

சுற்றுச்சூழலுக்காகப் போராடுவது அல்லது குரல் கொடுப்பது சமூகத்தில் அடையாளம் தேடுவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக இன்றைக்கு மாறிவருகிறது. எந்தத் துறை, எந்த அம்சத்தின் மீது சமூகத்தின் கவனம் குவிகிறதோ, அதன்வழியாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள தனிநபர்கள், அமைப்புகள், தொழில்நிறுவனங்கள் முனைவது ஒன்றும் புதிதல்ல.
இதில் உண்மையிலேயே ஒரு துறை சார்ந்து அக்கறை, தொலைநோக்குப் பார்வையுடன் ஆழமாகவும் நீடிக்கும் வகையிலும் ஒருவர் செயல்படுவது அபூர்வம். ஒரு துறை சார்ந்த ஒட்டுமொத்தப் புரிதல், குறுகிய நலன்களைப் புறக்கணித்தல், மண்-மக்கள் மீதான பிடிப்பு ஆகியவையே இதுபோன்ற மனிதர்களை உருவாக்குகின்றன.
உதகமண்டலத்திலிருந்து செயல்பட்டுவந்த எஸ்.ஜெயச்சந்திரன் அப்படிப்பட்ட அபூர்வமான ஆளுமைகளில் ஒருவர். ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் ஜீவாவுடன் இணைந்து தமிழக பசுமை இயக்கத்தை 1990களில் நிறுவியவர்களில் ஒருவர். மருத்துவர் ஜீவா 2021இல் காலமான நிலையில், ஜெயச்சந்திரன் (65) கடந்த வாரம் காலத்தில் கலந்தார்.
காடுகளின் காவலர்: அலுவல்ரீதியாகப் பணிபுரிந்தது காப்பீட்டுத் துறை என்றாலும் இயற்கை பாதுகாப்பே அவருடைய ஒற்றை நோக்கமாக இருந்தது. தமிழகப் பசுமை இயக்கத்தின் மாநிலச் செயலாளராகச் செயல்பட்டுள்ள அவர், நீலகிரி காட்டுயிர் - சுற்றுச்சூழல் சங்கத்தின் கௌரவச் செயலாளராகவும் இருந்திருக்கிறார். அமைதியான குணத்தைக் கொண்ட ஜெயச்சந்திரன், பொதுவாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத களச் செயற்பாட்டாளராக இருந்தார்.
இன்றைக்குப் பலரும் காடுகளுக்குப் பயணித்தும் பறவைகள், காட்டுயிர்கள், பூச்சிகளைப் படமெடுத்தும் புகழ்பெறுகிறார்கள். அந்தக் காடுகளும் அங்குள்ள உயிரினங்களும் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே மேற்கண்ட செயல்களை அவர்கள் செய்ய முடியும். அந்தப் பாதுகாக்கும் வேலையைப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் இன்றி ஜெயச்சந்திரன் போன்றவர்கள் செய்துவந்துள்ளனர். அதிலும் குறிப்பாக அவருடைய பணி நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் என்கிற உலகப் புகழ்பெற்ற காட்டுப் பகுதியில் அமைந்தது.
அங்குள்ள அரிய உயிரினங்களும் தாவரங்களும் உயிர்ப்பன்மையும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அந்தக் காடுகள் சிதையாமல் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அதற்கான பணிகளை இடையறாது செய்துவந்தவர்களில் ஜெயச்சந்திரனும் ஒருவர். காடுகளைத் துண்டாடும் சாலைகள், ரயில்தடங்கள், மரக் கடத்தல், காட்டுயிர் கடத்தல் உள்ளிட்ட ஒவ்வோர் அம்சம் சார்ந்தும் அவர் தலையீடு செய்துவந்தார்.
முன்னுதாரணப் பணிகள்: தமிழக-கேரள எல்லையில் முக்காலி/கிங்குருண்டியில் பவானி ஆற்றின் குறுக்கே 2003–2004 இல் அணை கட்டுவதற்குக் கேரள அரசு திட்டமிட்டிருந்தது. இதை முன்கூட்டிய அறிந்த ஜெயச்சந்திரன், பத்திரிகைகள் மூலம் அந்தப் பிரச்சினையை நாடறியச் செய்தார். இதனால் பெரும் போராட்டம் வெடித்து, அணை கட்டும் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. அது அன்றைக்கு எதிர்க்கப்படாமல் இருந்தால் கொங்கு பகுதி நீரின்றி வாடியிருக்கும்.
