

அ
ந்திப்பூச்சிகள் பார்ப்பதற்கு வண்ணத்துப்பூச்சிகளைப் போலவே இருந்தாலும், சில பண்புகளில் மாறுபட்டவை. வண்ணத்துப்பூச்சிகள் பகலில் நடமாடி உணவு தேடும் பகலாடிகள். அந்திப்பூச்சிகள் பெரும்பாலும் சூரியன் வீடு திரும்பிய பிறகே வெளியே வரும். அதனால்தான் அவற்றின் பெயரும் அந்திப்பூச்சி என்றானது.
அரிசி, தானியங்களை நீண்ட நாட்களுக்குக் காற்றுப் படாமல் வைத்துவிட்டால் அவற்றிலிருந்து உருவாகிப் பறக்கும் பூச்சிகள் அந்துப்பூச்சிகள் எனப்படுகின்றன. காற்றுப் படாமல் நீண்ட நாட்களுக்கு அடைத்து வைக்கப்படும் உடைகளில் மக்கு நாற்றம் அடிக்காமல் இருக்க வைக்கப்படும் உருண்டைக்கு அந்துருண்டை என்று பெயர். அதே வகையில்தான் அந்துப்பூச்சி என்ற பெயரும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், தானியங்களில் மட்டுமில்லாமல் வெளியிலும் அந்துப்பூச்சி வகைகள் நிறைய இருக்கின்றன. எனவே, அந்திப்பூச்சி என்ற பெயர் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
படத்தில் இருப்பது ஒரு வகை அந்திப்பூச்சி. இதன் ஆங்கிலப் பெயர் Handmaiden moth. அறிவியல் பெயர் Amata passalis. நாடு முழுவதும் தென்படக் கூடிய இதை இலங்கையிலும் காணலாம். 3.5 செ.மீ. நீளம் கொண்டது. இந்த அந்திப்பூச்சி 1781-ல் கண்டறியப்பட்டுப் பெயர் சூட்டப்பட்டது.
நேராக இல்லாமல் குறுக்குமறுக்காகப் பறக்கக்கூடியது. பகலிலும் இரவிலும் நடமாடும். செங்குத்தான பகுதிகளில் இறக்கைகளை விரித்துவைத்தே உட்காரும்.
இதை நேரில் கண்டபோது, இது ஒரு வகை அந்திப்பூச்சி என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், பொதுவாக அந்திப்பூச்சிகள் வண்ணத்துப்பூச்சிகளை ஒத்த இறக்கை வடிவத்தையே பெற்றிருக்கும். இது மாறுபட்டு இருந்ததே, நான் அப்படி நினைத்ததற்குக் காரணம்.
இந்த அந்திப்பூச்சி பார்ப்பதற்குக் குளவியைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவே இப்படிப்பட்ட உடல் தகவமைப்பைப் பெற்றுள்ளதாக சமீபத்தில்தான் அறிந்தேன்.