

இயற்கையான உணவு பொருட்களைத் தேடி அலைந்த காலம் போய் இப்போது ஒரு தொலைபேசி அழைப்பிலேயே தேவைப்பட்ட பொருளை வீட்டுக்கு வரவழைக்க முடிகிறது. உணவு பொருட்கள் மட்டுமில்லாமல் முற்றிலும் இயற்கையான வாழ்க்கை முறைக்கு மாறவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவுகிறது, சென்னை திருவான்மியூரில் இருக்கும் க்ரியா.
எந்த வேதிப்பொருட்களின் கலப்பும் இல்லாமல் இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட சலவைத் தூள், பாத்திரம் கழுவும் தூள், உடல் கழுவும் திரவம் (Body wash), குழந்தைகள் உடல் கழுவும் திரவம் (Kids body wash), முகம் கழுவும் திரவம் (Face wash) போன்ற பொருட்கள் க்ரியாவில் கிடைக்கின்றன.
சூழலை மாசுபடுத்துவதில் ஒவ்வொரு தனிநபரும் ஏதோவொரு வகையில் காரணமாக இருக்கிறோம். "ஒரு தனிநபராக நகரத்தின் அவசரகதியான வாழ்க்கையில், சூழலை மாசுபடுத்தாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று நானும் என் கணவர் நிவாசும் சிந்தித்ததன் விளைவுதான் க்ரியா", என்கிறார் அதன் நிறுவனர் பிரீத்தி.
பிரீத்தி, ஸ்ரீநிவாஸ் இருவரும் பன்னாட்டு நிறுவனங்களில் பார்த்துக்கொண்டிருந்த வேலையைத் துறந்துவிட்டு 2011-ல் க்ரியாவைத் தொடங்கினார்கள். “2009-ல் வேலையை விட்டபிறகு, தனிப்பட்ட முறையில் முழுக்க முழுக்க இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை வாழ்வதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆயுர்வேதப் புத்தகங்களைப் படித்து மூலிகைகள் தொடர்பாகத் தெரிந்துகொண்டேன். அப்போதுதான் பூந்திக்கொட்டையின் சிறப்புகள் எனக்குத் தெரியவந்தது. பூந்திக்கொட்டையின் தன்மையை அடிப்படையாக வைத்தே சலவைத் தூள், பாத்திரம் கழுவும் தூள் போன்றவற்றை உருவாக்கினேன். விரைவில் கூந்தல் கழுவும் திரவம், தரை துடைக்கும் திரவம் போன்றவற்றை அறிமுகப்படுத்த இருக்கிறோம்," என்கிறார் பிரீத்தி.
பூந்திக்கொட்டை மட்டுமில்லாமல் புளி, எலுமிச்சை, சீயக்காய், மஞ்சள், வெட்டி வேர், வேப்பிலை போன்று நமக்கு நன்கு பரிச்சயமான பொருட்களை வைத்தே, அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களை க்ரியா தயாரித்து விற்பனை செய்கிறது.
"க்ரியாவின் முக்கியக் கொள்கையாக மறுசுழற்சியை வைத்திருக்கிறோம். இந்த மறுசுழற்சி முறைக்குப் பூந்திக்கொட்டையின் இயல்பு நன்கு ஒத்துப்போனது. உதாரணத்துக்கு, பூந்திக்கொட்டையால் தயாரிக்கப்பட்ட சலவைத் தூளைப் பயன்படுத்தித் துணிகளைத் துவைத்த பிறகு, அந்தத் தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றலாம். இதனால் செடிகள் செழித்து வளரும்," என்று தன் சுய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் பிரீத்தி.
திரவமாகத் தயாரிக்கப்படும் பொருட்களில் பாக்டீரியா அதிகமாக இருக்கும் என்பதாலும், தண்ணீர் வீணாவதாலும் க்ரியாவில் தயாரிக்கப்படும் பொருட்களில் பெரும்பாலானவை தூளாகவே தயாரிக்கப்படுகின்றனவாம். இயற்கையுடன் கைகோத்து வாழ விரும்புபவர்களுக்குக் க்ரியா நடைமுறைத் தீர்வுகளை வழங்குகிறது என்பதில் சந்தேகமில்லை.
தொடர்புக்கு: 044 - 24520381, www.krya.in
- கௌரி நீலமேகம்