Published : 01 Apr 2014 12:18 pm

Updated : 01 Apr 2014 12:22 pm

 

Published : 01 Apr 2014 12:18 PM
Last Updated : 01 Apr 2014 12:22 PM

சூழல் முன்னோடி: மரங்களின் தாய் - ஏப்ரல் 1: வங்காரி மாத்தாய் பிறந்தநாள்

1

மரக்கன்று நடுவது சுற்றுச்சூழலை மேம்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரம், மரக்கன்று நடுதல் மட்டுமே சுற்றுச்சூழலை முழுமையாகக் காப்பாற்றிவிடுமா என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால், இந்த மரக்கன்று நடுதலைச் சற்றே வேறுபட்ட முறையில் நடைமுறைப்படுத்தி, வெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயல்பாடாக மட்டுமில்லாமல் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக, பெண்ணுரிமைக்குக் குரல் கொடுப்பதாக, ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டமாக மாற்றியவர் மறைந்த சுற்றுச்சூழல் போராளி வங்காரி மாத்தாய். அதைச் சாதித்துக் காட்டியது, அவர் தொடங்கிய பசுமை பட்டை இயக்கம் (Green belt movement).

கென்ய தலைநகர் நைரோபிக்கு வடக்கே, மாபெரும் கென்ய மலையின் பார்வையில் இருக்கும் மாகாணத் தலைநகரமான நையேரியில் 1940ஆம் ஆண்டு வங்காரி மாத்தாய் பிறந்தார். கென்யாவைச் சேர்ந்த பெரும்பாலான ஆப்பிரிக்கப் பெண்களைப் போலன்றி, அவர் உயர்கல்வி கற்றார். இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளை அமெரிக்காவில் நிறைவு செய்தார். 1971-ல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண்ணாக ஆனார், தொடர்ந்து நைரோபி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியையாகவும் மாறினார்.


ஓர் உயிரியலாளராகக் காடு அழிப்பும், மண்ணரிப்பும் கிராமப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை அவர் நேரில் கண்டுணர்ந்தார். பெரும்பாலும் உடலுழைப்பைச் செலுத்தும் பெண்களிடம், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. கால்நடைகளின் மேய்ச்சல் நிலம் அழிக்கப்பட்டிருந்தது. விறகுக்கான மரங்களைத் தேடி மேலும்மேலும் தொலைதூரத்துக்குப் பெண்கள் அலைய வேண்டியிருந்தது.

1977-ம் ஆண்டு தன் பேராசிரியை பதவியை மாத்தாய் துறந்தார். அந்த வருட உலகச் சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5-ம் தேதி) அன்று தன் வீட்டின் புழக்கடையில் ஒன்பது மரங்களை நட்டு, பசுமை பட்டை என்ற இயக்கத்தை அவர் தொடங்கினார். ஆப்பிரிக்கக் காடுகளை மீட்டெடுப்பது, காடு அழிப்பினால் ஏற்பட்ட வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதே அந்த இயக்கத்தின் நோக்கம். இதன்மூலம் 30 வருடங்களில் மூன்று கோடி மரங்களை நடுவதற்கு ஏழைப் பெண்களைத் திரட்டினார்.

ஆப்பிரிக்காவில் காடழிப்பும் காடு இழப்பும், அதைச் பாலைவனமாக்கி விட்டதையும், நிலம் பாலைவனமாதல் உலகின் பல பகுதிகளுக்கும் பரவி வருவதையும் இப்போது நாம் பார்க்கிறோம். பாலைவனமாவதில் இருந்து காடுகளைப் பாதுகாப்பது என்பது, உலகச் சுற்றுச்சூழலை வலுப்படுத்துவதில் முக்கிய முன்னெடுப்பு என்பதில் சந்தேகமில்லை. கல்வி, குடும்பக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து, ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் மூலம் பசுமை பட்டை அமைப்பு அடித்தட்டு மக்களுக்கு உதவும் வளர்ச்சிக்கான சூழ்நிலையை உருவாக்கியது.

