கடலம்மா பேசுறங் கண்ணு 30: சிற்றுயிரியின் பெரும் சேவை!

கடலம்மா பேசுறங் கண்ணு 30: சிற்றுயிரியின் பெரும் சேவை!
Updated on
1 min read

டலின் ஆழப் பகுதிகளில் ‘நாட்டிலுகா’ என்னும் ஒரு செல் விலங்குகள் இரவில் நீல வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. கரைக்கடல் பகுதிகளில் பெரும்பாலும் பாக்டீரியாவால் ‘உயிர் ஒளிர்தல்’ (Bioluminescence) நிகழ்கிறது.

உயிரின் பரிணாம வரலாற்றில் பல்வேறு தொல்லியல் கால வெளிகளில் பல்வேறு உயிரினங்கள் இந்த ஒளி உற்பத்தி செய்யும் பண்பை 40 முறை உருவாக்கிக்கொண்டுள்ளன.

உயிரினங்களால் எப்படி ஒளியை உருவாக்க முடிகிறது? சில வேதிமங்கள் செய்யும் வேலை இது. மெக்கல்ராய் என்னும் அறிஞர் 1955-ல் லூசிஃபெரேஸ் நொதி என்கிற சங்கதியைப் பிரித்தெடுத்தார்.

இந்த நொதி உயிர்வளியின் உதவியுடன் லூசிஃபெரின் என்னும் வேதிமத்தைச் சிதைக்கிறது. சில தட்டாமாலை வேதிவிளைவுகளின் இறுதியில் சக்தி வெளிப்படுகிறது.பொதுவாக வேதிச் சிதைவுகளின் விளைவாக சக்தி, வெப்பமாக வெளிப்படுகிறது. லூசிஃபெரினின் சிதைவால் வெளிப்படும் சக்தி வெளிச்சமாக வெளியேறுகிறது.

இந்த வெளிச்சம் நீலப்பச்சை நிறம் கொண்டது. வெளிச்சம் உமிழும் 35-க்கும் மேற்பட்ட பாக்டீரியா இனங்கள் கரைக்கடல்களில் காணப்படுகின்றன. ஆறுகள் இணையும் கடல் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். உயிரினங்களின் வெளிச்சம் உமிழும் பண்புக்கு லக்ஸ் ஜீன் (Lux gene) என்கிற ஒளி மரபணுதான் காரணி.

லக்ஸ் என்றால் ஒளி என்று பொருள். பாக்டீரியா எல்லா நேரங்களிலும் ஒளிர்வதில்லை. வெப்பநிலை, கடலேற்ற வற்றம், நீரோட்டங்கள் போன்ற ஏராளமான காரணிகள் ஒளி உமிழ்தலைக் கட்டுப்படுத்துகின்றன.

ஒளி உமிழும் பண்பு, பாக்டீரியாவின் இனப்பரவலுக்கு உதவுகிறது. ஆழ்கடல் மீன்களின் வயிற்றில் வாழும் நுண்ணுயிரிகள் கழிவுகளுடன் வெளியேறுகின்றன. பாக்டீரியாவின் ஒளியால் கவரப்படும் மீன்கள் இந்தக் கழிவுகளை விழுங்குகின்றன. இவ்வாறு இந்த பாக்டீரியா எளிதில் பரவுகிறது.

உயிர்க்கோளத்தின் இருப்புக்கு பாக்டீரியா வழங்கிவரும் பங்களிப்புகள் அளப்பரியவை. வளிமண்டலத்தில் கிடைக்கப்பெறும் நைட்ரஜன் தனிமத்தை உயிர்ச்சத்தாகச் சேமிக்கும் வேலை தொடங்கி ஒட்டுமொத்த உயிர்க்கழிவையும் இறந்த உடல்களையும் சிதைத்து உயிர்ச்சத்துச் சுழற்சிக்கு வழங்குவதுவரை, பாக்டீரியாவின் சேவைகள் ஏராளம். மரபணு அறிவியல், உயிர்த் தொழில்நுட்பத் துறைகளின் ஆதார சுருதி பாக்டீரியாதான்!

அடுத்த முறை இரவில் கடலைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால் ‘கவர்’ எழுகிறதா என்று கவனியுங்கள்!

(அடுத்த வாரம்: கடலை வெல்லுதல்!)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in