

தமிழ்த் தொன்மை நிலத்திணைகள் ஐந்து. அவற்றில் நான்கு திணை களையும் கொண்ட தமிழ்நாட்டின் தென்பகுதியில் இருக்கும் கன்னியாகுமரிக்கு என் நண்பனைப் பார்க்க ஒரு நாள் சென்றிருந்தேன். மத்திய ஆசிய, கிழக்கு ஆசிய-ஆஸ்திரேலிய வான்வழித் தடங்களில் பயணிக்கும் வலசைப் பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் என் நண்பன் ஈடுபட்டிருந்தான்.
ஒரு நாள் அதிகாலை முக்கடலும் சங்கமிக்கும் இடத்திற்கு இருவரும் சென்றோம். தொடுவானத்தில் சூரியன் மெல்ல உதயமாகிக்கொண்டிருந்த நேரம் அது. அழகிய சூரிய உதயத்தையும், போகும் வழியெல்லாம் விண்ணை முட்டும் மலைகளும், கடலலையின் இசையும் செவிக்கும் மனதிற்கும் விருந்தளித்தன. ஒருவழியாக புத்தளத்தில் இருக்கும் உப்பளத்தைச் சென்றடைந்தோம்.
பறவைகளை நோக்க அங்கு செல்லும் முன் உப்பளம் என்றால் வெறும் வெள்ளை கம்பளம் போல உப்பு மட்டும்தான் கொட்டிக் கிடக்கும் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், அங்கு அந்த வெள்ளைக் கம்பளத்தில் பல வண்ணங்களில் அமைந்த வேலைப்பாடுகளைப் போல பல வண்ணப் பறவைகள் இருந்தன.
கைக்கு அடக்கமாக இருக்கும் கொசு உள்ளான், நாட்டாமைபோல் நின்றுகொண்டிருந்த நாரை,தொலைத்ததை தேடுவதுபோல் சுற்றிக் கொண்டிருந்த உப்புக்கொத்திகள், கொடியைப் போல் நின்றுகொண்டிருந்த கொக்கு, ஆட்டம் அடங்கிய ஆலா, காகத்திடம் கப்பம் கேட்டுக்கொண்டிருந்த கடல்காக்கை, கதிர் அறுக்கும் அரிவாள்போல் அலகை வைத்திருந்த அரிவாள் மூக்கன், குரலெழுப்பிக்கொண்டே இருந்த ஆள்காட்டி, தன் தினசரி உணவை நோக்கி அம்புபோல பாய்ந்து சென்ற மீன்கொத்தி எனப் பல பறவைகளைக் கண்டு ரசித்தேன். இவற்றில் மூன்று பறவைகள் என் கவனத்தைக் கூடுதலாக ஈர்த்தன.
ஆலாக்களின் ஆர்ப்பாட்டம்: நாங்கள் உப்பளத்தை நெருங்கியபோதே ‘கீர் கீர் கீர்... கீச் கீச் கீச்’ என்று பெருஞ்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. என்ன அது? ஏன் இப்படி ஒரு கூச்சல்? எதற்காக இப்படி என்று பலக் கேள்விகள் என் மனதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தன. அங்கு போய் பார்த்ததும், என் நண்பன் ‘ஆலாவின் அலப்பறை தொடங்கிவிட்டது’ என்றான். அவனிடம் மேலும் கேட்டபோது, அங்கு இரண்டு வகை ஆலாக்கள் இருப்பதாகவும், அவற்றை எப்படி இனம்காண வேண்டும் என்பதையும் சொன்னான்.
பெரிய கொண்டை ஆலாவின் அலகு மஞ்சள் நிறத்திலும், சிறிய கொண்டை ஆலாவின் அலகு ஆரஞ்சு நிறத்திலும் வேறுபட்டிருக்கும். இந்த இரண்டில், பெரிய வகை ஆலா தலையில் கிரீடம் வைத்ததுபோல சிறகுகளைச் சிலுப்பிக்கொண்டு இருந்தது. இறக்கைகளை மேலும் கீழும் ஒரே சீராக அசைத்து கத்திக்கொண்டே, அவை ஒன்றை ஒன்று விரட்டிக்கொண்டிருந்தன. நேரம் ஆக ஆக ஆலாக்களின் ஆர்ப்பாட்டம் அடங்கவில்லை, அதிகரித்துக்கொண்டேதான் போனது.
