார்வினைப் பொறுத்தவரை அது கடவுள் தந்த வரம். காலபாகோஸ் தீவு உள்ளிட்ட நிலப்பகுதிகளில் உலகின் வேறெந்தப் பகுதிகளிலும் காணப்படாத வினோதமான தாவர, விலங்கு உயிரினங்களைக் கண்டார். இந்த விசித்திரங்கள்தான் பின்னாளில் டார்வின் ‘இயற்கையின் தெரிவு’ என்கிற சர்ச்சைக்குரிய, ஆனால் மிக முக்கியமான பரிணாமத் தத்துவத்தை வெளியிடக் காரணமானது.
அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல்கள் பெயரிடப்பட்டதும் கி.பி.1845-ல் எச்.எம்.எஸ் பீகிள் பயணத்தின் விளைவுதான். அமெரிக்கக் கடற்படை அதிகாரி மோரி 1842-ல் கடலாழம் குறித்த தனது ஆய்வுகளை நூலாக (கடல் நிலவியல் இயற்பியல்) வெளியிட்டார்.
19-ம் நூற்றாண்டிலும் கடற்செலவுகளில் ஐரோப்பியரின் மேலாதிக்கம் நீடித்தது. ‘எச்.எம்.எஸ். சாலஞ்சர்’ கப்பலில் ஜேம்ஸ் ரோஸ் (1839 – 1843) நிகழ்த்திய பயணமும் ஜெர்மானியரின் எரிகல் (meteor) பயணமும் குறிப்பிடத் தகுந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பன்னாட்டு கூட்டு ஆய்வுகள் சிலவும் நிகழ்ந்தன. 1957-58-வது ஆண்டுகள் பன்னாட்டு நிலவியல் இயற்பியல் ஆண்டாக அறிவிக்கப்பட்டது.
இக்காலத்தில் ஒரு பிரித்தானியக் கப்பலும் நான்கு அமெரிக்கக் கப்பல்களும் இணைந்து அட்லாண்டிக் பெருங்கடல் ஆய்வை நிகழ்த்தின. ஐக்கிய நாடுகளின் அறிவியல் ஆய்வுக்கழகம் பன்னாட்டு இந்தியப் பெருங்கடல் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டது. இந்தியா, ‘ஒருங்கிணைந்த மீன்வளத் திட்டத்தின்’ ஒரு பகுதியாக ஆர்.வி.வருணா என்கிற கப்பலையும், ஆர்.வி.கவேஷணி, ஐ.என்.எஸ். கிஷ்னா என்கிற கப்பல்களையும் களமிறக்கியது. கடலாய்வுகள் தொய்வின்றித் தொடர்கின்றன.
(அடுத்த வாரம்:
கண்டுகொள்ளாக் கடலுயிர்கள்)
கட்டுரையாளர், பேராசிரியர்
மற்றும் கடல் சூழலியல் வள
அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com