காட்டுயிர் கடத்தலைத் தடுக்க, கைப்பற்ற, கடத்தல்காரர்களைப் பிடிக்க கேரள, தமிழ்நாடு வனத்துறையினருக்குப் பெருமளவில் அவர் உதவியுள்ளார். தன் உயிருக்கு ஏற்படும் ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல், இந்தப் பணிகளை அவர் ஆற்றிவந்தார். யானை தந்தம் கடத்தும் வேலையில் ஈடுபட்டு வந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மாற்றுப் பயிற்சி அளித்து வனக் காவலர்களாக மாற்றியது அவருடைய குறிப்பிடத்தக்க பணிகளில் ஒன்று. அவர்கள் இன்றைக்குக் கேரளத்தில் வனக் காவலர்களாக இருக்கிறார்கள்.
முறையற்ற வளர்ச்சிக்கு எதிர்ப்பு: யானை வாழிடமான சிங்காரா காட்டுப் பகுதியில் நியூட்ரினோ திட்டம் முன்மொழியப்பட்டபோது அதை எதிர்த்தார். சிகூர் யானை வழித்தடப் பகுதியில் பெருகிய சட்டத்துக்குப் புறம்பான ரிசார்ட்கள், சுற்றுலா நடவடிக்கைகளின் காரணமாக நிகழ்ந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார். நீலகிரி கல்லாறு - ஜக்கனாரை யானைவழித் தட ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடினார். பல்வேறு பிரச்சினைகள் சார்ந்து பொது நல வழக்குத் தொடுப்பதன் மூலம் தீர்வுகளை நோக்கி நகர்த்தி வந்தார்.
1998-99 இல் மேட்டுப்பாளையம்-முள்ளி-ஊட்டி சாலைப் பணித் திட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் - பிலிகிரி ரங்கன் புலிகள் காப்பகம் இடையே ஆசனூர் - கொள்ளேகால் நெடுஞ்சாலை திட்டம், சத்தியமங்கலம்-சாம்ராஜ்நகர் ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்கள் காரணமாக காடு அழிக்கப்படுவதற்கு எதிராகப் போராடி, அந்தத் திட்டங்கள் நிறுத்தப்படக் காரணமாக இருந்தார். மேட்டுப்பாளையம் விஸ்கோஸ் ஆலையின் சாயக்கழிவு பிரச்சினை, நீலகிரிப் பகுதியில் அமைந்திருந்த கல்குவாரிகள், விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் என இயற்கையைக் காக்க அவருடைய போராட்டம் பல்வேறு வகைகளில் தொடர்ந்தது.
அங்கீகாரமற்ற பணி: வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராகவே சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் குரல்கொடுப்பார்கள் என ஒருபுறம் தவறான சித்தரிப்பு, மறுபுறம் காடுகளை அழித்து சாலைகளும் ரயில்தடங்களும் போடப் படுவது நடக்கும், அதையெல்லாம் தடுக்க முடியாது எனச் சில காட்டுயிர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களே பேசிவந்த வேளையில் தான், இந்தப் பணிகளை ஜெயச்சந்திரன் மேற்கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
காடுகளையும் மலைகளையும் தண்ணீரையும் பாதுகாக்க தன் வாழ்நாள் முழுக்கப் போராடி வந்த அவருக்கு, அரசு சார்பில் பெரிய அங்கீகாரங்களோ உரிய மதிப்போ வழங்கப்படாமல் போனது துரதிர்ஷ்டம். நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியைப் பாதுகாப்பதில் அவருடைய பணியை அங்கீகரித்து சாங்சுவரி இயற்கை அறக்கட்டளை விருது 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
அவரைப் பின்பற்றி பல இளைஞர்கள் இந்தத் துறை சார்ந்தும், காட்டுயிர் பாதுகாப்பு அறிவியல் துறை சார்ந்தும் செயல்பட்டுவருவது நம்பிக்கை அளிக்கிறது. காடுகளைத் துண்டாடும் சாலைகள், ரயில்தடங்கள், மரக் கடத்தல், காட்டுயிர் கடத்தல் உள்ளிட்ட ஒவ்வோர் அம்சம் சார்ந்தும் அவர் தலையீடு செய்துவந்தார்.
- valliappan.k@hindutamil.co.in