வேலூர் மக்கள் நலச் சந்தை
இயற்கை விவசாயிகளும் நுகர்வோரும் நேரடியாகச் சந்தித்து விற்பனை செய்துகொள்ளும் இடம் வேலூர் மக்கள் நலச் சந்தை. மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைப்பதற்கான சிறந்த ஏற்பாடு இது.
பல ஆண்டு காலமாக மூளைச் சலவை செய்யப்பட்டு ரசாயன உரங்கள் / பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்ட பொருள்களுக்கு நாம் தயார்படுத்தப்பட்டுள்ளோம். இதன் விளைவுகளை விளக்குவதும் மாற்று வழிகளை முன்வைப்பதும் மக்கள் நலச் சந்தையின் அடிப்படை வேலை.
இயற்கை விவசாயக் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், நாட்டு மாட்டுப்பால், நாட்டுக் கோழி - முட்டை, தேன், வேர்க்கடலை, சிறுதானியங்கள், மஞ்சள், நெல்லி, பாரம்பரிய அரிசி வகைகள், பாக்கு மட்டைத் தட்டுகள், துணிப்பைகள் போன்ற சூழலுக்கு உகந்த பொருள்கள் உள்ளிட்ட பலவும் இங்கே விற்பனைக்குக் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமைகளில் காலை 6.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை வேலூர் காந்தி நகர் திருமகள் திருமண மண்டபத்தில் மக்கள் நலச் சந்தை நடைபெற்றுவருகிறது. இதுவரை 15 மாதங்கள் சந்தை நடைபெற்றுள்ளது.
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரை வேலூர் அசோக் பிளான்ட் நர்சரி நான்காவது கிழக்கு பிரதான சாலையில் வாரச்சந்தையும் நடைபெற்று வருகிறது. இதுவரை 32 வாரங்கள் வாரச்சந்தை நடைபெற்றுள்ளது.
மக்கள் நலச் சந்தையின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டுவருபவர் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் கு.செந்தமிழ் செல்வன். ‘அறிவுத்தோட்டம்’ எனும் இயற்கை விவசாயப் பண்ணையைக் கடந்த 11 ஆண்டுகளாக இவர் பராமரித்துவருகிறார்.
விவசாயிகள், தொழில்முனைவோர் கவனத்துக்கு: மக்கள் நலச் சந்தையில் விற்பனை செய்ய இயற்கை விவசாயிகள் முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தொழில்முனைவோர் இயற்கை விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டி கொண்டு வரலாம்.
மக்கள் நலச் சந்தை குழுவினர் நிலத்தைப் பார்வையிட்டுத் தயாரிப்பை உறுதிசெய்வார்கள். இயற்கை விவசாயிகளின் நிலங்களை வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்படும்.
அடுத்த நகர்வுகள்: மக்கள் நலச் சந்தை சார்பில் மகளிர் தொழில்முனைவோரை ஒருங்கிணைத்து சம்மேளனம் உருவாக்கப்பட்டுவருகிறது. இவர்களின் தயாரிப்புகளைத் தொடர்ந்து விற்பனை செய்ய விற்பனை மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
இயற்கை விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளுக்குத் தொடர்ந்து பயிற்சியளிக்க கிராமம்தோறும் மக்கள் நலச் சந்தை சார்பில் ‘மண் நல மையம்’ தொடங்கப்பட்டுவருகிறது.
மேலும் விவரங்களுக்கு: ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ் செல்வன்: 9443032436 / மின்னஞ்சல்: senthamil1955@gmail.com
