

பாரம்பரிய சித்த வைத்தியர்களுக்கும் பட்டதாரி சித்த மருத்துவர்களுக்கும் இடையே நிலவும் இடைவெளியை குறைக்கவும் பாரம்பரிய சித்த மருத்துவத்தை முழுவதுமாகக் கல்லூரிப் பாடத்திட்டத்திற்குள் கொண்டுவர வலியுறுத்தியும் மரபுவழி சித்த மருத்துவர் மா. சண்முகம் தனது வாழ்நாள் அனுபவங்களை ‘சித்த மருத்துவப் பயிற்சிக் கையேடு’ என்கிற புத்தகமாகத் தொகுத்துள்ளார்.
இப்புத்தகத்தை அமெரிக்காவைச் சேர்ந்த சித்த மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கான உலகளாவிய மையம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னையில் வெளியிட்டது. நூல் வெளியீட்டு விழாவில் சித்த மருத்துவர்களும், சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்ட சித்த மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கான உலகளாவிய மையத்தின் தலைவர் தெ. சிவசைலம் பேசும்போது, “சித்த மருத்துவத்தின் சாதனைகளைச் சொல்ல இரண்டாயிரம் ஆண்டுகள் இருக்கின்றன.
பக்கவிளைவு இல்லா மருத்துவமாகச் சித்த மருத்துவம் உள்ளது. எனினும் எல்லா நோய்களுக்கும் சித்த மருத்துவம் கைகொடுக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், அறிவியல் ரீதியாகச் சித்த மருத்துவம் எவ்வாறு உபயோகப்படுகிறது என்பதை நிறுவுவதுதான் எங்களது முக்கிய நோக்கம்.
அதற்கு இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும். அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒதுக்கி வைக்காமல் அவற்றைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்கு உறுதுணையாக எங்கள் அமைப்பு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
தேசிய சித்த மருத்துவ இயக்குநர் மீனாகுமாரி பேசும்போது, “2010 ஆம் ஆண்டு முதலே ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவருகின்றன. தரமான மருத்துவ ஆய்வுகளும் வெளியாகியுள்ளன. தவிர்க்க இயலாத உயரங்களைச் சித்த மருத்துவம் பெறப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.
நூலைப் பெற தொடர்புக்கு: 9444903533