முதல் நண்பன் 12: ‘செங்கோட்டை’ சரித்திரம்!

முதல் நண்பன் 12: ‘செங்கோட்டை’ சரித்திரம்!
Updated on
1 min read

மிழகத்தின் நாட்டு நாய் இனங்களில் அழிந்து போனவை பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது, செங்கோட்டை நாய்கள்தான். கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் அலங்கு மற்றும் செங்கோட்டை நாய்கள் பற்றிய அறிமுகம் நம்மை வந்தடைந்தது.

செங்கோட்டை நாய் என்ற இனத்தை செங்கோட்டைப் பகுதி மக்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அலங்கு நாய்கள்போல இதுவும் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று முற்றாகத் தவிர்த்துவிடுவதற்கு இல்லை!

ஏனென்றால் தமிழகம் முழுவதும் உள்ள அத்தனை நாய் இனங்களுக்குமான பொதுவான தன்மை, ஏதோ ஒரு ஊரை மையமிட்டுத்தான் இனத்தின் பெயர் சூட்டப்பட்டிருக்கும். சில நேரம் அதன் பரவல், அது கடந்து வந்த ஊர்களின் மூலம் அடைந்த பிரபலம் காரணமாக ஒரே இனத்துக்குப் பல பெயர்களைக் கொண்டு அழைப்பதும் உண்டு. அப்படித்தான் இந்த செங்கோட்டை நாயும்.

அலங்கைப் போலவே செங்கோட்டை நாய் பற்றிய அறிமுகத்தையும் டயிள்யூ.வி.சோமன் என்பவர், ‘தி இந்தியன் டாக்ஸ்’ என்ற புத்தகத்தின் மூலம் முதன்முதலில் தந்தார். அதன் அடிப்படையில், பின்னர் டெஸ்மாண்ட் மோரிஸும் பதிவுசெய்தார்.

அந்த குறிப்புகள் இப்படிச் செல்கின்றன:

‘இந்த இனம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்பகுதிகளில் பெரிய வேட்டைகளை நிகழ்த்தப் பயன்படுத்தப்படுகிறது. அந்தப் பகுதி மக்கள், புலியைக்கூட இவற்றின் துணையுடன் வேட்டையாடுகின்றனர். மேலும் இவை கோம்பை நாயின் தூரத்து உறவினராக இருக்கலாம்’.

சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்புவரையில், அந்தப் பகுதிகளில் சாம்பல் நாய்களும் நாட்டு நாய்களும்தான் பெரிய வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டன.

சாம்பல் நாய்கள், வேறு நிறங்களான செவலை, புலிசாரையிலும் வரும். அதாவது, பன்றி வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட பொலிகர் ஹவுண்ட் நாய்கள், சுமார் 200 ஆண்டுகளாகவே மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டன.

அப்படி, திருநெல்வேலி மாவட்ட மலைத் தொடர்களில் பொலிகர் ஹவுண்ட்களுடன் நடத்திய கரடி வேட்டையைப் பற்றி ‘ஆன் இந்தியன் ஓலியோ’ என்ற புத்தகத்தில் லெஃப்டினென்ட் ஜெனரல் இ.எஃப்.பர்டன் என்பவர் பதிவுசெய்துள்ளார்.

இதனோடு தொடர்புடைய நாய்களை சோமன், ‘செங்கோட்டை நாய்’ என்று பதிவு செய்திருக்க வேண்டும். அந்தப் பழைய நாய்களை ஒத்த ஓவியம், தாமஸ் அலெக்ஸ்சாண்டர் எடுத்த ஒளிப்படம் மூலம் காணக் கிடைத்தது.

கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் கோயிலில் தஞ்சை நாயக்கர் காலத்து ஓவியம் ஒன்று உள்ளது. அதில், சிவன், புலையர் உருவெடுத்து கைக்கம்பில் முயல் கோத்து, நாய்களுடன் தோற்றமளிக்கும்படி வரையப்பட்டுள்ளது. அதனுடைய காலம், நாய்களின் அமைப்பு அடிப்படையில் அந்த ஓவியத்தைப் பார்க்கும்போது, அன்றைய சாம்பல் நாய் தொடங்கி செங்கோட்டை நாய்வரை வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட இனத்தின் பொது மூதாதை இனம் அது என்பது போலத் தோற்றமளிக்கிறது.

(அடுத்த வாரம்: தமிழர் மரபில் நாய்கள்!)

கட்டுரையாளர், நாட்டு நாய்கள் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: sivarichheart@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in