

இ
ன்றைய திணையியல் என்கிற அறிவியல் துறை, காடுகளை பல்வேறு வகைகளாகப் பிரிக்கிறது. வெப்பமண்டலக் காடுகள், மழைக் காடுகள், பருவக் காடுகள், முட்காடுகள் என்று பல வகைகளாகப் பிரித்துள்ளனர். இத்தகைய பிரிவுகள் காடுகளின் அமைவிடத்தைப் பொருத்து அழைக்கப்படுகின்றன.
பருவக் காடுகள் கோடையில் இலைகளை உதிர்த்துவிட்டு மழைக்காலத்தில் துளிர்க்கின்றன. இதனால் மண் வளம் பெருகுகிறது. இத்தகைய தன்மை கொண்ட காடுகளை இலையுதிர்க் காடுகள் என்பார்கள். ஆனால் இந்தப் பெயர் வடகோளத்தில் அமைந்துள்ள காடுகளையே குறிக்கும். தென்கோளப் பகுதியில் அமைந்துள்ள காடுகளை மழைக் காடுகள் என்றோ, ஈரக் காடுகள் என்றோதான் அறிவியலாளர்கள் குறிக்கின்றனர். இந்தப் பெயரை முதலில் வழங்கியவர் ஏ.எஃப்.டபிள்யு. சிம்பர் என்ற ஜெர்மானிய அறிஞர்.
வெப்பமண்டல மழைக் காடுகளின் ஒரு பிரிவை சோலைக் காடுகள் என்று குறிக்கின்றனர். தமிழகத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளைச் சோலைக் காடுகள் என்று அறிவியலாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இந்தச் சோலைக் காடுகள் தமக்கென தனியான சிறப்புத் தன்மைகளைக் கொண்டு இயங்குகின்றன. இவை அடுக்கு முறையில் அமைந்துள்ளன. இதைத்தான் கபிலர் கலித்தொகையில் பதிவுசெய்துள்ளார்.
உயர்ந்த மரம், அதற்கடுத்தாற்போல் குட்டை மரங்கள், அதற்கடுத்தாற்போல் புதர்ச் செடிகள், அடுத்தாக செடியினங்கள், தரையை மூடி இருக்கும் மூடாக்குப் பயிர்கள், பின்னர் தரைக்குள் உள்ள கிழங்கு வகைள், நீண்ட மரத்தைத் தழுவி இருக்கும் கொடியினங்கள் என்று ஏழு வகைப் பயிரினங்கள் இங்கே வளர்கின்றன. இதை இப்போது ‘கானகத் தோட்டம்’ என்று அழைக்கின்றனர். இந்தத் தொழில்நுட்பம் தற்போது உலகமெங்கும் பரவிவருகிறது.
இங்குள்ள மரங்கள் பசுமை மாறா தன்மை கொண்டவை. எனவே, எப்போதும் மழையை விரைந்து அழைக்கும் தன்மை கொண்டவை. இவை நடத்தும் நீராவிப் போக்கினால் மேகங்கள் ஈர்க்கப்படுவதும் உண்டு. இங்கே பெருந்தொகையான உயிரினங்கள் காணப்படும். இந்தப் பன்மயத் தன்மையை உயிரினப் பன்மை என்று கூறுகிறோம்.
சோலைக் காடுகளின் மற்றொரு சிறப்பு அவற்றின் மண்வளப் பாதுகாப்பு. இவை எப்போதும் தரையை மூடியிருக்கும், வெயில் அதிகம் ஊடுருவாமல் தடுக்கும். இதனால் எண்ணற்ற நுண்ணுயிர்கள் மண்ணில் பெருகி வளரும். இதனால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு நீர்ப்பிடிப்பு அதிகரிக்கும். இதனால் ஒரு வலிமையான உணவுத் தொடரி உருவாகும்.
இத்தகைய முறையில் ஒரு பண்ணையை உருவாக்கும்போது நாளும் ஒரு வருமானம், கிழமைக்கு ஒரு வருமானம், மாதம் ஒரு வருமானம், ஆண்டுக்கு ஒரு வருமானம் என்று தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும். காலப்போக்கில் பண்ணையாளனின் உழைப்பு குறைந்துகொண்டே வரும். இத்தகைய பண்ணை வடிவமைப்புக்கு ‘நிலைபேற்றுச் சாகுபடி’ என்று பெயர்.
(அடுத்த வாரம்: அரணான அணிநிழற்காடு)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com