பூநாரையின் நடனம்: இளஞ்சிவப்பு நிறம் கொண்ட பூநாரைகள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தன. யாரும் எதிர்பாராதபடி ஒரு பூநாரை தன்னுடைய கூட்டத்திலிருந்து தனியே வந்து ஓர் அழகான நடனத்தை ஆடத் தொடங்கியது. நான் இதுவரை கண்டிராத ஒரு நடனம் - எங்கோ கேட்கும் இசைக்கு ஆடுவதுபோல, தன் கால்களால் தண்ணீரில் தாளமிட்டுக்கொண்டே அலகை தண்ணீரில் வைத்தபடி வட்டமடித்தது.
“எதற்காக இப்படி ஒரு நடனம்?” என்று என் நண்பனிடம் விசாரித்தேன். அந்த நீரில் மிதவை நுண்ணுயிரிகள் (zooplanktons) அதிகமாக இருக்கும். அங்குள்ள நீர்ப்பரப்பை, வட்டமிட்டபடி காலால் தட்டிக் கலங்கடித்து, மேலெழும்பும் நுண்ணுயிரிகளைத் தமது அலகால் வடிகட்டி உண்ணும்.
ஒரு பூநாரை இப்படிச் செய்தவுடன் அதைப் பின்தொடர்ந்து மற்ற பூநாரைகளும் பசிக்கு ஏற்ற ஆட்டம் இது என்பதை உணர்ந்து வட்டமிட்டு ஆடி இரையைத் தேடத் தொடங்கின. இதைக் கண்டு வியந்து என்னை அறியாமல் என் கால்களும் அவற்றைப் போலவே ஆடின.
சிணுங்கும் உள்ளான்: வெகு தூரத்தில் ஒரு பறவை தனித்துவமான உடல் அமைப்பில் மணல் நிறத்தில், மீன்வலைப் பின்னும் ஊசி சிறிது வளைந்ததைப் போன்ற அலகுடன், குச்சிப் போன்ற கால்களையும் கொண்டிருந்தது. சேற்றுக்குள் தனது நீண்ட அலகை விட்டுவிட்டு எடுத்துக்கொண்டிருந்தது. அதுதான் பெரிய கோட்டான் அல்லது சிணுங்கும் உள்ளான் (Eurasian Curlew). அது என்ன செய்கிறது என்று ஆர்வம் அதிகரித்த நிலையில் இருகண்நோக்கியின் (binoculars) உதவியுடன் ரசித்துக்கொண்டிருந்தேன்.
சதுப்புநிலச் சேற்றில் தன் அலகை அழகாக உள்ளே விட்டு புழு பூச்சிகளை உண்ணத் தொடங்கியது. அப்போது ஓர் அழகிய நிகழ்வு. நண்டு ஒன்று துறுதுறுவென்று ஒடியதைக் கண்ட அந்தப் பறவை, சிறிதும் தாமதிக்காமல் தனது அலகில் அதை எடுத்து ஆகாயத்தில் வீசி எறிந்தது. பின்னர் தனது நீண்ட அலகால் லாவகமாக அதைப் பிடித்து உண்ணத் தொடங்கியது. நேரில் கண்ட இந்தக் கட்சியைப்புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தேன்.
பொதுவாக முக்கியமான நிகழ்வுகளில் தலைவர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பார்கள். ஆனால், அழகிய உள்ளூர் பறவைகளையும், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வலசை வரும் பறவைகளையும் நாம் அப்படியா வரவேற்கிறோம்? கழிமுகம், சதுப்பு நிலத்தைப் போன்ற இயற்கையான வாழிடங்களைச் சிறிது சிறிதாக அழித்து செயற்கையான வெள்ளைக் கம்பளம் போன்ற உப்பளங்களே பல இடங்களில் எஞ்சியுள்ளன.
இதைப் பற்றியெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தபோதே, வெயில் உச்சிக்கு ஏறியது. நாங்களும் அங்கிருந்த பறவைகளை விட்டுப் பிரிய மனமில்லாமலேயே புறப்பட்டோம்.
தமிழில் இயற்கையைப் பற்றி எழுத விருப்பம் உள்ளவர்கள் இப்படிவத்தைப் பூர்த்தி செய்யவும் - bit.ly/naturewriters
- Surya@wcsindia.org