1980களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைவியாக மாத்தாய் பதவியேற்றார். மரம் நடுவது, பெண்களுக்கான அரசியல் பிரசாரத்தில் அவர் பெற்ற வெற்றிகள், கென்ய ஆட்சியில் இருந்தவர்களுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தின. பின்னர் ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவராக அவர் மாறினார். நைரோபியில் உள்ள ஒரே பூங்காவான உஹுரு பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட கட்டடத்தைக் கட்ட கென்ய அரசு நினைத்தபோது, மாத்தாய் நடத்திய போராட்டத்தால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இப்படி அவருடைய முயற்சிகள் சுற்றுச்சூழல், ஜனநாயகம், பெண் உரிமைக்கான போராட்டங்கள் அனைத்தும் ஒரே தளத்துக்கு வந்தன. பல்வேறு சமூக முன்னெடுப்புகளுக்கு எதிராக மாத்தாய் சித்திரவதைக்கு ஆளாக வேண்டியிருந்தது. அவர் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்; கண்ணீர் புகைக்குண்டாலும், தடியாலும் தாக்கப்பட்டார். அரசுக்கு இக்கட்டுகளை ஏற்படுத்தும் அந்தப் பெண்ணை அடக்குவதில் அரசாங்கம் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை.

சர்வதேச அளவில் மாத்தாய் பிரபலமடைந்தார், தன்னுடைய பணிகளுக்காகப் பல பரிசுகளைப் பெற்றார். 1978ஆம் ஆண்டிலிருந்து கென்யாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திவந்த டேனியல் அரப் மோய் 2002ஆம் ஆண்டில் பதவி விலகிய பிறகு நடைபெற்ற தேர்தலில், நாடாளுமன்றத்துக்கு மாத்தாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003-ம் ஆண்டில் பல்வேறு கட்சிகளின் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த ஆட்சியில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், காட்டுயிருக்கான இணை அமைச்சராக மாத்தாய் நியமிக்கப்பட்டார்.

ஜனநாயகம், மனித உரிமை, டேனியல் அரப் மோய் ஆட்சியின் கீழ் பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்களில் வங்காரி மாத்தாய் முன்னணியில் இருந்தாலும், அவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில்கொண்டு, சுற்றுச்சூழல் சேவையும் உலக அமைதிக்குப் பங்களிக்கிறது என்பதை அங்கீகரிக்கும் வகையில் முதன்முறையாக நோபல் அமைதிப் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்ற கௌரவத்தையும் அவர் பெற்றார்.

"வளங்குன்றாத வளர்ச்சி, ஜனநாயகம், அமைதி ஆகியவற்றுக்குப் பங்களித்ததற்காக நார்வே நோபல் கமிட்டி 2004ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வங்காரி மாத்தாய்க்கு அளிக்கத் தீர்மானித்திருக்கிறது. பூமியில் அமைதி நிலவுவது என்பது, நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நமக்குள்ள திறனைப் பொறுத்தே அமைகிறது. கென்யாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றுச்சூழல் ரீதியில் நீடித்த சமூக, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கான போராட்டத்தில் வங்காரி மாத்தாய் முன்னிலை வகித்திருக்கிறார். ஜனநாயகம், மனித உரிமைகள், குறிப்பாகப் பெண் உரிமைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்த வளங்குன்றா வளர்ச்சிக்கான முழுமையான அணுகுமுறையை அவர் கையாண்டிருக்கிறார். உலக அளவில் சிந்தித்து உள்ளூரில் அவர் செயல்பட்டிருக்கிறார்" நோபல் அமைதிப் பரிசை வங்காரி மாத்தாய்க்கு வழங்கத் தீர்மானித்ததற்கு, நோபல் கமிட்டி அளித்திருக்கும் காரணங்களின் ஆரம்ப வாக்கியங்கள் இவை.

நன்றி: மாற்றத்துக்கான பெண்கள்: வங்காரி மாத்தாய்,
பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, 106/1, முதல் தளம், கனகதுர்கா வணிக வளாகம், கங்கையம்மன் கோயில் தெரு, வடபழனி, சென்னை - 600 026, தொலைபேசி: 044-24839293
வங்காரி மாத்தாய்மரங்களின் தாய்வங்காரி மாத்தாய் பிறந்த நாள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x