

இந்திய விவசாயிகளில் 70-80 சதவீதத்தினர் நிலத்தடி நீரை நம்பியே உள்ளனர் என்று பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் நீர், சுற்றுச்சூழல், நிலம், வாழ்வாதாரம் (WELL) ஆய்வு மையம் தனது கள ஆய்வில் கண்டறிந்துள்ளது. தமிழ்நாடு, தெலங்கானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
பயிர் வளர்ச்சிக்குத் தீவிரமான நீர்ப் பாசனம் அவசியம் என்பதால் விவசாயிகள் நிலத்தடி நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். குறைவான நீர் தேவைப்படும் பயிரை மாற்றாகப் பரிந்துரைக்க வேண்டிய தேவை இன்று உருவாகியுள்ளது. மாற்றுப் பயிர்களுக்கான வலுவான சந்தையை ஏற்படுத்தித் தரவேண்டியதும் அவசியம். இல்லையெனில், பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரின் நிலை தொடர்ந்து மோசமாகக்கூடும் எனவும் அந்த அறிக்கை கவலை தெரிவிக்கிறது.
ஆப்பிள் உற்பத்தி சரியும்: இமாச்சலப் பிரதேசத்தின் பொருளாதாரத்துக்குக் கணிசமான பங்களிப்பை ஆப்பிள் உற்பத்தி வழங்கிவருகிறது. காலநிலை காரணமாக இந்த முறை ஆப்பிள் உற்பத்தி கடந்த ஆண்டில் இருந்ததைவிடப் பாதியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டு பெய்த கன மழை ஆப்பிள் சாகுபடியைப் பாதித்துள்ளது.
மாநிலத் தோட்டக்கலைத் துறை தரவுகளின்படி, கடந்த ஆண்டு சுமார் 3.36 கோடி ஆப்பிள் பெட்டிகள் விற்பனையாயின. ஒவ்வோர் ஆண்டும் ரூ.4 - 5 கோடி வரையிலான ஆப்பிள் வர்த்தகம் இங்கே நடக்கிறது. ஆனால், இம்முறை ஆப்பிள் உற்பத்தி 1.5 - 2 கோடி பெட்டிகளாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு தரவுகளின்படி, மாநிலத்தில் 1,13,000 ஹெக்டேரில் ஆப்பிள் பயிரிடப்படுகிறது.
மாநிலத் தோட்டக்கலைத் துறை தரவுகளின்படி, இந்தப் பருவமழையால் மொத்தம் ரூ.144 கோடி இழப்பு ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. கனமழையால் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால் தோட்டக்கலைத்துறையினர் விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்வதிலும் சிரமம் உள்ளது.
சிம்லா மாவட்டத்தில் பல இடங்களில் சாலை வசதி இல்லாததால் ஆப்பிள்கள் வாய்க்கால்களில் வீசப்படும் அவலம் நடக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக ஆப்பிள் சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர்.